Monday, January 9, 2012

சற்குருவும் SANTA க்ளாசும்....... 1

"அக்கா... மொபைல் போன் எல்லாம் எதாவது இருந்தா கொடுத்துடுங்க..." என்று பாட்டி வைத்திருக்கும் சுருக்கு பை போன்ற ஒன்றை என் முன்னால் நீட்டினார் ஈஷா சுவாமி. இன்னும் அரை மணி நேரம் தான்....! என்னை போல் உலகில் சஞ்சரிக்கும் அனைத்து உயிரையும் உருக்கி அச்சில் வார்த்தார் போன்ற பிரமாண்ட இருப்பு. ஒவ்வொறு நொடியும் மனம் தகதகத்து கொண்டிருந்தது அந்த பேரொளியை காண.  அந்த ஆசிரமத்தின் குடிலை சுற்றியிருந்த அத்தனை மரங்களும் இனி என்னாளும் அவர் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஏங்கி.... ஓங்கி ஒற்றை காலில் தவம் புரிவது போன்ற அழந்த மெளனத்தில் திளைத்திருந்தது. இலைகள், கிளைகள் என அதன் வேர் வரை பரவி கிடந்த அந்த ஏக்க மெளனத்தை அவ்வப்போது தலை வருடி ஆசுவாசப்படுத்தின வெள்ளிங்கிரி மலைக்காற்று.

ஓங்கரித்த மெளனத்தினிடையே ஓர் ஒற்றை மரத்தின் நிழலின் கீழ் அகண்டு கிடந்தது பாறை ஒன்று. அதில் அமர்ந்த சில மணித்துளிகளெல்லாம்  அப்பாறையின் ஏற்ற இறக்கங்கள் சில அந்தரங்க பாகங்களை மெல்லிதாய் பதம் பார்த்தன. செருப்புகள் அற்ற என் கால்களை பார்க்க சற்றே வித்தியசமாய் இருந்தது. கூதிர் காலத்தின் அடையாளங்கள் என் கால்களின் எல்லைதோரும் பாள் பாளாய் வெடித்து திரிந்திருந்த சாம்பல் நிற கோட்டினில் பயணம் செய்தது. மண்ணில் மட்டுமே பதிந்து வந்த காலடி சுவடுகள் இன்று வித்தியாசமாய் இலை சருகுகளின் மீது படர்ந்திருந்ததை பார்க்கையில் வித்தியாசமாக இருந்தது.

இதற்கு முன்பு சற்குருவை தீர்த்தகுண்டம் முன்பாக தரிஷன நேரத்தில் பார்த்தது... பின்பொரு முறை பத்திரிக்கையாளர் என்ற பெயரில்..( அழுத்தி அடிக்கோடு இட வேண்டிய வார்த்தைகள்...பத்திரிக்கையாளர் "என்ற பெயரில்" ) சற்குருவை பார்க்க திருட்டு பாஸ் வாங்கி உள்ளே நுழைந்திருக்கிறேன்.  ஆனால் இரண்டு சந்தர்பங்களிலும் அவர் என்னை பார்க்காதது போல் எனக்குள் ஒரு மாயை. நினைவில் திரண்ட வரை சரியாக இரண்டு முறை அவர் கண்கள் என் கண்களை சந்தித்தன.

ஓராண்டுக்கு பின் அவரை தனியே சந்திக்கும் வாய்ப்பை ஏற்ப்பட்டுள்ளது. அவரை பார்த்தால் என்ன பேசலாம்... என்ன கேட்கலாம் என பல கேள்விகள் கண்களை உருத்தி வந்த தூசு துகள்களுடன் என் மனதையும் உருத்தியே வந்தது. தலையில் கட்டு.... பஞ்சாபி ஸ்டைலில் ஒரு கச்சை பைஜாமா... அனைத்தும் காவியில். கையில் லேப்டாப் என நவீனமும் சங்கமும் கலந்த ஒரு பாவனையில் நுழைந்தார் ஒரு சுவாமி. அருகில் நெருங்க நெருங்க விபுதி வாசம்... அதையும் கடந்து வேறுறொரு வாசம் எனக்கு படைத்தல் தொழிலானால் அந்த வாசத்திற்க்கு ஒரு பூவை படைத்திருப்பேன். இந்த இறைவனின் சந்நிதியில் அது வெறும் வாசமாக மட்டுமே இருந்தது. தூரத்தில் இருந்தும் மிக அழுத்தமாக தெரிந்தது அவர் காதுகளின் ஈடுக்களில் ஒத்தியிருந்த விபுதிகீற்றுக்கள்.

என்ன.. சற்குரு அப்பாய்ன்மென்ட்டா என்றார்.....? புன்னகைத்தவாறே.

சற்குருவை சந்திக்க வந்திருந்த எங்கள் குழு,  ஆமாம் என்று ஆமோதித்தோம். குழு என்ற வார்த்தையை கழித்து பார்த்தால் நான் வெறுமனே அமர்ந்திருந்ததேன். அங்கு நடக்கும் புன்னகை பரிமாறல்களுக்கும், உபசரிப்புகளுக்கும் இடையே ஒரு பார்வையாளராய் நான். இந்த முறை மிக சிறிய குழு மூன்று பேர் தான் இருந்திருப்போம். அதிலும் மூன்றாம் நபர் சற்று நேரம் கழித்து எங்களோடு சேர்ந்து கொள்வதாய் பேச்சு. ஆக இரண்டே பேர்.

இந்த முறை சற்குரு என்னை பார்த்தே ஆக வேண்டும். ஒரு வார்த்தை ஏனும் என்னிடம் பேசியே ஆக வேண்டும். அவர் தப்பிக்க வேறு வழியே இல்லை என்ற உறுதி தென் கைலாயத்தை போல் மிக உறுதியாய் வளர்ந்திருந்தது. இறைவனை மிக பக்தியோடு பிரார்த்திக்கிற பக்தர்கள், எதோவொரு வேண்டுதலை செலுத்துகிற போது காற்றில் சாமி தலையில் இருந்து தவறி விழுகிற பூ, வேறுவழியே இல்லாமல் கனவில் நாம் உருவாக்குகிற சாமி பிம்பம் என இவை அனைத்தும் எதோவொரு வகையில் நாமும் கடவுளுக்கு மிக நெருங்கிய உறவு என்பது போன்ற மாயை ஏற்படுத்தி விடுகின்றன. அதே நிலையில் இப்போது நானும். என்னற்ற முறை நடந்த நல்ல நிகழ்வுகளுக்கெல்லாம் சற்க்குருதான் காரணம் என்றும்....  பல முறை நானாகவே உருவாக்கி கொண்ட வருத்தங்களுக்கும் அவர் தான் காரணம் என்றும்... எதற்க்கும் காரணம் இல்லாத அவரை காரணப்படுத்தியிருக்கிறேன். மொத்தத்தில் சூட்சும வடிவில் நெருங்கிக்கிடக்கிறது எங்கள் உறவு என்பது என் எண்ணம். எனக்கும் அவருக்கும் நடக்கவிருக்கும் உரையாடல்கள் நிச்சயம் என்னோடு வ்ந்திருப்பவர்களெல்லாம் பொறாமையை அல்லது குறைந்தபட்ச அங்கலாய்ப்பை ஏற்படுத்த கூடும் என்பதை எண்ணி வருத்தமாகவும் இருந்தது.

அதே கட்டு, அதே கச்சை, அதே காவி ஆனால் இந்த முறை வந்த சுவாமி மாத்திரம் வேறு. உள்ளே வாங்க என்று எங்களை அழைத்தார்... ஏரத்தாள தரையிலிருந்து ஒரு மூன்று அங்குலம் மட்டுமே உயர்ந்திருந்த பாறையிலிருந்து எழும்ப எனக்கு சிரமமாகவே இருந்தது. ஷம்போ என்று பெறுமூச்சு வாங்கி எழுகையில்... இது கூட எங்கள் சூட்சும உறவின் ரகசிய பாஷையாகவே மனம் கதகதத்தது.

ஒவ்வொறு சருகுகளையும் அதை கடந்திருந்த ஒவ்வொறு கற்களையும் எண்ணி எண்ணி மிக கவனத்துடன் கடந்தேன்... இதில் எத்தனை கற்கள் அகலிகையாக மோட்சம் பெற காத்திருக்கின்றனவோ... என்ற எண்ணம். அப்படி சாபம் வாங்கி இங்கு கல்லாகவோ, சருகாகவோ இருக்கும் எவைகளும் என்னுடன் அதன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளலாம். நானும் அவரும் மிக நெருக்கம் உங்கள் சாப விபோட்சனங்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்... யார் வேண்டுமானலும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற  அறிக்கையை காதின் செவிப்பறையை தாண்டி அடிக்கும் இதயத்துடிப்பின் சப்தத்தையையும் பொருட்படுத்தாமல் அந்த சருகுகளிடமும் கற்களிடமும் தெரிவுப்படுத்தினேன்.

நடந்து கடக்க வேண்டிய தூரம் முடிந்த போது தான் .... "அடடா நம் அறிக்கையில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என சொல்ல மறந்துவிட்டோமே என்ற எண்ணம். இப்போது மனதை விடவும் கண்கள் அதன் உச்சத்தில் செயல்பட துவங்கியிருந்தது. கண்களின் உட்சபட்ச செய்லாற்றலை பயன்படுத்தியும் நான்கு தூண்களை தாண்டி எதுவும் தெரியவில்லை.

அந்தரங்கமான பாகங்களில் சில நேரம் கண்களையும் சேர்த்துவிடலாம். இத்தனை நேரம் உடலை அசைக்காமல், யாருக்கும் தெரியாமல் எம்பி எம்பி தோற்றுப்போன என் பார்வையை உணர்ந்து இப்போது எம்ப ஆரம்பித்தது என் குதிக்கால். எதற்க்கு இத்தனை மென்மை. எதற்க்கு இத்தனை நிதானம். எதற்க்கு இத்தனை நிசப்தம். ஒரு பெண் இத்தனை மெதுவாக நடந்தால் நாணம் என்று சொல்லிவிடலாம். ஆனால் காட்டில் நகங்களை மெல்ல பதித்து அசைவுகளில் மட்டுமே நகர்ந்து செல்லும் சிங்கத்தை... அதுவும் இந்த ஆறடி சிங்கத்தை ???. நடையின் கம்பீரம் தாங்கி... அந்த இடக்காலில் கனத்து கிடக்கும் அந்த செம்பு தண்டையின் முறுக்கு. முகம் முழுவதையும் மறைத்து கிடக்கும் அந்த வெண் இறகுகளின் உச்சியில் கூர்ந்திருக்கும் பார்வை... இறகுகளின் மத்தியில் முரண்டு நிற்க்கும் மீசை. இன்று தலைபாகை இல்லை. பைஜாமா குர்தாவில் கைகள் நுழைத்து மெல்ல அசைய அசைய... இப்போது என் இதயத்துடிப்பை என் அருகில் இருந்தவருக்கு கூட கேட்டிருக்கலாம்  என்று பதற்றமானது மனம். ஆம்!!  என்னருகில் இருந்தவர் எந்த சம்மந்தமும் இன்றி தீடிரென  என்னை திரும்பி பார்த்தார். வந்ததும் என் ஜாதகத்தையே சொல்லி, என் வருங்காலம் பிரமாதம் என சொல்ல போகிறார். நேற்று இரவு தியானம் செய்த போது கூட எதோ என் காதுகளில் கிசுகிசுத்தாரே அதை இன்று உரக்க சொல்வாரோ... என எழும்பி அடங்கின பல கேள்விகள்.

அவர் உருவத்தை விடவும் மெளனமாக கர்ஜித்தது அவர் நமஸ்கரிக்க குவித்த கரங்கள். நான் எதிர்பார்த்து போலவே முதல் வலையிலேயே சிக்கின அவர் கண்கள். கண்களின் சந்திப்பிற்க்கு பிறகு பொங்கி பிரவாகம் எடுத்தது என் ரகசிய பெறுமை. திளைப்படங்கும் முன் அருகில் இருந்தவரிடம் என்னை காட்டி கேட்டார்.... "யாரிந்த அம்மா.....?"

தொடரும்......

1 comment:

  1. அடுத்து எப்பொழுது... என்னால் ரொம்ப நாள் தாங்கமுடியாது...
    சீக்கரமா post பண்ணுங்க..
    நான் அவர ஒரு தடவ தனியா பார்த்தேன்...
    அவர் என்ன பாது சிரிச்சார் நான் சிலையானேன்.
    நீங்க என்னோட நகலா? பலமுறை நம் எண்ண ஓட்டம் ஒரேமாதிரி இருக்கு.

    ReplyDelete