Sunday, October 30, 2011

குப்பை

அவர் சொன்னது  உண்மை தான். கடைகள் எல்லாம் மிக அருகில். நடந்து கூட செல்ல வேண்டாம். போன் செய்தால் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கே வந்து விடுகின்றன. இதற்கு முன்பு இத்தனை நீர் குழாய்களை கல்யாண மண்டபங்களில் "கை கழுவும்" இடம் என்ற பலகையின் கீழ் பார்த்திருக்கிறேன். இப்போது இந்தப் புதிய வீட்டில் திரும்பிய திசை எங்கும் நீர்க் குழாய்கள். இருபத்தி நான்கு மணி நேரமும் தண்ணீரும் மின்சாரமும் தடையில்லாமல் தான் இருக்கிறது. இந்த வீட்டிற்கு குடிபெயரும் முன் தரகர் சொன்னார், "ஸ்விமிங் பூல் இருக்கு, ஜிம் இருக்கு, டென்னிஸ் கோர்ட் இருக்கு". இன்னும் அவர் கூறிய அனைத்து "இருக்குகளும்" அவர் கூறிய வண்ணமே இருக்கின்றன. மனிதர்களைத் தவிர.

70 - 80 களில் வெளியான திரைப்படங்களின் கதாநாயகிகள், பித்தளை குடத்துடனும் மார்புக்கு மீது ஏற்றிக் கட்டிய பாவாடையுடனும் குளத்தில் குளிக்கும் அழகும் நளினமும்... இந்த உயர்ந்த கட்டிடங்களினிடையே ஏற்படுத்தப்பட்ட நீச்சல் குளத்தில், ஒன்று இரண்டு பாகங்கள் மட்டும் மறைக்கும் முயற்சியுடன் குளிக்கும் பெண்களிடம் நிச்சயம் இல்லை.

பெங்களூருக்கு கணவரோடு குடியேறுகையில் ஏறத்தாழ, என் பொருட்கள் அனைத்தையும் என்னோடு எடுத்து வந்தாகிவிட்டது. நான் உபயோகித்த பாதி கரைந்த சோப் உட்பட. அம்மா சொன்னால்," பெங்களூர்ல கிடைக்காததா இந்த கோயமுத்தூர்ல இருக்கு...மூட்டையா கட்டி கொண்டு போற? " அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கீரை விற்று திரும்பும் அத்தை தினமும் காலை 10 மணிக்கு வீட்டுக்கு வந்தால் விற்றது போக மீதி இருக்கும் கொத்தமல்லியையும் கருவேப்பிலையையும் அன்றைய சமையலுக்கு கொடுத்துவிட்டு பல மணிநேரங்கள் கழித்து தான்  போவாள். அவள் போன சில மணிநேரத்தில் எல்லாம், தோட்டத்தில் களை பறித்ததற்கான கூலி கேட்டு ரவிக்கை போடாத அந்த பாட்டி வரும். அதன் பின் அம்மா லோனுக்கு புடவை எடுத்த புடவைக்கார அண்ணா அன்றைய தின வசூலுக்கு வருவார். அப்பா மதிய உணவுக்கு வருவார். திண்ணையில் பக்கத்து வீட்டு அக்காக்களுடன் கழியும் சாயங்காலங்கள். இரவு தாத்தா பாட்டியின் வருகை. அம்மாவின் ஒரு நாள் வாழ்க்கையில் ஒராயிரம் முகங்கள் பல லட்சம் சம்பவங்கள். அவளுக்கு. பொருட்களின் மதிப்பு தெரிந்திருக்கவும், தெரிய வேண்டியதற்கான அவசியமும் இல்லை.

இங்கு என் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது சில "அப்பார்ட்மெண்ட் புறாக்கள்" தான். அவை வந்து சென்றதற்கான வருகை பதிவை படுக்கறையிலும், சமையலறையின் ஜன்னல்களிலும் காணலாம். அந்த இறகுகளை பத்திரமாக எடுத்து வைத்தால் அடுத்த முறை பாட்டி வரும் போது காது குடைய பயன்படுத்துவாள். என்னையும் என் கணவரையும் தவிற மனிதே நிழலே பட்டிராத இந்த வீட்டில் ஒரு பாட்டி கால் நீட்டி காது குடைவதே மிகப்பெரிய ஆடம்பரம் தான். எனக்கு அந்த தருணம் தான் வாழ்வின் கவிதைதனங்களில் ஒன்றாய் தெரிந்தது (கவிஞர்கள் நிச்சயம் என்னை மன்னிப்பார்கள்).


எனக்கிங்கு ஜன்னலின் திரைசீலையை நகர்த்துவதே  திருவிழாவாகத்தான் இருக்கிறது. கடிகார முட்கள் நகரும் சப்தத்தை இங்கு பகலில் கூட மிக துல்லியமாய் கேட்க முடிகிறது. அன்று கோவையில் படித்துவிட்டு மடித்து வைத்திருந்த ஆனந்த விகடனின் 34ஆம் பக்கத்தை இன்று பெங்களூரில் தொடர்கையில் நினைவுகள் மட்டுமே பக்கங்களாய் புரள்கின்றன. அங்கிருந்து எடுத்து வந்த மேஜை கடிகாரம், தலை மயிர் உலர்த்தும் இயந்திரம், முகம் துடைக்கும் துண்டு, பூஜை அறையில் உள்ள காமாட்சி விளக்கு என இன்னும் பலவும் இங்கு வெறும் பொருட்களாக இல்லை, அதனோடு தொடர்புடைய மனிதர்களையும் நினைவுகளையும் என் தனிமைக்குத் துணையாக ஆக்குகின்றன.

இங்கு வந்த ஆறு மாதங்களில் கடந்த வாரம் எனக்கொரு கொரியர் வந்தது. கொரியர் கார அண்ணாவை உள்ளே வாங்க என்ற அழைத்த முதல் பெங்களூர் வாசி நான் என்ற சான்றிதழோடு அந்த கொரியரையும் நீட்டினார்.  கவரின் மேலிருந்த பெயரை பார்த்து விட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். "ப்ளீஸ் மேடம்! கொரியர் ஆபிஸ் ரொம்ப தூரம் திரும்பவும் வர முடியாது பக்கத்து பிளாட்க்கு இதோட இரண்டு தடவ வந்துட்டேன். அவர் வீட்ல இல்லை. வந்தா கொடுத்துடுங்க என்றார்" சரியென்று கூறி அவர் சென்றதும் வழக்கம்போல் கதவை அடைத்தேன்.

இந்தக் கதவு எப்போதுமே இப்படித்தான். வீட்டின் வாசலை அடைப்பது என்பதை தாண்டி எனக்கும் இந்த உலகத்துக்குமான அத்தனையையும் ஒரு சேர அடைக்கிறது. மீண்டும் ஒரு முறை அந்த கவரை பார்த்த போது தான் பக்கத்து ப்ளாட்டில் வசிப்பவர் பெயர் கார்த்திக் என்று தெரிந்தது.

பக்கத்தில் ஓர் ஆண் இருக்க கூடும் என்று இதற்கு முன் நான் எண்ணியிருந்தது  சரியாய் போனதில் ஒரு சின்ன மகிழ்ச்சியும் கூட. மற்றும் எதிர்த்த ப்ளாட்டில் ஒரு குழந்தையிருப்பதும் அதற்கு அடுத்த ப்ளாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள் என்ற என் யூகம் கூட சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையும் ஒட்டி கொண்டது. இந்த யூகங்களுக்கு எல்லாம் காரணம் தினமும் நான் விரட்டியடிக்கும் வீட்டு குப்பைகள் தான். சரியாக காலை எட்டு மணிக்குள் அனைவரும் அவரவர் வீட்டு குப்பைகளை வாசல் முன்பு வைத்து விட வேண்டும் அதை குடியிருப்பின் பணியாளர்கள் 9 மணிக்குள் அகற்றிவிடுவார்கள்.


பெரும்பாலும் நான் எடுத்து சென்று வைப்பதற்குள் அனைவர் வீட்டு வாசலிலும் ஒன்று அல்லது இரண்டு பாலித்தீன் கவர்கள் இருக்கும். எப்போதும் பக்கத்து வீட்டு குப்பை பையில் சிகரேட் பாக்கெட்டுகளும், பீர் புட்டிகளும் நிரம்பி வழிந்ததே பக்கத்தில் ஒரு ஆண் இருப்பதாக எனக்கு தோன்ற காரணம். எதிர்த்த வீட்டில் எப்பொதும் மேகி பாக்கெட்டும், சாக்லேட்கவர்களும் தான். ஒரு முறை சக்கரம் உடைந்து போன கார் பொம்மையையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக நேற்று நிறைய கலர் காகிதங்களும் "ஹேப்பி பர்த்த்டே என்ற வாசகம் பொதிந்த தோப்பிகளும், கேக் பெட்டிகளும் குப்பை பையில் திமிறி கொண்டிருந்தது. ஆணோ பெண்ணோ தெரியவில்லை மொத்தத்தில் எதோ ஒரு குழந்தை. அந்த குழந்தைக்கு  நேற்று பிறந்த நாள் என்று ஆழகாய் கதை சொல்லும் குப்பைகள்.

  கசங்கிய பூக்கள், வீட்டிற்கே வந்துவிடும் பீசா பெட்டிகள், ஒடுங்கிய பழச்சாறு பாட்டில்கள் என்று வெளியே விரட்டப்பட்ட இத்தனையும் தான் என் நாளின் சுவரஸ்யத்தை கூட்டுகின்ற கதை சொல்லிகள்.

இன்று கதையின் திருப்பமாய் என் கற்பனை கதாப்பாத்திரத்திங்களில் ஒரு உருவத்தை பார்த்து விடலாம்.

கார்த்திக் வீட்டின் அழைப்பு மணியை மணிக்கொருமுறை அழுத்திகொண்டே இருந்தேன் ஆறாவது முறையாக கதவை திறந்தார் கார்த்திக். அலைபேசியில் யாருடனோ பேசிகொணிடிருந்த அவர் கண்களால் யார் என்ன என்பது போன்ற கேள்விகளாய் அவர் முகத்தை குறுக்கினார். எதுவும் பேசாமல் கவரை கொடுத்தேன். பார்த்தவர் கையை நெற்றியில் வைத்து சல்யூட் அடிப்பது போல் ஒரு பாவனையில் தொடர்ந்து அலைபேசியவாறே அவருடைய கதவை அடைத்து சென்றார். ஒரு வேலை என்னை கொரியர் கொடுக்க வந்த பெண் என்று நினைத்திருப்பாரோ.

எது எப்படியோ அந்த நபருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நாம் மனிதர்களிடேயே தான் இருக்கிறோமா என்று அவ்வப்போது உறக்கத்தில் பதறி எழுவேன். இனி நிம்மதியாக உறங்கலாம். நான் நிச்சயம் மனிதர்களோடு தான் வாழ்கிறேன். 

மனிதர்கள் அல்லாதது என்று நாம் வகைபடுத்தியிருக்கும்  அத்தனைக்கும் தான் அதனதன் மொழிகளில் புன்னகைக்கத் தெரியுமே.!!




Monday, August 29, 2011

அம்பாள் மகள்... - கனக தூரிகா

அப்படி ஆகியிருக்க வேண்டாம் தான். "கண் திருஷ்டி கழிஞ்சது" என்று பாட்டியும், பாட்டி வயது ஒத்ததுகளும், இந்த காலத்துல இதெல்லாம் சகஜம்.... பெரும்பாலும் ஒன்னு... இரண்டுக்கு அப்பறம் தான் நிக்குது, எங்க வீட்டுல கூட இப்படி நடந்ததுண்டு என்று வெறும் ஆறுதலாய் அடையாள அட்டை நீட்டி கொண்டும், உடல் தேருவதற்க்கு உபயோகப்படுமோ இல்லையோ நமக்காக மனிதர்களும்.... அவர்களின் அக்கறைகளும்.... சில ஆப்பிள்களாகவும், அரை கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில்களாகவும் வீட்டிற்க்கு வருவது மனதிற்க்கு சமாதனம். வீட்டிற்க்கு வெளியே இருக்க வேண்டிய மூன்று நாட்களில் நான் சாப்பிட்ட எச்சிலை வெளியே எறிகிற போது அம்மா மிக ஜாக்கிரதையாய் இருப்பாள். 

"இப்ப இந்த எச்சில நாயோ இல்ல மத்ததுகளோ சாப்பிட்ட உனக்கு தான் புள்ள வயிறு வலிக்கும்..." என்று நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது அம்மா சொன்னது இப்போது நியாபகம் வந்து தொலைக்கிறது. அவள் சொன்னபடி பார்த்தால் எப்படியும் ஒரு பத்து இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் என் எச்சிலை என்றாவது சாப்பிட்டிருக்க வேண்டும். அப்படியோரு வலி அடிவயிற்றில் வந்த பிறகு தான் இப்படியும் ஒரு பாகம் என்னோடு.... இத்தனை ஆண்டுகளாய் சேர்ந்தே இருந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.  இன்னும் சில நாட்களில் உயிரோடும்.... உடலோடும் பார்த்திருக்க வேண்டியதை வெறும் உதிரமாக பார்த்திருக்க வேண்டாம் தான்.

அது முடிந்து ஆறு மாதங்கள் இருக்கும்.
"இன்னிக்கு அவ சந்தான லட்சுமி கோலத்துல வர்றா... பார்க்காம தூங்கிடாதே. தேங்காய் பழமேல்லாம் முன்னாடியே வாங்கி வச்சுக்க" என்று கூறியபடியே என் நெற்றியில் நகக்கீறல்களோடு பதிந்து தாத்தா வைத்த திருநீறு.  எங்கு எப்போது அவள் பயணத்தை தொடங்கினாலும் என் வீடு வந்து சேர மணி நள்ளிரவு 3 க்கு மேலாகி போகும். எப்படியும் அவளை பார்த்து விட வேண்டும் என்ற தவிப்படங்க இத்தோடு இரண்டு முறை குளித்து மூன்று முறை முகமும் கழுவியாயிற்று. நானும் அப்பாவும் அவளை பார்த்து விட்டு உறங்குவதில் மிக உறுதியாகத்தான் இருந்தோம். 24 மணிநேர செய்தி தொலைகாட்சிகளின் அருமை அப்போது தான் புரிந்தது. அன்றைய தினத்தின் முதல் இரண்டு மணி நேரம் எதை போடுகிறானோ அதைத்தான் 24 மணி நேரமும் போடுகிறான் என்ற போதும்.. இது எட்டாவது முறை, முதல் வரியை கேட்டதும் முழு செய்தி தொகுப்பே நினைவில் திரளும் அளவிற்க்கு மனம் பழகிவிட்டது. பழகிவிட்ட பின் அது பழையது தான். பழையதுகள் சலிப்பையும் பின்பு தூக்கத்தையும் தந்தன. அடிக்கொருமுறை இரவில் விழிப்பு வர, இன்று வழக்கத்திற்க்கு மாராய் பல முறை தண்ணீரும் குடித்தாயிற்று. இறுதியாய் தொலைக்காட்சியில் தங்கத்தின் இன்றைய விலை என்று செய்தி ஓடி கொண்டிருந்ததாக நினைவு.....

பட...பட...பட... வென அதிர்ந்த சப்தத்தில் கண்விழித்தெழுகையில் மணி நள்ளிரவு 3.35. அது தாத்தா தான்...
 "எப்படியும் நீ தூங்கிருவேன்னு தெரியும்... அதான். அம்மா அடுத்த தெருவுல தான் நிக்குற. போய் முகம் கழுவி தேங்காய் பழத்தோட நில்லு" என்று சொல்லி போனார்.

அவர் கண்களில் இருந்து தூரம் தூரமாய் நகர,  உருமிஅடி பக்கம் பக்கமாய் என் காதுகளில் விழுந்தது. வெளியே தேங்காய் பழத்தோடு நானும் அப்பாவும் நின்றிருந்தோம். பக்கத்து வீட்டு கண்ணம்மா பாட்டியும் தேங்காய் தட்டுடன் நின்றிருந்தாள். என்னை பார்த்ததும்,  அந்த நள்ளிரவில் முன்னும் பின்னும் பார்த்தபடி வேலியோரமாய்  வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு

"ஏய்... செல்வி எப்ப வந்த...."

ரெண்டு வாரம் ஆச்சு கண்ணம்மா"

"ஆடிக்கு அம்மா வீட்டுக்கு வந்தியோ..."

"ஆமா.... இன்னிக்கு எங்க சாமி வருது கண்ணம்மா.... அதுக்கு பூஜை பண்ணதான் நிக்கிறோம்."

"அய்யோ தெரியாது பாருங்க.....20 வருஷமா இங்கதான் இருக்கேன். இங்கிருந்து எட்டு வீடு தள்ளி இருக்கா உங்க சாமி. அதென்ன உங்க சாமி... நம்ம சாமின்னு சொல்ல மாட்டியோ கல்யாணம் ஆகிட்டாளே இந்த பொட்ட புள்ளைகளுக்கு எல்லாம் வேற தான். உங்காத்தா தண்டுமாரிக்கு நான் கூட தான் நேத்து தாலி வரி கட்டியிருக்கேன்... என்னை உங்க ஜாதி சனத்தோட எத்துக்க மாட்டிகளோ"

"அப்படியேல்லாம் இல்ல கண்ணம்மா எதோ சொல்லுத்தவறிப் போச்சு...
இன்னிக்கு மாரியாத்தாக்கு சந்தான லட்சுமி கோலமாம். தாத்தா வந்து சொல்லி போனாரு"

"வரட்டும் வரட்டும் நல்ல வரட்டும்... இன்னிக்கு வீதில வாரா நாளைக்கு உன் வகுத்துல வருவா..."

கண்ணம்மா பேச பேச..... இரண்டு சிறுவர்கள் கையில் பெரும் குச்சியோடு வந்தனர்... எல்லா  வீட்டின் வாசலில் இருக்கும் கரண்ட், டெலிபோன், கேபிள் ஒயர்களையேல்லாம் தூக்கி முட்டு கொடுக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. எல்லா வருடமும் இவன்களுக்கு பின்னால் தான் அவள் வருவாள். இந்த வருடமும் அப்படித்தான்.  தேர்க்கால் மெல்ல அசைய அசைய முன்னும் பின்னும் கைகள் போல் வீசின... தேர் வண்டிக்கென்று அலங்கரிக்கப்படிருந்த மல்லிகை பூச்சரங்கள்.  கரண்ட் ஒயர்களை முட்டுகிற உயரம் இல்லை தான்.... சொல்லப்போனால் அது தேர் கூட இல்லை தான். இருந்தாலும் அந்த வளவளப்பான கும்மிருட்டில் குலைந்து போய், பூச்சரங்களோடு குலுங்கி குலுங்கி அவள் வந்த பேரழகில், அந்த இரண்டு சக்கர வண்டி தேராகவே ஆகிவிட்டிருந்தது.   என் நெற்றியின் நேர் எதிர்க்க அம்மனின் பாதம். இரண்டு வயது குழந்தையின் கால் அளவிலான முத்து கொலுசு துளிர்த்து கொண்டிருந்தது. கருநீல பட்டில்... பலத்த சிங்காரத்துடன் சிரித்த அவள் கையில் ஒரு பார்பி பொம்மை. அதற்க்கும் ஒரு பட்டு துணி போர்த்தி..... முள்ளை பூகோர்த்து அலங்கரித்தார்கள். அம்பாளுக்கும், அவள் குழந்தை பார்பிக்கும் சேர்த்தே தேங்காய் பழம் உடைத்தோம்.

எங்களை கடந்து சென்ற தேரின் பின் புறம்,  அபிநயம் பிடித்தபடி,  பல நூறு உயிர்களை ஒருங்க முறுக்கிய இருக்கத்தோடு நீண்டிருந்த அந்த கரும்ஜடையின் இறுதியில்  இக் வடிவில் முடிவுற்ற மூன்று குஞ்சங்கள் மனதை பிசைந்து போனது.. அந்த அசைவு கண்களில் இருந்து மறைந்து மறைந்து இப்பொது தொலைந்தே விட்டது. தேரின் விளக்கு அலங்காரத்திற்க்கு என்று கட்டை வண்டியில் ஏற்றியிருந்த ஜனரேட்டர்கள் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற ஒலியோடும் , ஒரு குழியில் ஏறி இறங்கிய அந்த தேரின் அசைவிலும், சட்டென்று அரைந்த காற்றிலும், முகத்தை தடவி சென்றன லில்லி பூச்சரங்களின் வாசத்தோடும், கண்களில் படர்ந்திருந்த நீல நிறத்தில் இருந்து அம்மனின் முகத்தை மீண்டும் ஒருமுறை மீட்டேடுத்து கொண்டிருந்தேன்.

அன்று இரவு முழுவதும் நீலம் தான். எதோ எதோ கனவுகள் வந்து மறைந்ததாய் நியாபகம் இருந்தும், நினைவில் இருந்து உருபி எடுக்க முடிந்ததென்னவோ நீலம் மட்டும் தான். இந்த தெருவோடு சேர்த்து மொத்தம் எழு தெருக்கள். அவள் எப்படியும் கோவில் சேர மணி அதிகாலை 6க்கு மேலாகி விடும். இந்த தெருவில் இருக்கும் வீடுகளை விட சிறியது தான், இங்கிருந்து 8 அல்லது 9 வீடுகள் தள்ளித்தான் இருக்கிறது அவள் கோவில்.  மீண்டும் ஒரு முறை அந்த நீலத்தில் நீந்த ஆசையாகவே இருந்தது.. அதிகாலை குளித்தெழுந்து கோவிலுக்குள் நுழைகையில்... நேற்று இரவு உலா வந்த சந்தான லட்சுமி தேரோடு கோவிலின் முகப்பில் நிறுத்தப்படிருந்தால். நேற்றிருந்த நகைகள், ஆபரணங்கள், குறிப்பாக அந்த ஜடை குஞ்சம்  எதுவும் இல்லை... கருநீல புடவையில் அப்பியிருந்த அந்த நீலமும் அவள் கையில் இருந்த பார்பியின் சிரிப்பும் இன்னும் பசுமையாய் இருந்தது. பூக்கள் மட்டும் தான் தங்களின் நிறத்தை வாடியது போல் மாற்றிக்கொண்டிருந்தன.

அந்த கோவிலின் பூசாரி அண்ணா பத்திர்க்கையாளர் ஒருவரை அழைத்து வந்திருந்தார்.

"அடி வெள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்... பக்தர்கள் குவிந்தனர்.." ன்னு ஆன்மீகம் பகுதியல போட்டுடலாமுங்க. ஏம்மா நீங்களும் அப்படி கூட்டத்தோட சேர்ந்தாப்பல நில்லுங்க" என்று ஏற்கனவே பக்கத்து வீடுகளில் சொல்லி வைத்து கூட்டி வந்திருந்த பெண்களோடு என்னையும் நிறுத்தினார், பத்திரிக்கை நிருபர்.

ஆடி வெள்ளி துவங்கியதிலிருந்தே ஒவ்வொறு வெள்ளியும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தான், ஒரு வாரம் தானியம், பழங்கள், காய் கறிகள், வளையல் என்று நீண்ட பட்டியலில் இன்று ஆடியின் கடைசியின் வெள்ளி. அம்மன் கருவரையில் அவளுக்கு இன்று "ரூபாய் நோட்டுகளில்" அலங்காரம் செய்திருதார் பூசாரி. நேற்று சந்தான லட்சுமி கழுத்தில் இருந்த அதே நகைகள்,  அதே ஜடை பில்லை, உச்சி கொண்டை. புகைப்படம் எடுத்து நிருபர் சென்ற பின், பெண்கள் வரிசையில் நின்றிருந்த வள்ளி அக்களிடம்

"சாய்ந்தரம் வரை ஒன்னு ரெண்டு பேர் கோவிலுக்கு வந்துக்கிட்டு தான் இருப்பாங்க.... இன்னக்கி பொழுது சாஞ்ச அப்புறமா நகைகளையெல்லாம் கழட்டி கொடுத்திடறேன். ரூபாய் தாள்கள் எல்லாம் மஞ்ச கயிறல கோர்த்திருக்கு... பக்குவமா எடுத்து தாரேன் நாளை வர பொருத்துக்குங்க. எல்லாரும் எதை எதையோ வேண்டி தான் அம்மாகிட்ட வாராங்க. அவளுக்காக உங்க கிட்ட நான் கேட்கிறேன் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க" என்று சொல்லி இன்னும் இரண்டு தொன்னை நிரம்ப பிரசாதம் அள்ளி வள்ளி அக்கா கையில் பூசாரியண்ணா கொடுக்கவும் சர்க்கரை பொங்கலோடு சேர்ந்தே வழிந்தது வள்ளி அக்காவின் முகம். அம்மனோடு சேர்த்து மற்ற அனைத்தையும்  தரிசித்த நிறைவோடும் தவிப்போடும் வெளியே வருகையில்,

சந்தான லட்சுமியின் பார்பி பொம்மையை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்தாள் வள்ளியக்காளின் பேத்தி!!

Monday, July 11, 2011

நான் போய் வருகிறேன்.... இல்லை என்னை வழியனுப்பிவிட்டீர்கள் வலுகட்டயாமாய். எனக்கும் உங்களுக்கும் இனி என்ன உறவு. என் நியாபகமாய் உங்களிடம் இருப்பவற்றை ஓப்படைக்க நான் கொடுத்த கெடுவும் முடிந்து விட்டது. உங்கள் நியாபகமாய் என்னிடம் இருப்பதெல்லாம் வெறும் நினைவுகள் மட்டும் தான். உங்களால் மட்டும் என் வட்ட முகத்தையும் அதை சுற்றி சுற்றி வந்த உங்கள் கால்களையும் மறந்து விட முடியுமா என்ன? உங்கள் குடும்பத்தின் மூத்தவர்களை கேட்டு பாருங்கள்...

நான் இல்லாமல் எந்த மங்கலகரமான நிகழ்வுகளும் வீட்டில் நடந்ததே இல்லை.... தங்கைக்கோ, மகளுக்கோ ஏன் தாய்க்கே கூட திருமாங்கல்யத்தோடு சேர்த்து என்னை தான் சீராய் கொடுத்தார்கள். அன்று வருமையில் சூம்பி போனா அம்மாவின் முலைகளுக்கு பதிலாய், எப்படியோ என்னை தான் திரட்டி அழுத குழந்தையின் வாயை இனிப்பால் அடைத்தார்கள். நான் இல்லாமல் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அழுது அடம் பிடித்த போது பெருமையாக இருந்தது.  என்னை மதித்தவர்களும், துதித்தவர்களும் இப்பொது பெரும்பாலும் உயிரோடு இல்லை. உயிரோடு இருக்கும் உங்கள் யாரிடமும் உயிர்ப்பு இல்லை.





கணவனுக்கு ஈடாய் என்னை முந்தானையில் முடிகையில் அந்த அழுக்கு வாசத்தில் எத்தனை ஒய்யாரமாய் அமர்ந்திருந்தேன். வியர்வை வாசம் பார்க்காமல் நான் யாரிடமும் தங்குவதேயில்லை.   அன்று பெல் பாட்டம் ஊரையல்லாம் விசிறினாலும்... சட்டையின் நெஞ்சோரமாய் நான் இருந்தால் மீசையின் விரைப்பே தனிதான்.   நான் பார்க்காத கரங்களும் இல்லை. நான் போகாத பயணமும் இல்லை... ஒரு நாளைக்கு நூறு பேரிடம் கூட கை மாறியிருக்கிறேன். என்னை பெற நீங்களும்,  உங்களை தக்கவைக்க நானும்... உழைப்பாலே கைகள் குழுக்கினோம். என் காலத்தில் என்னை எமாற்றியவனும் இல்லை நான் ஏமாந்ததும் இல்லை. என்னால் இயன்ற வரை பசி தீர்த்திருக்கிறேன். தர்மத்தின் தலைவன் நான்! என் கடைசி காலங்களில் தானங்களுக்கும் தர்மங்களுக்கும் மட்டுமே என்னை பயன் படுத்தினீர்கள். மகிழ்ச்சி.

உங்களுக்காக உழைத்தவள் கேட்கிறேன்.
உங்கள் சுயநலத்திற்காக என்னை அழிக்கும் நல்லவர்களே! உங்களை உயர்த்தவே படைக்கபட்ட ஜென்மம் நாங்கள். என் இனக் குழந்தைகள் பாவம்...இனி அவர்களை பார்த்து கொள்ள நான் இருக்க மாட்டேன். உங்களை உயர்த்த எங்கள் சுயத்தை இனியும் குறைத்து கொள்ள முடியாது. உங்கள் துரோகத்திற்க்கும் வஞ்சத்திற்க்கும் எங்களை தானே தலைப்பு செய்திகளாக்கி ஆனந்த படுகிறீர்கள். அன்று எதோ ஒரு மளிகை சரக்கு ரொப்பிய துருப்பிடித்த டப்பியில் இரும்பு துகள்களோடு இருந்த சுகம்...... இன்று உங்கள் குளிரூட்டப்பட்ட அறையிலும். கடவு சொல்லுக்கு அடிமையாய் போன இயந்திரத்திலும். எங்கள் மீது கருப்பு சாயம் பூசி வெளிநாடுகளில் சிறை வைப்பதிலும். சத்தியமாய் இல்லை.

என் வயது ஒத்தவர்களெல்லாம் மகன், மகள், பேரன் பெயர்த்தி என குடும்பமாக வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். அதுவும் இல்லாதவர்களுக்கு முதியோர் இல்லமாவது உண்டு. என்னை பத்திரபடுத்தவும் ஆழில்லை அப்படியே வைத்திருந்த ஒரு சிலரும் என்னை திரும்ப கொடுத்துவிட்டார்கள்.  இனி உங்கள் பணம் எனும் அகராதியில் இருந்து நீக்கிவிடுங்கள் என் பெயரை. பணவீக்கம் துவங்கிய நாள் முதலே என் செளந்தர்யத்தை நான் இழந்து விட்டேன்.  அழிந்து போன இனங்களின் வரிசையில் இனி என் பெயரும் சேர்க்கப்படும். என்னால் இனி காலணாவிற்க்கும் லாபம் இல்லை. உங்களிடம் நான் பேசியதை மறக்காமல் என் நண்பர்களான உங்கள் தாத்தாக்களிடமும், பாட்டிக்களிடமும் சொல்லி விடுங்கள். எத்தனையோ கோடி விழிகளின் ஈரம் துடைத்தவள் நான். எனக்காக சொற்ப கண்ணீர் துளிகள் கூடவா இல்லாமல் போய் விடும். உங்கள் மூதாதயரின் புகைப்படங்களை அடுத்த தலைமுறைக்காக பத்திர படுத்தும் போது.... மறக்காமல் என்னையும் சேமித்து வையுங்கள்.

உங்கள் சுயசரிதத்தின் முக்கியமான கதை சொல்லி நான். என்னை அழிக்கும் நாள் இன்னும் குறிக்க படவில்லை. அப்படியே குறித்து விட்டாலும் அழிந்து விட மாட்டேன். என்னிலிருந்து என் தலைமுறை பிறந்து கொண்டேதான் இருக்கும். எந்த நிலையயிலும் எங்களுக்கு மரணம் இல்லை. உங்கள் கவிஞன் மட்டுமா தான் கடவுளா என்னா..? நானும் தான்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
25 பைசா நாணயம்