Wednesday, October 15, 2014

ராமன் எத்தனை ராமனடி

ஆயுத பூஜை வந்துவிட்டது. வீடெங்கும் பொரிக்கடலைகள் தெரித்துருளுகின்றன. எதிர்த்த வீட்டிலிருக்கும் சுந்தரியம்மா அவள் பெட்டிக்கடைக்கும், அவள் திருட்டுத்தனமாக விற்கும் பான்மசலாக்கள், அவளுக்கு அதிக வருமானமீட்டி தரும் சிகரேட், இன்னும் சில சீக்ரேட் வஸ்து என அனைத்திற்க்கும் பட்டையும் குங்குமும் சாத்திவிட்டாள். அவளுக்குள் ஒருகணம் பொங்கிவிட்ட அதீத பக்தியின் காரணமாய் அவள் சுவரையொட்டி அரசாங்கம் அமைத்திருந்த துருப்பிடித்த உப்பு தண்ணீர் குழாயிலும் "பளிச் பட்டையை" பார்க்க முடிந்தது.

எதித்த வீட்டு சுந்தரி கூட பூஜைய முடிச்சாச்சு. அவளுக்கு குடும்பமா குட்டியா? 70 வயசு கெழோம். இன்னும் எப்படி "சிக்குன்னு" இருக்கா பாருங்க! சரசரன்னு வேலைய முடிக்கிறா. காத்தாலயிருந்து இந்த  இரண்டு கிலோ செவ்வந்தி பூவ கட்டறீங்க. இன்னூம் முடிச்ச பாடில்ல. விருப்பமில்லன்னா கெளம்பவேண்டியதானே? ரோட்டுல போற ஒணான எடுத்து வேட்டில விட்டு குத்துது கொடையுது சொன்ன கதையா நீங்களா வாங்கி மடியில வச்சுகிட்டு கால்வலி கைவலின்னு சொல்லுவீங்க.

ஏன் இப்படி சிடுக்குன்னு பேசிடற தச்சு. அப்படியெல்லாம் இல்லை. விருப்பமில்லாமலா பூ கட்டுவேன். உங்க மாமனார் என்னை விட்டு போன இந்த 30 வருஷத்துல நான் பூவ தொட்ட நிமிஷங்கள எண்ணி பாத்துடலாம். என் கண் முன்னே பூ இருக்குன்னு கூட தோணல எதோ ஒரு ஆரஞ்சு வண்ணம் எரச்சி கிடக்குன்னு தான் தோணது. இவ்ளோ நேரம் ரவிதம்பி ஒரொரு பூவா பிச்சு என் மேல தூவுனான். வேணாமடா உங்க தாத்தாயில்ல எம் மேல தூவாத பாட்டியும் போயிடுவேன் எவ்ளவோ சொன்னேன்."தாத்தா அங்க தனியா இருக்கும் போது நீ இங்க என்ன பண்ற பாட்டி போ பாட்டின்னு" மேல மேல தூவறான். தலையில விழுந்தது பருக்கையளவு பூவுன்னாலும், என் வாழ்நாளோட மொத்த பாரத்தையும் சொமக்கறப்பால கஷ்டமாயிருக்கு தச்சு. எல்லாத்தையும் தாண்டி வந்து பூவ சரத்துல வரிசையா அழகா கோக்கணுமில்லையா? கொஞ்ச நேரம் பண்ணிட்டேன் மன்னிசுக்க. கண்களை விடவும் மூக்கில் அதிகம் நீர் வழிந்தது ஈஸ்வரிக்கு. சரிசெய்த வாரே மீண்டும் ஒவ்வொறு செவ்வந்தியாக நூலில் அடுக்க துவங்கினாள்.



என்னைக்கும் தான் இப்படின்னா நல்ல நாள்லயும் இப்படி மூக்கசிந்தி அதே பழைய பாட்ட பாடிகிட்டு எதோ புதுசா கல்யாணம் பண்ணி புள்ளபெற்றதுக்கு முன்னாடியே புருஷன் எறந்த மாதிரி. முனுமுனுத்து நகர்ந்தாள் தச்சு.   தனக்கும் தன் கணவருக்குமான உறவை, அவர் மரணத்தை, விமர்சிக்கும் விதமாய் அமைகிற தருணங்களை ஈஸ்வரி விரும்புவதேயில்லை. அடுத்த கணம் வழவழப்பான அந்த டைல்ஸ் தரையில் நூலில் பாதி தரையில் பாதியாய் அதன் மணம் குன்ற அனாதையாக கிடந்தன செவ்வந்தி பூக்கள்.


இனி ஒருபோதும் மருமகள் தச்சு வீட்டுக்கு செல்லவே கூடாது என்ற மன உறுதியோடு வெளியேறினாள் ஈஸ்வரி. "சாப்டுக்கு வீங்கினவளா நான்.  என்ன இந்த சக்கரை வந்ததிலிருந்து பசி வந்த எச்சில் கொடம் கொடமா ஊத்துது.... முடியல. ஆனாலும் அவர் சிரிக்கிறாப்பல இருக்கற அந்த படம் ஒன்னு போதாதா? ரோஷமா வாழ்ந்துட முடியாதா என்ன?. தனக்குத்தானே பேசியவாறே ஈஸ்வரி மகன் வீட்டை விட்டு அவளுக்கென இருக்கும் 'ஒற்றை அறை' வீட்டிற்க்கு வந்துவிட்டிருந்தாள். இல்லை.....அவள் கணவன் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தாள். இப்படி சொல்வதையும், இப்படி சொல்பவர்களையும் தான் அதிகம் பிடிக்கும் ஈஸ்வரிக்கு. எப்படியும் அறுபதை நெருங்கி கொண்டிருப்பாள். சிறு வயதில் ஆமைகறியை தின்றதால் கெண்டை காலெங்கும் இளம் மரத்தின் வேர்கள் போல் வெடித்திருக்கும் அவளுக்கு. குள்ளமான உருவம். எதோ கட்டி இருப்பதாக எந்த மருத்துவரையும் அணுகாமல் காரணமேயின்றி புடைத்திருக்கும் அவள் வயிற்றிர்க்கு காரணம் சொல்லிகொள்வாள். கண்ணீர் அவள் பிரமாஸ்திரமாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் தினசரி தேய்த்து தேய்ந்து  போகும் பல்தேய்ப்பானை போல் தினமும் யாராவது ஒருவரிடம் எதோவொரு வகையில் அழுது அழுது ஓய்வதால் அவளின் அழுகைகள் அதன் சிங்காரத்தை இழந்துவிட்டன.


ஈஸ்வரியை பெண் கேட்டு வந்த போது பழனி அந்த தெருவின் கதாநாயகன்.  தாய் தந்தை இல்லாதவன். ஓர் அண்ணனுண்டு, ஆனால் ஒருவர் சுதந்தரத்தில் ஒருவர் தலையிடாத அளவு முதிர்ச்சி மிக்கவர்கள். நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை. பெண்களை முன்வைத்து பாரதி இதை எழுதியிருந்தாலும். இந்த நான்கு வார்த்தைகளை மட்டும் தாராளமாக பொருத்தி பார்க்கலாம் அவனுக்கு.   மூன்று வேளை உணவேயில்லாமல் எப்படி ஈஸ்வரியால் இத்தனை வனப்புடன் இருக்க முடிகிறது என்று ரசித்து நகராத ஆண்கள் அன்றுயில்லை.


 'நகை வரதட்சனை எதுவும் கொடுக்க துப்பில்லை'.
எனக்கு ஈஸ்வரி மட்டும் போதும்.
'மண்டபத்தில் திருமணத்தை நடத்த வழியில்லை. '
தாலியை கையிலேயே வைச்சிருக்கேன். '
''முதலிரவு பெண் வீட்டில் தான் நடக்க வேண்டும் அதற்கெல்லாம் தோதாக நாலு சுவர் கூடயில்லை. மூன்று சுவர் நான்காவது ஜமுக்காளம் தான்.'
 எனக்கு சொந்த வீடு இருக்கிறது

என ஈஸ்வரியை மணந்து கொள்ள எதையும் சமரசம் செய்து கொள்ள தயாராக இருந்தான் பழனி. அது அவன் மரணம் வரை நீடித்தது.

திருமணமான சில நாட்களில் எல்லாம் வீட்டை ஈஸ்வரி பெயருக்கு மாற்றிவிட்டான். 30 நாள் 60 நாள் பழமொழியை எல்லாம் அவன் காதுபட பேசாதவர் இல்லை.  அந்த சில வருடங்கள் அவன் ஈஸ்வரியாகவே மாறிவிட்டிருந்தான் அவன் கம்பீரத்தில் நளினமான ஒரு பெண்மையிருந்தது.  அவன் ஈஸ்வரியை சமயங்களில் அடியே குத்துவிளக்கே! குங்கும சிமிழே! என அழைத்த மொழியிலும் குரலிலும் அடர்த்தியான காதலும் அரூபமாய் காமமும் இருந்தது .அவனுக்கு அது பிடித்திருந்திருந்தது. சில வருடங்களிலெல்லாம் பெண் கொடுப்பவர்கள் வரனை விசாரிக்கிறபோது நம்ம பழனி மாதிரி வச்சு பாத்துக்குவாணா? என்று கேட்கதுவங்கியிருந்தனர். பெரிய கடைவீதியில் 10 கடைகளுக்கு மேல் பிடித்திருந்தான் கணக்கெழுத. திருமாண புதிதில் ஈஸ்வரிக்கும் அவர்களின் ஒற்றை மகன் சுந்தருக்கும் சேர்ந்து மார்கெட் கமானில் இருக்கும் அய்யர் கடையிலிருந்து பார்சல் செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஏனோ இன்று அவனுக்கு பிடித்த சீத்தா பழத்தையும் சேர்த்து வாங்கி வந்தான்.

அந்த தெருவிலேயே கலர் டிவி வைத்திருந்த சொற்ப வீடுகளில் பழனியின் வீடும் அடங்கும். அன்று ஊர் அடங்கிவிட்டது. கலர் டிவியில் வெள்ளையும் கறுப்பும் சுருள் சுருளாய் திரிய ஏவிஎம் உருண்டை சுழன்று கொண்டிருக்கிறது ஒரு கார் உள்ளே நுழைகிறது.... ஷூட்டிங் தேவையான ட்ராலிகள் நகர்கின்றன அரைகால் ட்ரவுசரும் கோணலான சட்டையுமாய் சிவாஜி ஒரு சிறுவனுடன்  ஏவிஎம் ஸ்டுடியோவில் அலைகிறார். ஓர்  மரத்தடியில் பிரம்மாவை காண்கிறார்..... திரைப்படம் ஓட ஓட கீழே சப்டைட்டில் கார்டில் "ராமன் எத்தனை ராமனடி" என விரிகிறது. மின் இணைப்பு துண்டானது.
ஈஸ்வரியின் ஈர்ப்பு இல்லாவிட்டாலும் அவளுக்கடுத்து சிவாஜி கணேஷனை பழனிக்கு கொஞ்சம் பிடிக்கத்தான் செய்கிறது. மரத்தடியில் பிரம்மா,  அலைபாயும் கண்களுடன் சிவாஜி,   படம் பாதியிலியே நின்றதன் கள்வெறி பழனியை தொற்றிகொண்டிருந்த வேளையில் மின் இணைப்பு அந்த வீட்டில் மட்டுமே துண்டாகியிருந்தது.

ஈஸ்வரி "கையில் இருக்கும் சீத்தா பழத்தையாவது சாப்டுட்டு போய் பாருங்க" என்றாள். அவன் ஈஸ்வரியின் வார்த்தையை கேட்காமல் நடப்பது இது இரண்டாவதாகவோ அல்லது மூன்றாவதகவோ இருக்கலாம். நிச்சயம் முதன் முறையாக இல்லை. இரண்டாவதா ஒரு பெண் கொழந்தை பெத்துகுவோம் என்று ஈஸ்வரி சொன்னதற்கு.... "முடியாது ஈஸ்வரி..... பெத்துகரது நானா இருந்தா ஒன்னென்ன இன்னும் ஒன்பது கூட காணலா..... வலியோடு இருந்த உன்னை அன்னிக்கி ராத்திரி சைக்கிள்ள வச்சு உருட்டுணப்பவே முடிவு பண்ணியாச்சு. நமக்கு ஒன்னு போதும்."


இன்று அவன் சப்பி போட்டா சீத்தா கொட்டைகள் எப்படியும் 70, 80 தேரும். அதில் கொத்து விளையாடுவது ஈஸ்வரிக்கு பிடிக்கும் எனவே ஒன்றையும் தவறவிடாமல் எடுத்து தேங்காய் தோட்டியில் இட்டு பத்திரப்படுத்தி வெளியே வந்த பார்த்த போது... பழனி ஓட்டின்  மீதிருந்த ஆண்டனாவை பிடித்தவாறு சப்பணமிட்டு அமர்ந்திருந்தான். உள்ளே மீண்டும் சிவாஜி கணேஷனின் குரல் கேட்டது..... "இந்தாங்க கரண்டு வந்தாச்சுல்ல இன்னும் என்னத்த அத பிடிச்சு உக்காந்துகிட்ட வாங்க..., ஏன்டா சுந்தரம் இங்க வா. இவருக்கு எப்பவும் என்ன ஏங்கவிட்டு பாக்கறதுல ஒரு சொகம். நான் கூப்பிட்ட இப்படி தான் விளையாடுவாரு. நீ கூப்பிடு."

"இல்லம்மா அப்பாவுக்கு நெஜமாவே நாம கூப்பிட்றது கேக்கல". வெகு நேரமாக அவன் இறந்ததை கூட அறியாமல் அவனிடம் பேசிகொண்டே ஈஸ்வரி நேரம் கடத்திவிட்டதால். மின்சாரம் தாக்கியதிலும், உடம்பின் சூடு அடங்கிவிட்டதாலும் சப்பணமிட்ட பழனியின் கால்களை பிரிக்க கூட  முடியவில்லை அன்று ஈஸ்வரியின் அழுகை பிரமாஸ்திரமாக இருந்திருக்க வேண்டும். பழனியை மணந்ததிலிருந்து அழகையையே பார்க்கவில்லை என்று எல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் மனசு வலித்ததில்லை. வேதனை நொதிக்கவில்லை. பழனியின் அன்பை மட்டுமே வெளிப்படையாக அறிந்திருந்த ஊருக்கு இந்த கண்ணீர் ஈஸ்வரி அவனை எத்தனை விரும்பியிருந்தாள் என்பதை சொல்லிவிட்டிருந்தது.



அவர் மரணத்திற்க்கு பின் ஈஸ்வரி டிவி பார்ப்பதையே நிறுத்தி விட்டாள். அவர் இறந்த தினத்தில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி கொண்டாள்.   நிறங்களை துறந்தாள். பிரபஞ்சத்தின் ஒவ்வொறு அசைவிலும் பழனியின் நினைவுகள் அவளை தின்ன துவங்கியிருந்தது. மரங்கள் அவன் தேகமாய் அசைந்தது, கருத்த தார் சாலைகள் அவன் முதுப்புறமாய் நெளிந்தது. பார்சல் பெரும் அய்யர் கடையை இத்தோடு ஆயிரம் முறைக்கு மேல் சென்று பார்த்து வந்தாகிவிட்டது. அக்கம் பக்கத்து குழந்தைகளை ஏந்தும் போது எனோ பழனியின் ஸ்பரிசம் மனக்கிடங்கிலிருந்து கிளர்ந்தெழுகிறது. அழுகையும் ஓலமும் ஈஸ்வரியின் முக்கிய ஒப்பணைகள். இன்று திருமண வயதில் பெண்பிள்ளையை வைத்திருப்பவர்கள் மனதினூடாகவே ஈஸ்வரியின் நெலம மட்டும் எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்றும் சொல்லத்துவங்கியிருந்தார்கள்.



இதை ஒரு கதை போல கண்ணீர் சொட்ட சொட்ட திருமணமாகி வந்த புதிதில் மருமகள்  தச்சுவிடம் ஈஸ்வரி சொன்னபோது. அழாதீங்க அத்த..... உங்களுக்கு எல்லாமும உங்க மகனிருப்பார். என்று சொன்ன போது,  ஈஸ்வரி  ஆசை பட்டு அவள் கணவன் மறுத்தது பெண் குழந்தை மட்டும் தான். அந்த  ஏக்கமும் இன்று மருமகளாக வந்த  தச்சுவால் தீர்ந்திருந்தது. அவருக்கு பின் சுந்தரத்தை வளர்க்க,   இருந்த இருப்பையெல்லாம் மூலதனமாக கொண்டு பண்டு நடத்தியதில் கடும் கடிச்சியாகிவிட்டாள் ஈஸ்வரி. கணவன் தனக்கென விட்டு சென்ற அனைத்து சொத்துக்களும் இழந்தாகிவிட்டது அந்த ஒற்றை அறை வீட்டை தவிற. இப்போது மகன் சுந்தரத்தின்  தயவில் தான் அவள் கதை உருளுகிறது. இன்று ஈஸ்வரியிடம் பழனியின் நினைவாய் ஊதுபத்தி கொளுத்த ஒரு புகைப்படமும், அவர் நினைவுகளால் நிறைந்த அந்த வீடும் மட்டுமே மிச்சம் . தானும் மகனும் தனித்திருக்கும் வீடு தச்சுவால் இன்று நிரம்பி வழிவதை போல உணர்ந்தால்.. மழை வந்தால் ஒழுகுகிற ஓடுகளிலெல்லாம் செளபாக்கியத்தின் அடையாளங்கள் வழிவது போல் அவளுக்குள் பிரமை. தச்சுவுக்கு தாயும் தகப்பனுமில்லை. 20 வயது நிரம்பியிருக்க கூடும். அதிகம் பேசமாட்டாள். சோத்துக்கே அக்கம் பக்கம் கையேந்தும் நிலைமை என இன்னும் பல பரிதாப தகுதிகளால் அவளை தன் மருமகளாக கொண்டு வர முடிவெடுத்தவள் ஈஸ்வரி.




சுந்தரம் பழனியின் மகன் என்பதை எங்கு நிருப்பித்தானோ என்னவோ? திருமணம் ஆன நொடிமுதல் சுந்தரத்தின் செயல்களில் பழனி வெளிப்பட்டுகொண்டேயிருந்தான். தன் தாயை விட்டு தனிக்குடித்தனம் போகவும், தன் மனைவிக்காக வீட்டு வேலைகள் செய்ய அம்மாவை பணிக்கும் அளவிற்க்கு அவன் பழனியின் மகனாக மாறிவிட்டிருந்தான்.


எத்தனையோ முறை அவமானங்கள் சுமந்த போதும் ஈஸ்வரி மகன் வீட்டை விட்டு வெளியேறியதில்லை. கண்ணீர் துடைத்து துடைத்து எரிவதை போல் அவமானங்களையும் ஒரே சீரில் வழித்து வீசிவிட்டு மறக்க பழகியிருந்தாள்.

 நெடுநாள் கனிந்த பழம் ஓர் நொடியில் மரம் விட்டு அவிழ்ந்து விழுவதை போல், இந்த சரஸ்வதி பூஜையின் போது மகன் வீட்டை விட்டு ஒரேயடியாக இறங்கி வந்துவிட்டதை போல் உணர்ந்தாள். இனி ஒரு போதும் மருமகளுக்கு வீட்டு ஊழியங்களை செய்வதில்லை என்பதில் தின்னமாக இருந்தால். அவள்  மகன் வீட்டிலிருந்து வெளியேறி இரண்டு நாட்களாகியிருந்தன. உணவை வாங்கியுன்ன தனித்த பொருளாதாரம் இல்லை. கேட்பதற்க்கு மகனும் வரவில்லை.  அந்த நொடியின்  சூனியத்தை போக்கும் மார்கம் அறியாமலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்திலும் பழனியின் புகைப்படத்தை நிமிர்ந்து பார்த்தபடியே இருக்கிறாள் ஈஸ்வரி. பழனியின் புகைப்படம் இன்னும் புன்னகைத்தவாறே அவளை பார்க்கிறது.  இதோ கிளம்பிவிட்டாள் மீண்டும் மகன் வீட்டிற்க்கு.
*******

Sunday, October 5, 2014

அர்ப்பணம் 4

 மதியில் துளியென விழுந்துகடலென விரிவது
உன் விந்தை
நீ மழலையின் குரலில் தத்துவம்
பேசும் பெரும் மேதை
தரிசனம் வாய்க்க பொழுதினிலோ - உன் நிழல்படம்
கூட ஒரு போதை
வரிசங்கின் சேவையது தேவையில்லை-வெறும்
சுவாசத்தாலே முழங்கிடுவேன் - பைரவியுனக்கு நான்
விடும் தூதை

உன் கைவிரல் சூடிய பிறையதை - நகமென
அழைப்பது சரிதானோ?
ஜரிகை நெய்தநுதழ் வழியும் - வியர்வையை
ஸ்படிகமாய் கோர்பது முறைதானோ?
வேள்வியில் பெருகிடும் தழல்போலே - என்னுயிர்
நின் முன் தகிக்குதடி
தேள் விடம் கூட உன்னருளால் - தேன்
துளியாக மலருதடி

கூப்பிய கரம் போல் உன் முன்னே
வெள்ளி குறிஞ்சியும் பணிந்திடுமே
காப்பிய தலைவி நீயானால் - அக்கதைகளும்
உயிர் கொண்டலைந்திடுமே
கண்கள் மூடி தியானித்தேன் - வினைகள்
சுடுநீர் குமிழியாய் கொதிக்குதடி
ஊனையுதறும் வழி மறந்தேன் - உன் முகம்
அங்கு பங்கயமாக மலர்ந்ததடி


Monday, September 29, 2014

அர்ப்பணம் - 3

விருட்சத்தின் மீது ஊர்ந்துசெலும் – எறும்பால்
அதன் தவம் கலையாது
தீஞ்சுவை நல்கயெனை அழைத்துவிடு – உன்
குறுநகை இதழொன்றும் குலையாது
திசை தெரியாத தூசியென – அங்கும்
இங்கும் அலைகின்றேன்
உன் குழல்வழி வாசனையெனும் கசியவிடு
நல்பாங்குடன் நானும் வழியறிவேன்.

விடைத்த கம்பியுள் சூட்சுமமாய்
மறைந்து திரியும் ராகங்களே
புடைத்த வயிறுடன் மிதந்தலைந்து – மழையை
எங்கோ பிரசவிக்கும் மேகங்களே
கருணையும் பொறுமையும் அவள் வேதம்
ரெளத்திர மேனி அவளிடும் வேடம்
அந்த மாயவி புகழை பாடுங்கள் – அவள்
அருளை கூதழாய் தூவுங்கள்




கொண்ட காதலில் மோகத்தில் போகத்தில்
சரிந்திடும் பம்பரம் போலே சுழல்கின்றேன்
மீண்டதாய் விரைந்து எழுகையிலே
பல்லாங்குழியுள் சோளியாய் மறுபடி வீழுகிறேன்
சீண்டிடும் வினையால் சோர்ந்துவிட்டேன்
பைரவி உன் கழல் காட்டிடடி
உன் கன்னக்குழியின் எழில்கூட – பக்தனொதுங்கும்
கரை போல் இக்‌ஷணம் தோணுதடி
 

செங்கதிர் சிந்திடும் இளஞ்சிவப்பில்
செம்மரி தந்திடும் கதகதப்பில்
குங்குமசிமிழின் லக்ஷ்ணத்தில் – என்
போதை தொலைந்தது இக்கணத்தில்
பல யுகம் சுழன்ற மோனந்தனை –
காட்டுது உன் சுழல் மூக்குத்தி
அகமும் புறமும் அமிழ்ந்தடங்க
இப்பிறவியிலாவது வாய்க்கட்டும்
வழங்கடி தேவி என் முக்தி




Saturday, September 27, 2014

அர்ப்பணம் - 2

அர்பணம் செய்யும் தேடலிலே
சொப்பணம் கண்டேன் தேவி
கர்பம் தரிக்கும் கும்பம்தனில்-குழந்தையாய்
நர்த்தனம் புரிந்தாய் மாரி(றி)

அம்புலி காட்டி உணவளித்தேன் – என்
குண்டலம் அதுவென சொன்னாய்
வேம்பினை காட்டி கசக்கும் என்றேன்
கடையிதழ் பச்சைநீர்க்கசிய சிரித்தாய்


கருவழி வந்த குறும்பேடே- அம்மை
நானுனக்கு அழை என்றேன்
என் திருவடி பணிந்த சிறுதளியே – என்
விரலசை பொம்மை நீ என்றாள்



வானம் தரித்த அஞ்சனத்தில் – அழுகையும்
அச்சமும் வருமென்றேன்
ஞான திறப்பை கொள்ளென்று- கரும்
மோகன மேனியாள் காட்சி தந்தாள்

செம்புனல் நொதிக்கும் தீயின் ஜுவாலை
சுட்டுவிடுமடி மஹராணி
நகைப்பை கூட்டும் பேச்சை குறைடி - அதென்
ஈரைவிரலின் மருதாணி


சேர்ந்ததை களைப்பதும், - களைத்ததை
உடைப்பதும் என்னே உந்தன் லீலை
சூழ்ந்ததை மீட்பது, வீழ்ந்த்தை கரைப்பது
அதுவே எந்தன் தினசரி வேலை

சொப்பணம் களைந்து துயிலெழுந்தேன்
அம்பிகை எங்கே போனாள்
இக்கணம் எந்தன் மடிமலர்ந்த – என்
மகளே அம்பிகையானாள்

Wednesday, September 24, 2014

அர்ப்பணம் - 1





நுதழ்நிறை திலகம் போதும்
நூராயிரம் பிறைகள் தோல்வியுற
உன் சலங்கையின் ஓர்பரல் போதும்
இந்த அகிலம் முழுவதும் லயித்துவிழ

மழையும் வெயிலும் உன் ஒப்பணைகள்
உன் நினைவால் கமழுமென் கற்பனைகள்
விரல் பட்டதும் அவிழும் பனித்துளிப்போல்
உன் பார்வையால் தெரிக்குது என் வினைகள்



பரிதியும் குருதியும் இணைநிறத்தில்
தீர்க சுமங்கலி நீயிருக்க
கண்கள் கோடி யாசிப்பேன்
அனுஷணம் உனை நான் ரசித்திருக்க

அர்ப்பணம் செய்ய ஏதுமின்றி
நீ தந்த போதையில் கவி புனைந்தேன்
சர்ப்பமாய் வினைகள் விரட்டுதடி
பைரவி உன்கழல் சரணடைந்தேன்

Thursday, September 18, 2014


ஆசிகள் பெறுவதும் ஆனந்தம் கொள்வதும்
மனித மனதின் இயல்பு
நேசிப்பவர் வந்து வாழ்த்து சொல்வது|
அன்பை பெருக்கும் மரபு
பாசிகள் ஊறிடும் பச்சை குளத்தில்
மூலவர் மிதப்பது சிறப்பு
என் ஆசைகள் மிதக்கும் ஆகாயத்திற்க்கு
நீ வரும் திசையே கிழக்கு

நெல் மணி போலவே குள்ளக்கீற்றாய்
அசைகிறது அந்த தீபம்
அதற்கு முத்தமும் இல்லை நெருங்கி
அணைக்கும் மூச்சும் தொல்லை - ஏனோ
அதற்கு இந்த சாபம்
விட்டில் பூச்சியின் வீரியம் கூட
பாவம் அதற்கில்லை
சுடரை தூண்டிடும் விரலாய் - குரல் கசிந்திருந்தால்
விரிந்திருக்கும் அதனெல்லை

நிறங்களின் தன்மையறியா வரையில்
பட்டாம்பூச்சிக்கு வண்ணம் கூட
சுமை தான்.
கொண்ட அன்பின் ஆழம் விளங்கா
வரையில் இந்த களத்திலும் இதே
கதை தான்
வாழ்த்தினை விதைத்து வாழ்த்தினை
அறுப்பதால் இந்த முறையும் ஒருவகை
வினை தான்





 






Sunday, August 10, 2014




ஞானத்தின் வாசல்  திறந்திருக்க - மனம்
மோகத்தின் கொல்லையில் லயித்திருக்க
வேதத்தின் குரலது கேட்டிருக்க
இளம் பரியின் வேகம் சூழ்ந்திருக்க
மாயன் அத்தனவன் ஆடிவந்தான்
என் காதலன் வேடம் பூண்டு வந்தான்

துளை ஏந்திய குழலெலாம் அவன் கானம்
உளை கூடிய உளமெலாம் சுடும் காமம்
களை படர்வதை உணர்ந்து அகலுவதே
அடிகேள் அவன் சொலும் விஞ்ஞானம்
அகவை நகர்ந்த வழித்தடமெங்கும்
வேதனை விதையை தூவி வைத்தான்
சோர்ந்து விழுந்ததாய் தகவலறிந்த்தும்
போதனை சாயம் பூசிவிட்டான்

சகலமும் அவனென கதறும்வேளையில்
சபலத்தின் போர்கொடி உயர்கிறது.
அவலம் அறுப்பான் எனநம்பும் நொடிதனில்
சலம் போல் சபலமும் நகர்கிறது.
கற்றதும் பெற்றதும் காதலொன்றே
என பற்றிகிடந்தேன் இந்நாளும்
நித்தமும் காதலின் திளைப்பதோன்றே
பித்தனின் பிள்ளையின் அடையாளம்!!