Tuesday, October 13, 2015

முக்திதாயினி - 1

நீல வானமும் நீண்ட ஆழியும்
இணைகிற புள்ளியில் ஓர் ஜனனம் நிகழ்கிறது
அகிலம் விழிக்கிறது.
வீழும் உயிர்கள் கரைகிற அசைவினில்
அலைகள் எழுகிறது
சிறுமியின் சலங்கையை நனைக்கிறது.

செங்கனல் கக்கும் சூரியனை
இமைகளின் சிமிட்டலில் அசைத்திடுவாள்
ஞானியும் மேதையும் ஓய்வெடுக்க
பங்கைய பாதத்தின் நிழல் தருவாள்
முக்கடல் வீசிடும் பேரலையை
கைவளை ஓசையில் அடக்கிடுவாள்
கரையிலொதுங்கிய சிப்பியை திறந்தாலும்
சோழியாய் சங்கரி சிரித்திடுவாள்

எல்லையிதுவென வரைப்பட கோடுகள்
காட்டுது இவள் திசையை - கண்களில்
எல்லையிலாமல் பெருகிடும் நீர்த்துளி
மீட்டுது அவள் இசையை
தொலைத்தோ கரைத்தோ நிற்கிறேன்
உன்முன் தனியே நிற்கதியாய்
பிழைக்கட்டும் பிள்ளை பாரடி தேவி
உன் சின்ன கயல்விழியால்


மலையென குவித்த வினைகள் யாவும்
தீராதோ ஒருபோதும்?
குமரியின் குங்குமதரிசனம் முழுமையுமெதற்கு
அவள் மூக்குத்தி நிழல் போதும்
பக்தியில் ஊறிய மனமிதன் கலிகள்
எங்கே கரையேறும்
முக்திதாயினி கருணை  ததும்பும்
நதிதனில்இளைப்பாரும்