Friday, March 1, 2013


"சூடா காபி குடிக்க வேண்டாம் பாப்பா தலையிலயே போய் சூடா கொட்டும்"
"இல்ல காட் அதுக்கு நேச்சுரலாவே ஒரு ஹெல்மெட் வச்சுருப்பார். அதோட தலையில படாது."

"இன்னும் கொஞ்சம் நாளைக்கு நீ மீன் எல்லாம் சாப்பிட வேண்டாம்"
"ஏன்"
"பாப்பாக்கு உள்ள நாத்தமடிக்கும்"

குழந்தைமனம் அழகு. அதைவிடவும் குழந்தைதன்மையை திணித்து கொள்ளும் தருணங்களும் இப்போதெல்லாம் அழகாக தெரிகிறது.
கணவரை விடவும் குழந்தையின் அப்பாவை ரொம்ப பிடிக்கிறது எனக்கு.
நாளை குழந்தைக்கு பிடிக்க கூடும் அப்பாவை விடவும் அம்மாவின் கணவரை.
*********

அனுதாபங்களையும் பச்சாபதாங்களையும் சம்பாதிப்பதில் கூட ஒரு கள்ள ருசியிருக்கும். இருக்கிறது. அதைவிடவும் இனிக்கிறது அக்கறையை சம்பாதித்து கொள்கிற இந்த நாட்கள். எங்கள் குளம் இப்போது நதியாக ஓட துவங்கிவிட்டது, ஓர் குழந்தையை முன்வைத்து, ஓர் தலைமுறையின் கனம் சுமந்து, சகலசம்பந்துடனோ அல்லது வலிந்துதிணிக்கப்பட்டோ, பிறக்கவிருக்கும் உறவுகளையும் உணர்வுகளையும் மற்றபிற கூளாங்கற்களையும் எங்களோடு சேர்த்தே உருட்டி கொண்டு ஓடுகிறோம். எங்களில் கால் நனைப்பவர்களையும் பிடிக்கிறது எங்களை அள்ளி கொள்கிறவர்களை பிடிக்கிறது. எங்கள் ஓட்டத்தை மணல்திட்டில் திருமால் போல் ஒருக்கப்படுத்து ரசிப்பவர்களையும் தான் பிடிக்கிறது. நதிக்கு எதை தான் பிடிக்காது, அல்லது நதியை பிடிக்காதவர்கள் யார்?
**********








Wednesday, February 20, 2013

தாயே யசோதா




முறுக்கியிருக்கும் புது கொலுசை விடவும் தளர் கொலுசுகள் கால்களுக்கு அழகு இல்லையா...?. குழந்தைகளுக்கு இரண்டுமே அழகு தான் அல்லது அனைத்துமே அழகு தான். அழகானவைகள் எல்லாம் குழந்தைகளையும், குழந்தைகள் எல்லாம் அழகானவைகளையும் எந்த சமரசமும் இன்றி தேர்வு செய்து கொள்கின்றன. எனக்கு எப்போதையும் விட இப்போது அந்த பக்கத்து வீட்டு கருப்பு குழந்தையை ரொம்ப பிடிக்கிறது. கொத்து கொத்தான முத்துக்கள் பூக்க குலுங்கி குலுங்கி அசைக்கிறான் அந்த கொலுசை. கருப்பு டேலியா பூவை போல் திரண்டு இருக்கிற பின்னழகு பிட்டங்களில் அவன் எங்கேங்கோ அமர்ந்து பூதி அப்பி பழுப்பு நிறத்தில் படர்ந்திருக்கிற புழுதி, குழந்தைகளுக்கேயுரிய கவர்ச்சியை கூட்டிவிடுகிறது. பால்கோவா தின்று உறுகி வழியும் எச்சிலும் முக்கிலுருந்து அரும்பும் சளியும் சங்கமித்து அவன் கன்னத்தில் படர்த்தியிருக்கின்றன அடையடையாய் மேகவடிவலான வடுக்களை........ வேறொரு குழந்தையால் ஊனமாக்கப்பட்ட டெடிபியரின் காதை வாயில் கவ்வி என் வாசல் வரும் அவனை பார்க்கிற பொழுதெல்லாம் நினைவு வருகிறது "தாயே யசோதா...." என்று நீள்கிற சுதாரகுநாதனின் குரல்

"காலினில் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்....
பாலன் என்று தாவி அணைத்தேன், அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன்மகன் ஜாலம் மிக செய்வதெல்லாம் நாலு பேர்கள் கேட்க சொல்ல நாணமிகவாகுதடி....."

என்ற வரிகளும் நினைவுவருகிறது அல்லது நானாக விரும்பி அதை நினைவில் வரவழைத்து கொண்டு ரசித்து இழைகிறேன் அந்த காட்சியில். என் வாசல் வந்த மாயன் கோபல கிருஷ்ணனுக்காக பக்கத்து வீட்டில் கட்டப்பட்டிருக்கும் தூளியின் கீழ் கவிழ்ந்திருந்தது நிழல். அந்த நிழல் இப்போது வளர துவங்கிவிட்டது என் வாசல் நோக்கி......அதோடே சேர்ந்தே வளர்கிறாள் எனக்குள் வெளிப்பட துடிக்கும் யசோதையும்....