Friday, March 1, 2013


"சூடா காபி குடிக்க வேண்டாம் பாப்பா தலையிலயே போய் சூடா கொட்டும்"
"இல்ல காட் அதுக்கு நேச்சுரலாவே ஒரு ஹெல்மெட் வச்சுருப்பார். அதோட தலையில படாது."

"இன்னும் கொஞ்சம் நாளைக்கு நீ மீன் எல்லாம் சாப்பிட வேண்டாம்"
"ஏன்"
"பாப்பாக்கு உள்ள நாத்தமடிக்கும்"

குழந்தைமனம் அழகு. அதைவிடவும் குழந்தைதன்மையை திணித்து கொள்ளும் தருணங்களும் இப்போதெல்லாம் அழகாக தெரிகிறது.
கணவரை விடவும் குழந்தையின் அப்பாவை ரொம்ப பிடிக்கிறது எனக்கு.
நாளை குழந்தைக்கு பிடிக்க கூடும் அப்பாவை விடவும் அம்மாவின் கணவரை.
*********

அனுதாபங்களையும் பச்சாபதாங்களையும் சம்பாதிப்பதில் கூட ஒரு கள்ள ருசியிருக்கும். இருக்கிறது. அதைவிடவும் இனிக்கிறது அக்கறையை சம்பாதித்து கொள்கிற இந்த நாட்கள். எங்கள் குளம் இப்போது நதியாக ஓட துவங்கிவிட்டது, ஓர் குழந்தையை முன்வைத்து, ஓர் தலைமுறையின் கனம் சுமந்து, சகலசம்பந்துடனோ அல்லது வலிந்துதிணிக்கப்பட்டோ, பிறக்கவிருக்கும் உறவுகளையும் உணர்வுகளையும் மற்றபிற கூளாங்கற்களையும் எங்களோடு சேர்த்தே உருட்டி கொண்டு ஓடுகிறோம். எங்களில் கால் நனைப்பவர்களையும் பிடிக்கிறது எங்களை அள்ளி கொள்கிறவர்களை பிடிக்கிறது. எங்கள் ஓட்டத்தை மணல்திட்டில் திருமால் போல் ஒருக்கப்படுத்து ரசிப்பவர்களையும் தான் பிடிக்கிறது. நதிக்கு எதை தான் பிடிக்காது, அல்லது நதியை பிடிக்காதவர்கள் யார்?
**********