Friday, July 6, 2012

கரையை கடக்கும் அலைகளை எல்லாமா
கடல் நினைவு வைத்து கொள்ளும்.
வெளிச்சத்தை மிச்சம் வைத்து நகரும்
நிலவுக்கு, ஏன் கடந்து வந்த ஜன்னல்கள் மீது அக்கரை.
எத்தனையோ பிரார்த்தனைகளோடு தன்
ஜடையை பிடித்து இழுக்கும் எந்த கைரேகைகளையும்
கணக்கு வைத்து கொள்வதில்லை ஆலய மணி.
நான் அலை
நான் ஜன்னல்
நான் உன் ஜடையில் படிந்த கைரேகை.
உனக்கு தான் இன்னும் எந்த பெயரையும்
வைக்கவில்லை நான்!!!

******


ஒவ்வொரு முறை மரணத்தை
கையில் அள்ளும் போதும்
மறந்துவிடுகிறேன் என் விரல்களின் நடுவில்
உன்னை போலவே மெல்லிதாய்
இருந்தும் இல்லாமலும் இருக்கும்
பொத்தல்களை!!!

***********

நீ எதை மறந்தாலும் தண்ணீரை மாற்ற மறந்ததில்லை
நீ எதை மறந்தாலும் சரியான நேரத்தில்
அந்த "Fish Food" டப்பாவில் இருக்கும் பொடிகளை தூவ மறந்ததேயில்லை.
நான் எப்போதும் உன்னை கண்ணாடி
குடுவை வழியே பார்த்து கொண்டிருந்ததால்
இப்போதும் என் செதில்கள் படபடக்க
உன்னை தேடி கொண்டேயிருக்கிறேன்.
நீ என்னை விட்டிருக்க வேண்டாம் கடலில்.

**********

புல்லாங்குழலின்
துளையில் ஒருவன்
உதடு குவிக்கும்
காட்சியை பார்த்து...
அச்சே எச்சில் என்கிறேன்.... நான்!
அது இசை என்கிறாய் நீ...!
இரண்டு உண்மைகளுக்கும்
நடுவே மண்டி கிடக்கும்
உணர்வுகளை - ஒரே மூச்சில் ஊதி
தள்ளுகிறான் அந்த இசைகலைஞன்!!