Tuesday, April 27, 2010

பறவை

தீண்டல்கள் நேராத பெண்ணின் தேகம் போல் மென்மையான சதை. குட்டி பிள்ளைகள் நெற்றியில் பொட்டு என்ற பெயரில் வைக்கிற சின்ன புள்ளியை போன்ற கண்கள். கண்ணிர் துளிகளுக்கு வார்த்தைகளாக மாறும் வல்லமை உண்டு என்று அன்று தான் அறிந்திருந்தது அது. கழிவரைகளுக்கும் கைகுட்டைகளுக்கும் மட்டும் பரிச்சியமான கண்ணிர் துளிகளை வார்த்தைகளாகவும் உதிர்க்க முடியம் என்று அன்று தான் அதற்க்கு தெரிந்திருந்தது. அந்த பறவைக்கு அன்று ஒரு காதல் கடிதம் எழுதவேண்டும் என்று ஆசையாக இருந்தது . இந்த காதலை பார்ப்பவர்களும் கேட்பவர்களும் சிரிக்கலாம், முரைக்கலாம், ஏன் காரி கூட துப்பலாம் அப்படியொரு காதல் அந்த பறவைக்கு அந்த மரத்தின் மீது!!

பறத்தல் என்பது இயற்கையான நிகழ்வு. அது நிகழாவிட்டால் அதற்க்கு பறக்கவும் தெரியாது மற்ற பறவைகளை போல் பாடவும் தெரியாது ஆடவும் தெரியாது. என்றோ எப்படியோ நிகழ்ந்தது. கனமாக இருந்ததால் லேசாக அசைத்து பார்க்கலாம் என்று சிறகினை அசைத்ததில் இன்று அந்த மரத்தின் கிளையில் அமர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க பறவைகளின் பட்டியலில்இடமும் பெற்று இருந்தது. முதலில் எல்லாம் சாதாரணமாக தான் இருந்தது. காற்றில் இலை அசைவதும். மரத்தின் கிளைகள் இதற்க்கு இடம் கொடுத்தும். சில நாட்களுக்குள் இலையின் தீண்டலும் கிளையின் ஸ்பரிசமும் இயற்கையாக தெரிந்தது. பின்பு சுகமாக கடிதம் எழுத நினைத்த பொழுது சுமையாக.


அந்த மரம் வளர நீர் பாய்ச்சியவர்கள் யாரும் இன்று உயிரோடு இல்லை. ஒரு சிலரை தவிர. வேர்கள் படர்த்தி கிளைகள் உயர்த்தி திமிர்ந்து நிற்கும் மரம். மரங்களில் கொழிக்கும் வளத்தினை மறைத்து வைக்க எந்த அந்தரங்க பாகங்களையும் இறைவன் வைக்கவில்லை. அதை மறைக்கும் எண்ணமும் மரங்களுக்கு இருப்பதில்லை. எத்தனையோ பறவைகளுக்கு அடைக்கலம் தந்த மரம். இந்த பறவைக்கு நிழல் கொடுத்ததில் ஆச்சிரியம் என்ன? ஆனால் தன்னில் வந்த அமர்ந்த எத்தனையோ பறவைகளின் இந்த பறவை மட்டும் சுமையாக இருந்திருக்க வேண்டும் அந்த மரத்திற்கு. சற்று கவனத்தோடு தான் தங்கி பிடித்து இருந்தது . பறவையின் கனத்திற்கு நிச்சயம் அதன் உடல் கரணம் அல்ல என்று மட்டும் அந்த மரத்திற்கு தெரியும். (எத்தனை பறவைகளை பார்த்திருக்கும் ).

அந்த பறவையின் சிறகுகள் துளிர்க்கையில் அடைக்கலம் தந்த மரம். அந்த பறவையின் திசைகளுக்கும் எல்லாம் வழிவிட்டு நகர்ந்துகொண்ட பெருந்தன்மையான மரம். இரைத்தேடி பறந்ததில் சோர்ந்திருந்த போது சுடும் சூரியனை காட்டி அவன் குளிர் தருவான் அவனை நோக்கி செல் என்று பாதை வகுத்து கொடுத்த போதி மரமும் இதுவே. பசித்த போது கனிகளை கொடுப்பது மரத்தின் பண்பு. கிளைகள் நீண்டிருந்தால் மற்ற பறவைகளும் வந்து அமர்வது அவற்றின் இயல்பு. இதில் என்ன தான் இந்த பறவைக்கு மட்டும் கோபமோ?? பொறமையோ?? இல்லை அதன் மொழியில் காதலோ??? அடைகலம் வந்த இடத்தில் மரத்தை உரிமை கொண்டாட நினைப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பதையும் அந்த பறவை உணர்ந்திருந்தது.

யார் தான் பொறுப்பு இந்த பொல்லாத காதலுக்கு. பறவைக்கு பறவையின் மீது காதல் வரலாம். அது என்ன மரத்தின் மீது. மரங்களில் கிளைகள் என்றால் நீண்டு தான் இருக்கும். அதை போய் ஏதோ தன்னை அழைபதற்காக தான் கரம் நீட்டி விரல் நெருடி நகம் இளைத்து அழைப்பதாக எண்ணி கொள்வதெல்லாம் முட்டாள்தனம். பறவைக்கு காதல் வந்தாலும் சரி கழுதைக்கு கத்திரிக்காய் வந்தாலும் சரி. அந்த பறவைக்கான இடம் அதற்காக மட்டுமே என்பதில் அந்த மரம் உறுதியாக இருந்தது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத செயல்களை நினைப்பதும் ஏங்குவதும் அதையே சாதகமாக்கி வெற்றி காண்பதும் பெண்தன்மை வாய்ந்த எல்லா உயிரினகளுக்கும் பொருந்தும். வேடந்தங்களுக்கு இந்த மரத்தை அழைத்து சென்று இது என் காதலன் என்று அந்த பறவையால் இந்த மரத்தை அறிமுகம் செய்ய முடியுமா? கம்பிரத்தின் பிரதிநிதிகள் மரங்கள். அதை தன்னை போல் பறக்க வேண்டும் என்று நினைப்பது தான் சாத்தியமாகுமா?


அன்று நல்ல மழை. அந்த மரத்தின் தண்டுகள் பழமையடைந்ததற்கான சுவடுகளே இல்லை. . அன்று அந்த மரத்தில் எந்த பறவைகளும் இல்லை. உயர்ந்து சிலிர்த்த மரத்தில் அந்த பறவை மட்டும் தனிமையில் இருந்தது அதற்க்கு பரவசம் அளிப்பதாய் இருந்தது. அந்த பறவை தனக்காக அந்த மரத்தில் ஏற்படுத்தி இருந்த பொந்தில் தன் இரு கால்களை குறுக்கி கதகதப்பை உணர்ந்திருந்தது. தனக்காக மட்டுமே ஆண்டவன் இந்த மரத்தை படைத்திருப்பதாக உணர்ந்தது. சில மணி துளிகளில் அந்த பறவையின் காதுகளுக்கு, சிதறும் மழைத்துளியின் நடுவே உடல் சிலாகிக்கிற அதன் மெலிய சிறகுகள் சில்லென்று சிலிர்க்கிற ஒரு வித்தியாசமான செல்ல ஒலி. தன் காதலனோடு தங்கிருந்த தனிமையை உடைத்தெறிந்து அது என்ன ஒலி என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் அந்த பறவைக்கு. அந்த ஒலியையின் பிறப்பிடத்தை தேட ஆயத்தம் ஆகியது. அந்த மரம் தனக்கு சொந்தம் என்ற மாயை ஒரு கனம் தளர்த்தியது. கண்களை கதகதப்பில் வைத்து கொண்டு பார்வையின் நீளத்தை மட்டும் நீட்டி பார்த்தது. தட தட வென்று பொழிகிற மழையின் இடையே... மழைக்கு ஒதுங்கிய ஒரு இளம் தாயின் மார்புகள் மூலமாய் அவள் குழந்தைக்கு அந்த ஒலி சுரந்து கொண்டு இருந்தது. இப்பொழுது அந்த பறவையும் நனைய துவங்கி இருந்தது. மரத்தின் வெளியே பெய்த மழையிலும் தனக்கு மட்டுமே சொந்தமான அதன் கண்ணீரிலும். அதற்க்கு காதல் கடிதம் ஒன்று எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது!!!!!!!

Thursday, April 22, 2010

மழை

மகரந்த பூச்சு!!

அந்த மரங்களக்குள்
கொளுத்து எரியும்,
தீ பந்தத்தின் நிழல்
கவிழ்ந்திருந்தது.

நிழலின் திடமான வீச்சில்
இரண்டு
மரங்களும் சரிந்தே
விட்டன!

வீழ்ந்த மரங்கள்
விதைகளை
மண்ணில் விதைக்காமல்
நிலத்தில் உலர்தியிருந்தன.

நிழல் ஓய்ந்திருந்தது.
இப்பொழுது
நல்ல மழை .
அதில் ஒரு
மரத்தின் கிளை
மட்டும் சுளிரென
அள்ளி தெறித்தது
மகரந்த பூச்சை!

வெண்க்கடல்

கானம் மீட்டி
அடர்ந்து தடித்திருந்த
திடமான கரும்மிருட்டு.
என்னை அழைத்த அந்த
ஊதா நிற பறவைக்கு
நான் ஒரு கதை சொன்னேன்!

விந்தையான இயற்க்கை
ஊர் வெளியில் பாய் விரித்த இயற்கை
செங்கடலாக
கருங்கடலாக
நீலக்கடலாக
ஊர் எல்லையில் மட்டும்
வெண்க்கடலாக"

தொலைநோக்கு

அடுத்த சில மணிநேரங்கலில்
மழை வருவதற்க்கான
அறிகுறிகள் உண்டென்று
சொன்னாய்...
அருகில்
கொழுத்து கருத்து
இருந்த முகிலை
அறியாமலேயே!!

மழை

மகரந்த பூச்சு!!

அந்த மரங்களக்குள்
கொளுத்து எரியும்,
தீ பந்தத்தின் நிழல்
கவிழ்ந்திருந்தது.

நிழலின் திடமான வீச்சில்
இரண்டு
மரங்களும் சரிந்தே
விட்டன!

வீழ்ந்த மரங்கள்
விதைகளை
மண்ணில் விதைக்காமல்
நிலத்தில் உலர்தியிருந்தன.

நிழல் ஓய்ந்திருந்தது.
இப்பொழுது
நல்ல மழை .
அதில் ஒரு
மரத்தின் கிளை
மட்டும் சுளிரென
அள்ளி தெறித்தது
மகரந்த பூச்சை!

வெண்க்கடல்

கானம் மீட்டி
அடர்ந்து தடித்திருந்த
திடமான கரும்மிருட்டு.
என்னை அழைத்த அந்த
ஊதா நிற பறவைக்கு
நான் ஒரு கதை சொன்னேன்!

விந்தையான இயற்க்கை
ஊர் வெளியில் பாய் விரித்த இயற்கை
செங்கடலாக
கருங்கடலாக
நீலக்கடலாக
ஊர் எல்லையில் மட்டும்
வெண்க்கடலாக"

தொலைநோக்கு

அடுத்த சில மணிநேரங்கலில்
மழை வருவதற்க்கான
அறிகுறிகள் உண்டென்று
சொன்னாய்...
அருகில்
கொழுத்து கருத்து
இருந்த முகிலை
அறியாமலேயே!!

Saturday, April 10, 2010

காற்றாடி

அன்று என் மனம் அதிகாலையிலே எழுந்து விட்டது. இன்னும் என் கண்கள் விழித்து கொள்ள சில மணி நேரம் பிடிக்கும். எவர் சில்வர் பாத்திரங்களின் சத்தமும், சமையலறை நீர் குழாயில் சொட்டி கொண்டிருக்கும் நீர் துளிகளும் என் அம்மா எழுந்து விட்டதை உணர்த்தியது. முழுமையாக விழித்த மனத்துடன், கண்கள் மட்டும் மூடி கிடப்பது, நம் மனதுக்கு பிடித்த காதலியுடன் தனி அறையில் இருப்பது போன்ற சுகம். கண்களில் துவங்கி உயிர் சுரக்கும் அணு வரையில் நிரம்பி வழியும் அந்த இருள் தான் நம் கற்பனைகள் எல்லாம் கை கால் முளைத்து ஆட்டம் போடும் அழகிய மேடை . அன்று என் கற்பனை மேடையில், என் வருங்கால கணவர் என் கால் விரல்களில் சொடுக்கு எடுத்து மென்மையாக என் பாதங்களை வருடி கொண்டுஇருந்தார் என் மனதில் அவரையும் என் உடலில் அவர் உயிரையும் சுமக்கும் பெருமிதத்தில்.

அப்பொழுது, என் தலையின் மேல் கவிழ்ந்து இறங்கி கொண்டிருந்த துருபிடித்த மின் விசிறியின் காற்று என் கற்பனை ஆட்டதிற்கு மேலும் வலு சேர்த்து கொண்டிருந்தது. காட்டருவி போல் நல்ல சத்தத்துடன் குளுமையான காற்றை பொழிந்து கொண்டிருந்தது அந்த காற்றாடி. இருபத்தி நான்கு ஆண்டுகள் பழமை வாய்ந்த காற்றாடி. என் பெற்றோர் திருமணத்திற்கு சீதனமாக வந்த காற்றாடி. பழுப்பு நிற காற்றாடி, வண்ணம் அடிக்காமலேயே காபி நிறத்தில் மாறியிருந்தது. முதல் நாள் பள்ளி செல்ல மறுக்கும் பிள்ளையின் கைகளை அம்மா இழுக்கிற போத விம்மி விம்மி கதறுகிற குழந்தையின் முனுகல் போன்றது அதன் டர்.. டர்.. என்ற ஒவ்வொரு சுழற்சிக்குமான சத்தம். என் சிறு வயதில் கேரளா கோயில்களில் நான்கு கைகளை விரித்து என்னை பயத்திலும் பக்தியிலும் ஆழ்த்திய உக்கிரமான லட்சனமான காளியின் அம்சம் அந்த காற்றாடி. அது இயங்குவதற்காக மின்சாரம் பாய்ச்சப்பட்ட அடுத்த நொடியே காளிக்கு உயிர் வந்ததை போல் தன் கைகளை மெல்ல சுழற்றி அட ஆரம்பிப்பாள். ரேகுலேடரின் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு ஆட்டம் தான்.


எண் ஒன்று, இப்பொழுது அம்பிகை சாந்த சொருபினி நாட்டியம் பழகும் பெண் போல மெல்ல அபிநயம் பிடிப்பாள். மதிய வெயிலில் தேகத்தில் மலர்ந்திருக்கும் வியர்வைகளை கொய்வதற்கு இந்த காற்று போதுமானது. எண் இரண்டு, பரதம் பயின்ற இளம் பெண்ணின் முதல் அரங்கேற்றம் போல... காற்று வருகிறதோ இல்லையோ ஆட்டத்திற்கு குறையில்லை. வீட்டிக்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் விதமாய் "வாங்க வாங்க உக்காருங்க ஏய் அந்த பேன் போடு... என்ற அசடு வழியும் வாசகத்துடன் காற்றாடியை இரண்டாம் எண்ணில் வைத்தால் தான் விருந்தோம்பல் பண்பிற்கு உயிர் சேர்த்த மிதப்பு. எண் மூன்று, இது நாட்டிய பள்ளியில் சற்று உடல் தடித்த 35 வயது மதிக்க தக்க நடனஆசிரியர் பயிற்றுவிக்கும் ஆட்டம் போன்றது. இந்த ஆட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்தது காற்றாடியின் மைய பகுதி. தஞ்சாவூர் பொம்மைகள் செய்ய நன்கு பிசைந்து உருண்டை கட்டிய மண்ணில் பொம்மையின் தலையையும் இடையையும் மாத்திரம் மசித்து உருட்டியது போல் தடக்.. தடக்.... என்று என்ன ஒய்யாரமான ஆட்டம். அனைத்தையும் துறந்த துறவி போல், துளிர்த்து கிளம்பும் வியர்வைகள் எல்லாம் அதன் துவக்கத்திலேயே நீராவியாகி கரிந்து போகும் மெல்லிய சுகம் மூன்றாம் எண்ணில் நம் வியர்வை துவாரங்கள் அனைத்தும் மோட்சம் கொள்ளும். இதற்க்கு மேலும் சில எண்கள் ரேகுலடோரில் இருந்த போதும். ஏனோ அவை இயங்குவது இல்லை.

இப்பொழுது என்னால் ஓரளவு கண்களை திறக்க முயற்சிக்க முடிகிறது. இமைகள் ஒட்டிய திரை கிழித்து வெளிச்சம் உள்ளே புகும் முன் மீண்டும் அவை ஒட்டிக்கொண்டு விடுகின்றன ம்ம் இன்னும் என் புற கண்கள் புலர நாற்பது நிமிடங்கள் ஆவது பிடிக்கும். இது தான் கற்பனை களியாட்டம் போடும் நேரம். இன்னும் அந்த குளுமையான தழுவலை உணர்கிறேன். மனித இனத்தை தவிர மற்ற அணைத்து உயிர் உள்ளவைகளும்.. உயிர் அற்றவைகளும்.. அதன் செயலை எதற்காகவும் யாருக்காகவும் நிறுத்தி கொள்வதில்லை. நாம் கடந்து செல்லும் ஒவ்வொன்றும் இல்லை நம்மை கடந்து செல்லும் ஒவ்வொன்றும் மனித இனத்துக்கான ஏதோ ஒரு செய்தியை தாங்கி கொண்டு வருகின்றன. காற்றாடிகளின் சேவையும் அது போல் தான்.

ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தேன். பொதுவாக பசியை தாங்கும் வல்லமை என்னிடம் இல்லை. அன்று என் குடல் சுருங்கி விரியும் சத்தத்தை என்னால் நன்றாகவே கேட்க முடிந்தது. ஏதோ ஒரு அமிலம் என்னுள் குடம் குடமாக சுரந்து கொண்டு இருந்தது. அப்பொழுது என்னை கடந்து சென்ற மரங்களும் செடிகளும் அவியலாகவும், பொறியலாகவுமே தெரிந்தன. என்னை உரசிய தென்றல் திரவ வடிவில் இருந்திருந்தால் அப்படியே உறிஞ்சியேனும் குடித்திருக்கலாம். திருமணமான புதிதில் மனைவியை தேடும் கணவனை போல் அடுப்பறை பாத்திரத்தில் எனக்கான உணவை மூர்கமாக தேட முனைந்தேன். அந்தோ பரிதாபம்! தீ மிதித்து இறங்கிய இளம் பெண்ணின் பாதம் போல் அணைத்து உணவுகளும் மிக சூடாக பரிமாறப்பட்டன. என் பசி ஆரவேண்டுமாகின் முதலில் அந்த உணவு ஆறவேண்டும். மெல்ல ஏன் தலையை உயர்த்தி பார்த்தேன், நேற்று இரவு முழுவதும் உழைத்து களைத்த போதும் அதை அணைக்க மறந்த இந்த இரக்கமில்லா கருங்காலிக்கு தன் ஒப்பற்ற சேவையை புன்னகையுடன் ஆற்றி கொண்டு இருந்தது அந்த காற்றாடி.

நான் பிறக்கும் முன்னே இந்த உத்திரத்தில் வௌவால் போல் தொங்கி கொண்டு, இன்று எனக்கும் சாமரம் வீசியபடி இருக்கும் இந்த காற்றாடி எத்தனை பார்த்திருக்கும். ஆனால் நிச்சயம் எதையும் சுவரசியமாக பார்த்திருக்காது. வேண்டுமானால், வந்த புதிதில் ஏதோ ஒன்று இரண்டு பார்த்திருக்கலாம் அவ்வளவுதான். ஆனால் இதன் நண்பர்களும் உறவினர்களும் இன்று எந்த உத்திரத்தில் தொங்கியபடி எதனை விவகாரங்களை பார்த்துகொண்டு இருகிறார்களோ? நாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்து பல கிசு கிசு களையும், ரகசியங்களையும் பரிமாறி கொள்வது போல் இவைகளும் சந்தித்து கொண்டால் அடேயப்பா!!!

இந்த காற்றாடி இதற்கு முன் பிறவியில் என் நண்பனாகவோ இல்லை நான் விரும்பி படிக்கும் புத்தகத்தின் எழுதுக்கலாகவோ இருந்திருக்க கூடும். இதை நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு, நான் அற்ற வேண்டிய செயல்களை கடமைகளை யாருக்காக நிறுத்தி வைத்தேனோ அவர்கள் என்னை புறக்கணித்து அவர் கடமைகளை செயல்களை செய்கிற போது. என்னை போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது என்று வருந்தி இருக்கிறேன். ஒரு நண்பனை போல் அந்த வருத்தத்தையும் என்னிடம் இருந்த போக்கிய அதிசயம் இந்த காற்றாடி. தான் இன்றோடு நிராகரிக்க பட இருக்கிறோம் என்பதை தெரியாமல் எனக்கும், என் அரை சுவற்றில் கூடுதல் செங்கலாய் ஒட்டி கொண்டு இணைப்புக்காக காத்திருக்கும் அந்த குளிர்சாதன பெட்டிக்கும் தன் உண்மையான சேவையை ஆற்றி கொண்டு இருந்தது. ஏனோ இப்பொழுது என்னை தீண்டிய அந்த காற்றில் குளுமையுடன் சேர்ந்து உப்பு கரிப்பின் பிசு பிசுப்பும் வந்து ஒட்டி கொண்டது. இப்பொழுது மனமும் கண்களும் நன்றாகவே விழித்து கொண்டது இனி என்னால் உறங்க முடியாது.....!!!!