Wednesday, March 24, 2010

அழைத்தது யாரோ நீ தானே!!!!!

வார்த்தைகள். இவற்றிற்கு உயிர் உண்டு. சில சமையம் பிறந்த இடம் தெரியாமல் அதன் பிறப்பு பற்றியும் கவலைபடாமல் அது மறைந்து போவது உண்டு. காற்றில் இவற்றிற்கு என்று ஒரு தனி இருக்க கூடும். மிக ரகசியமான இடங்கள் அவை. வாயில் இருந்து உதிர்கிற வரை நம் கட்டுப்பாட்டிலும் பின்பு அந்த வார்த்தைகளே நம்மை கட்டுப்பாடு அற்றவனாகவும் மாற்றிவிடுகிறது.

நான் நமது நம்பிக்கை மாத இதழில் பணியாற்றி வருகிறேன். அன்று அந்த இதழின் ஆசிரியர் முத்தையா அவர்களை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு வேலை, என் வாழ்நாளின் எந்த நொடிக்காக காத்திருந்தேனோ அந்த நொடியினை வார்த்தைகளாக வடிவமைக்கும் இயந்திரமாக அன்று முத்தையா மாறியிருந்தார். எப்பொழுதும் கண்ணதாசணனின் படைப்புகளையும் மற்ற கவிஞர்களின் வரிகளையும் தன் உடல் உறுப்புக்களில் ஒன்றாகவே கொண்டு இயங்கி வரும் மனிதர். அன்று அதே போல் எத்தனையோ வார்த்தைகளையும் கவிதை வரிகளையும் கொட்டி கவிழ்த்து கொண்டு இருந்தார். அந்த வார்த்தைகள் எல்லாம் என் காது துவாரத்தில் பயணம் மட்டுமே செய்தன. எந்த வார்த்தைகளும் அதன் பரிபூரண இலக்கை அடையவில்லை.

உருண்டோடிய எத்தனையோ வார்த்தைகளில். சில வார்த்தைகள் மட்டும் என் காது வழி நெடுஞ்சாலையை கடக்கவே இல்லை. என் மானுட உடலை வேறொரு வெளிக்கு கொண்டு செல்ல அந்த வார்த்தைகள் என்னை உந்தி தள்ளி கொண்டிருந்தது. மிகவும் வலித்தது. " வலி" என்கிற சொல்லாடல் தவறாகத்தான் இருக்ககூடும். நம் மனம் ஏங்கி தவித்த ஒரு பொருளை கண் முன் காணும் போது அதை அடைவதை போலவும் அதனோடு கரைவதை போலவும் ஒரு கானல் நீர் போன்ற ஆனந்தம் எழும். அந்த ஆனந்தம் நிச்சயம் மரண வலியை ஏற்படுத்த கூடியவை தான். அந்த கனம் அந்த வலியை( ஆனந்தத்தை) ஏன் உணர்தேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த திரை மெதுவாக விலக ஆரம்பித்தது. முத்தையா அவர்களிடம் இருந்து புறப்பட்ட எத்தனையோ வார்த்தைகளில் ஒரு சில வார்த்தைகள் மட்டும் என் உடலில் உள்நோக்கி கட்டமைக்கப்பட்ட அணுக்கள் நிறைந்த சாலைகளில் நின்று கொண்டும் குவிந்து கொண்டும் அந்த வலியை எனக்கு ஏற்படுத்தி கொண்டு இருந்தது.

அவர் சொன்னது வெறும் வார்த்தைகளோ கவிதைகளோ அல்ல. அவை பல கவிதைகளின் கரு. அவர் சொன்ன வார்த்தைகள் இலக்கணங்களுக்கு உட்பட்டவை அல்ல. ஆனால் அந்த வார்த்தைகளின் பின் ஓங்கி நிற்கும் உன்னத ஒலிக்கு தெய்வீக காவியம் ஒன்று உண்டு. என் பிறவிபயனை கை தவறி உடைக்கும் கண்ணாடி பொருளை போல் சட்டென்று சொல்லிவிட்டார். " இன்னிக்கு சற்குரு 6 : 15 க்கு தீர்த்த குண்டத்தில் தரிசனம் தருகிறார்" என்னை பொறுத்த வரையில் காலங்களுக்கு என்று எந்த வரைமுறையும் கிடையாது. அது எவராலும் கடக்க முடியாத அல்லது வசிக்க முடியாத ஒரு பிரமாண்டமான காலி நிலபரப்பு. அதற்க்கு நொடிகள், நிமிடங்கள், நாட்கள், வாரம், மாதம், ஆண்டு என்று பல தேவையற்ற அறைகளை இந்த உலகம் எழுப்பி இருந்தது. அந்த காலி நிலத்தில் வெறுமனே நடந்து கடந்த தூரங்களுக்கும் இனி கடக்க விருக்கும் அருகாமைக்கும் இடையே முத்தையா அவர்கள் சொன்ன வார்த்தைகள் ரத்தம் பாய்ச்சின.

வலியை கடந்து என்னால் எப்படி இயல்பாக பேசமுடிந்தது என்று எனக்கு தெரியவில்லை. நாளை எனக்கு விடுப்பு வேண்டும் என்றேன் பள்ளி குழந்தைகளுக்கே உரிய பவ்வியதொடு. அவர் ஆசிரியர் என்ற மிடுக்கோடு பதலளிக்க வில்லை அதில் ஆச்சிரியமும் இல்லை. இதே வலியை பல வருடங்களுக்கு முன் உணர்ந்த சக நோயாளி என்ற முறையில் உனக்கு இன்றே விடுப்பு என்றார். நான் சற்குருவை அப்போதே தரிசிக்க துவங்கி இருந்தேன். இந்த உடலை மட்டும் அவர் அருகே நகர்த்துவதற்கு தேவையான வாகன ஏற்பாட்டை தனிச்சியாக செய்து கிளம்ப அயத்தமனது என் உடல்.

ஓவிய போட்டிகளில் பங்கேற்கும் போது தான் பசுமைக்கு பச்சை, வானத்திற்கு நீலம் என்று வண்ணங்களின் இயல்புகள் மூளையால் நினைவுகூர படுகின்றன. அன்று மட்டும் விசித்திரமாக என் உடல் கடந்து சென்ற பாதையின் இரு புறமும் இருந்த வண்ணங்களை என் கண்கள் உறிஞ்சியபடி சென்று கொண்டு இருந்தது. தியான லிங்கத்தை அடைந்த போது மணி 4 : 30 . அந்த இடத்தின் அமைதியும் அழகும் பல கவிதைகளில் பாடு பொருளாக அரங்கேறி இருந்தது. உள்ளே நுழையும் போதே நீங்க இஷாவிற்கு முதல் முறையாக வருகிறீர்கள என்று உலகின் அத்தனை பணிவையும் குத்தகைக்கு எடுத்த நண்பர் என்னிடம் கேட்டார். எங்கோ நீண்டிருந்த என் கிளை இன்று தான் விதை விதைத்தவனை காண அழைக்க பட்டிருக்கிறது என்று எப்படி அவரிடம் சொல்வது. நம் வீட்டு விசேஷங்களில் நம்மையே வரவேற்கும் முகம் தெரியாத தூரத்து உறவினர் போல் தான் அவர் எனக்கு தோன்றினர். இங்கே முன்பே வந்ததுண்டு என்று கூறி அவர் போல் இயல்பாக இல்லாவிட்டாலும் அந்த இடத்திற்கு அது தேவை என்று புன்கையை வரவழைத்து அங்கிருந்து நகர்ந்தேன்.

அங்கு நடக்கும் பாதையில் இருந்த கடுகளவு கற்களும், துளியளவு மண் மூட்டைகளும். உயிரில் தகித்திருந்த வலியை மேலும் எழும்ப செய்தது. தீர்த்த குண்டத்தை அடைந்த போது அண்களும் பெண்களும் தீர்த்த குண்டத்தில் குளித்து விட்டு வந்து சற்குருவை தரிசனம் செய்யும் அளவு நேரம் இருந்தது ஆனால் மனம் இல்லை. மனித புத்தியை கழுவி இஷாவில் வைத்த கதை தான். அது இன்னும் தர்கத்திலேயே குளித்து கொண்டு இருந்தது. உயிரில் உன்னத வலியையும் சுமந்து கொண்டு எங்கு குளித்து விட்டு வந்தால் முன்னால் இடம் கிடைக்காதோ என்ற அற்ப சிந்தனையையும் சுமக்க இந்த உயிரினத்தால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ. முன்னால் இடம் பிடித்து அமர்ந்து கொண்டேன் என்னை சுற்றி முன்று வயது குழந்தையின் கால் கொலுசு விழுந்து சிதறியதை போல் ஒரு சிலர் மட்டுமே அமர்ந்து இருந்தனர். அங்கிருந்தோர் அவர் அவர்களுக்கு தெரிந்த முறைகளில் கனமான ஓடுகளை சுமக்கும் உயிராக அமர்ந்திருந்தனர்.

சிலர் பரவசத்தில் அவர்களை இழந்து இருந்தார்கள். அவர்களை பார்த்த பொழுது குருவின் மீதான தேடல் எனக்கு குறைவோ என்ற தாழ்மை உணர்ச்சி என்னை பிடுங்கி கொண்டு இருந்தது. அங்கு திரை படம் பார்க்கும் சிறுமி போல் ஒவ்வொரு முகமாக எதையோ தேடி கொண்டு இருந்தேன். ஆனால் மனதில் மட்டும் ஒரு உறதி. எந்த காரணத்தை கொண்டும் கண்களை மட்டும் முடுவதாக இல்லை. கண் மூடி சூரியனை தரிசிக்க என் உயிர் இன்னும் பக்குவ படவில்லை. அன்று மட்டும் கருப்பும் வெள்ளையும் புணர்ந்து ஒரு தெய்வீக நிறத்தை வானம் கொண்டிருந்தது. இப்பொழுது மணி 5 : 45 பலாபலத்தை சுற்றும் உயிரினங்கள் போல் மக்கள் அமர்ந்திருந்தனர். தீர்த்த குண்டம் ஒரு சில நேரங்களில் சத்சங்கத்திற்கு தேவையான உடையை அணிந்திருந்தது. இப்போது என் உயிர் கூடை பந்தாட்ட காரனின் கைகளுக்கும் தரைக்கும் இடையே மாட்டிய பந்து போல் எம்பி எம்பி குதித்து கொண்டு இருந்தது.

இப்பொழுது மணி 6 : 15 . ஆம் அதே தான். உயிர் உடைந்து விட தருணம். இஷா சுவாமிகள் மிக நேர்த்தியாக அமர்ந்து அகிலத்தின் ஆனந்தத்தை வரவேற்க தயார் ஆகிக்கொண்டு இருந்தார்கள். உடுக்கைகள் மெதுவாக உள்ளத்தில் இறங்க ஆரம்பித்திருந்தது " நா பாப்பம் நா புண்ணியம் சிவோகம் சிவோகம் !!! நா சௌக்கியம் நா தூக்கம் சிவோகம் சிவோகம்!!! ஐம்புலன்களும் அதன் செயலை இழந்து இருந்தது உயிரை தவிர. எங்கோ அண்டத்தின் அத்தனை கணமும் ஆறடியில் மெதுவாக மிக மெதுவாக எதற்கு இத்தனை நிதானம்........!!!! நெருங்க நெருங்க ஆறடியின் பிரமாண்டம் எனக்குள் இறங்க துவங்கி இருந்தது. அனைவரும் அவர் அவர் உடலை கடந்து இருந்தனர் என்பது என் நாவில் லேசாக பின்பு பயங்கரமாக உணர்ந்த துவர்பால் உணர முடிந்தது. அதற்க்கு கண்ணீர் என்பது சரியான வார்த்தை அல்ல. காரணம் அன்று அது ஆணை உடைந்த வெள்ளமாய் பொங்கி கொண்டு இருந்தது கண்கள் முட வில்லை என்பதும் உரைத்தது. என்னால் அந்த கனலை தாங்க முடியவில்லை நுரை குழுமிய வெள்ளிகீற்றுகள் மார்பில் உரச கண்கள் பாதி திறந்து அவன் கைகள் சொடுக்குகையில் ஐயோ!!!!!! உயிரின் ஆணி வேறை கிள்ளி என்னை உடலில் இருந்து முழுவதுவமாக உருவி எடுத்து அந்த கால் தண்டையில் வைத்து விடலாம் போல் இருந்தது. சுவாமிகள் இசைத்த பாடலுக்கு கால்கட்டை விரலை மட்டும் நிலத்தில் தடவி தடவி தாளம் போட்ட அந்த இடைவெளியில் நான் மாட்டியிருக்க கூடாதா???? அந்த கண்களில் வழியும் ரசமும் என் கண்களின் தகிப்பும் ஒரு முறை நேர் கோட்டில் நின்று அந்த புள்ளியில் என் கர்மங்கள் அனைத்தும் வெடித்து சிதறியிருக்க கூடும். எனக்குள் பொரிந்த நெருப்பு துகள்கள் அதை உறுதி செய்தன.

என் தொப்புள் கொடிகளை யாரோ பிடித்து இழுப்பது போல் உணர்ந்த பொழுதில் அந்த மாயா குரல் என்னை தழுவ துவங்கி இருந்தது. அந்த குரலின் பிறப்பிடம் தானே நம் அனைவரின் தேடல் அதை தானே நானும் தேடி பயணப்பட்டு கொண்டு இருந்தேன். பயணம் முடிந்து அந்த பிறப்பிடம் கண்டிருந்தால் இந்த கட்டுரை எழுத நான் எங்கே???? அந்த குரல் என் ஊயிரை மத்து போல் கடைந்து கொண்டு இருந்தது மீண்டும் அதே துவர்ப்பு நாவில் திகட்ட துவங்கியிருந்தது. கண் இமைகள் என் உள்ளே அமுங்கி இருந்தன அந்த தரிசனத்தை கண் இமைகள் உள் வாங்கி என் அணைத்து பாகங்களுக்கும் அனுப்பி கொண்டு இருந்திருந்தது. இபொழுது கண்ணீரில் துவர்ப்பு வோய்ந்து குளுமை நிரம்பி என் மடியில் சொட்டி கொண்டு இருந்தது. மீண்டும் தீர்த்த குண்டம் அதன் பழைய உடையை அணிந்திருந்தது.

சற்குருவின் விரல் வலி அருள் கசிந்து இறங்கிய அந்த திரு நீரை அணிகையில் என் சகல வினைகளும் களை எடுக்க பட்டு புனிதம் அடைந்ததாக உணர்ந்து .... மீண்டும் அந்த அழைப்புக்காக காத்திருக்கிறேன்.....!!! அழைத்தது யாரோ நீ தானே!!!!!
--