Wednesday, September 22, 2010

ஆழிப்பெண்


மார்கழி பனிக் கோர்த்த மெத்தை என்று
என்னை இத்தனை நாளும் கொஞ்சி நின்றார்.
என்னுள் இருக்கும் முத்தெடுக்க நிதம்
கத்தும் கடலலை போல வந்தார்.

என் கைகள் விரித்து காத்திருந்தேன்.
என் உடல்நீர் சோற பூத்திருந்தேன்
நான் தேடிய மலரின் மகரந்தம்
என்று என் வாசல் வருமேன பார்த்திருந்தேன்.

இறந்தவர் துகள்தனை என்னில் கரைப்பதை போல்
என் கால சொப்பனம் கரைந்ததடி.
கதறிஎழும் கடலாய் இங்கு கொதிக்கின்றேன் - பாவி
என் கனவை மீட்டிட வழி சொல்லடி

அன்று என்னின் அழகு என் அலைகள் என்றோர்
இன்று கரிக்கும் நீரேன உமிழ்ந்து விட்டார்.
அதற்கு நன்றிகள் பல சொல்லி தேம்புகின்றேன்
எனக்கு ஆறுதல் சொல்வோர் யாரோடி!

அஞ்சனம் அழிய கதறுகையில் இங்கு
கங்கையும் கொஞ்சம் கசந்திடுவாள்
ஆழி நான் அலையாய் கொதிக்கையிலே
யார்தான் என்னில் கால் நனைப்பார்!

என் கரைக்கு வந்தோர் இன்புறவே
அழகாய் வாழ்ந்திட்ட வேசியும் நான்.
இனி எந்தநாளும் கடல் புக முடிய
என் கரையைக் கடந்திட்ட அலைதான் நீ!!