Monday, September 29, 2014

அர்ப்பணம் - 3

விருட்சத்தின் மீது ஊர்ந்துசெலும் – எறும்பால்
அதன் தவம் கலையாது
தீஞ்சுவை நல்கயெனை அழைத்துவிடு – உன்
குறுநகை இதழொன்றும் குலையாது
திசை தெரியாத தூசியென – அங்கும்
இங்கும் அலைகின்றேன்
உன் குழல்வழி வாசனையெனும் கசியவிடு
நல்பாங்குடன் நானும் வழியறிவேன்.

விடைத்த கம்பியுள் சூட்சுமமாய்
மறைந்து திரியும் ராகங்களே
புடைத்த வயிறுடன் மிதந்தலைந்து – மழையை
எங்கோ பிரசவிக்கும் மேகங்களே
கருணையும் பொறுமையும் அவள் வேதம்
ரெளத்திர மேனி அவளிடும் வேடம்
அந்த மாயவி புகழை பாடுங்கள் – அவள்
அருளை கூதழாய் தூவுங்கள்
கொண்ட காதலில் மோகத்தில் போகத்தில்
சரிந்திடும் பம்பரம் போலே சுழல்கின்றேன்
மீண்டதாய் விரைந்து எழுகையிலே
பல்லாங்குழியுள் சோளியாய் மறுபடி வீழுகிறேன்
சீண்டிடும் வினையால் சோர்ந்துவிட்டேன்
பைரவி உன் கழல் காட்டிடடி
உன் கன்னக்குழியின் எழில்கூட – பக்தனொதுங்கும்
கரை போல் இக்‌ஷணம் தோணுதடி
 

செங்கதிர் சிந்திடும் இளஞ்சிவப்பில்
செம்மரி தந்திடும் கதகதப்பில்
குங்குமசிமிழின் லக்ஷ்ணத்தில் – என்
போதை தொலைந்தது இக்கணத்தில்
பல யுகம் சுழன்ற மோனந்தனை –
காட்டுது உன் சுழல் மூக்குத்தி
அகமும் புறமும் அமிழ்ந்தடங்க
இப்பிறவியிலாவது வாய்க்கட்டும்
வழங்கடி தேவி என் முக்தி
Saturday, September 27, 2014

அர்ப்பணம் - 2

அர்பணம் செய்யும் தேடலிலே
சொப்பணம் கண்டேன் தேவி
கர்பம் தரிக்கும் கும்பம்தனில்-குழந்தையாய்
நர்த்தனம் புரிந்தாய் மாரி(றி)

அம்புலி காட்டி உணவளித்தேன் – என்
குண்டலம் அதுவென சொன்னாய்
வேம்பினை காட்டி கசக்கும் என்றேன்
கடையிதழ் பச்சைநீர்க்கசிய சிரித்தாய்


கருவழி வந்த குறும்பேடே- அம்மை
நானுனக்கு அழை என்றேன்
என் திருவடி பணிந்த சிறுதளியே – என்
விரலசை பொம்மை நீ என்றாள்வானம் தரித்த அஞ்சனத்தில் – அழுகையும்
அச்சமும் வருமென்றேன்
ஞான திறப்பை கொள்ளென்று- கரும்
மோகன மேனியாள் காட்சி தந்தாள்

செம்புனல் நொதிக்கும் தீயின் ஜுவாலை
சுட்டுவிடுமடி மஹராணி
நகைப்பை கூட்டும் பேச்சை குறைடி - அதென்
ஈரைவிரலின் மருதாணி


சேர்ந்ததை களைப்பதும், - களைத்ததை
உடைப்பதும் என்னே உந்தன் லீலை
சூழ்ந்ததை மீட்பது, வீழ்ந்த்தை கரைப்பது
அதுவே எந்தன் தினசரி வேலை

சொப்பணம் களைந்து துயிலெழுந்தேன்
அம்பிகை எங்கே போனாள்
இக்கணம் எந்தன் மடிமலர்ந்த – என்
மகளே அம்பிகையானாள்

Wednesday, September 24, 2014

அர்ப்பணம் - 1

நுதழ்நிறை திலகம் போதும்
நூராயிரம் பிறைகள் தோல்வியுற
உன் சலங்கையின் ஓர்பரல் போதும்
இந்த அகிலம் முழுவதும் லயித்துவிழ

மழையும் வெயிலும் உன் ஒப்பணைகள்
உன் நினைவால் கமழுமென் கற்பனைகள்
விரல் பட்டதும் அவிழும் பனித்துளிப்போல்
உன் பார்வையால் தெரிக்குது என் வினைகள்பரிதியும் குருதியும் இணைநிறத்தில்
தீர்க சுமங்கலி நீயிருக்க
கண்கள் கோடி யாசிப்பேன்
அனுஷணம் உனை நான் ரசித்திருக்க

அர்ப்பணம் செய்ய ஏதுமின்றி
நீ தந்த போதையில் கவி புனைந்தேன்
சர்ப்பமாய் வினைகள் விரட்டுதடி
பைரவி உன்கழல் சரணடைந்தேன்

Thursday, September 18, 2014


ஆசிகள் பெறுவதும் ஆனந்தம் கொள்வதும்
மனித மனதின் இயல்பு
நேசிப்பவர் வந்து வாழ்த்து சொல்வது|
அன்பை பெருக்கும் மரபு
பாசிகள் ஊறிடும் பச்சை குளத்தில்
மூலவர் மிதப்பது சிறப்பு
என் ஆசைகள் மிதக்கும் ஆகாயத்திற்க்கு
நீ வரும் திசையே கிழக்கு

நெல் மணி போலவே குள்ளக்கீற்றாய்
அசைகிறது அந்த தீபம்
அதற்கு முத்தமும் இல்லை நெருங்கி
அணைக்கும் மூச்சும் தொல்லை - ஏனோ
அதற்கு இந்த சாபம்
விட்டில் பூச்சியின் வீரியம் கூட
பாவம் அதற்கில்லை
சுடரை தூண்டிடும் விரலாய் - குரல் கசிந்திருந்தால்
விரிந்திருக்கும் அதனெல்லை

நிறங்களின் தன்மையறியா வரையில்
பட்டாம்பூச்சிக்கு வண்ணம் கூட
சுமை தான்.
கொண்ட அன்பின் ஆழம் விளங்கா
வரையில் இந்த களத்திலும் இதே
கதை தான்
வாழ்த்தினை விதைத்து வாழ்த்தினை
அறுப்பதால் இந்த முறையும் ஒருவகை
வினை தான்