Monday, September 29, 2014

அர்ப்பணம் - 3

விருட்சத்தின் மீது ஊர்ந்துசெலும் – எறும்பால்
அதன் தவம் கலையாது
தீஞ்சுவை நல்கயெனை அழைத்துவிடு – உன்
குறுநகை இதழொன்றும் குலையாது
திசை தெரியாத தூசியென – அங்கும்
இங்கும் அலைகின்றேன்
உன் குழல்வழி வாசனையெனும் கசியவிடு
நல்பாங்குடன் நானும் வழியறிவேன்.

விடைத்த கம்பியுள் சூட்சுமமாய்
மறைந்து திரியும் ராகங்களே
புடைத்த வயிறுடன் மிதந்தலைந்து – மழையை
எங்கோ பிரசவிக்கும் மேகங்களே
கருணையும் பொறுமையும் அவள் வேதம்
ரெளத்திர மேனி அவளிடும் வேடம்
அந்த மாயவி புகழை பாடுங்கள் – அவள்
அருளை கூதழாய் தூவுங்கள்




கொண்ட காதலில் மோகத்தில் போகத்தில்
சரிந்திடும் பம்பரம் போலே சுழல்கின்றேன்
மீண்டதாய் விரைந்து எழுகையிலே
பல்லாங்குழியுள் சோளியாய் மறுபடி வீழுகிறேன்
சீண்டிடும் வினையால் சோர்ந்துவிட்டேன்
பைரவி உன் கழல் காட்டிடடி
உன் கன்னக்குழியின் எழில்கூட – பக்தனொதுங்கும்
கரை போல் இக்‌ஷணம் தோணுதடி
 

செங்கதிர் சிந்திடும் இளஞ்சிவப்பில்
செம்மரி தந்திடும் கதகதப்பில்
குங்குமசிமிழின் லக்ஷ்ணத்தில் – என்
போதை தொலைந்தது இக்கணத்தில்
பல யுகம் சுழன்ற மோனந்தனை –
காட்டுது உன் சுழல் மூக்குத்தி
அகமும் புறமும் அமிழ்ந்தடங்க
இப்பிறவியிலாவது வாய்க்கட்டும்
வழங்கடி தேவி என் முக்தி




1 comment:

  1. very nice lines.,lord durga have blessed you good tamil.,
    best wishes

    ReplyDelete