Tuesday, January 19, 2010

COFFEE TIME - கிருக்கல்கள்

எத்தனை கொடுமையான காலங்கள் அவை இருட்டறையில் தனி கைதியாய். குற்றம் செய்து பிடிபட்ட குற்றவாளிகளுக்கு கூட விலங்குகளை அவிழ்த்து விட்டுத்தான் சிறையில் அடைப்பார்கள். நான் என்ன பாவம் செய்தேனோ நான் மட்டும் விலங்குகள் சுமந்தே இந்த சிறையில் சுற்றி சுற்றி விழுந்து கிடக்கிறேன்.

அய்யோ பசித்து தொலைக்கிறது! என்னை சுற்றியுள்ள விலங்குகளையே தின்று விடலாம் போல் பசிக்கிறது. எதாவது கொடுத்து தொலைங்களேன் என்று நான் கத்திய பொழுதெல்லாம் வெறும் புளித்த அமிழத்தை என் முகத்தில் தெளித்த அந்த கொடுமைகாரர்களை வதைக்க வேண்டும் போல் இருந்தது. என்னை சிறையில் அடைத்த அந்த அட்டுழியக்காரர்களின் முகத்தில் காரி உமிழவேண்டும் போல் இருந்தது.

எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை. உண்பதும் உறங்குவதும் அட கழிப்பதும் ஒரே அறையில் தான். அதை விட கொடுமை அனைத்திற்க்கும் ஒரே நீரை பயன்படுத்துவது.. அடச்சே இந்த நீரில் எத்தனை நாட்கள் தான் நானும் துற்நாற்றமும் மாறி மாறி மிதப்பது...மூக்கை பொத்தலாம் என்று தோன்றியது. அய்யோ முக்கையா? இப்போதைக்கு வயிராற உட்கொள்வது காற்று ஒன்று தான் அதை மூடிகொண்டால் என்னாவது..!!

ஏன் செத்து தொலையேன் என்றது மனம். இருப்பினும் சாட்டையவிழ்க்கப்பட்ட பம்பரத்தின் கூர் முலை காம்புகளை போல என் நடு வயிற்றில் வாழ வேண்டும் என்ற ஆசை நறு நறுவேன சுழல்கிறது..நாட்கள் செல்ல செல்ல என்னில் எதோ மாற்றம். சிறையில் இருப்பவர் நலிந்து போவார். நான் மட்டும் புலர்ந்து போனேன். எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்ற நப்பாசை.. சுவற்றின் அத்தனை கற்களையும் ஏறி மிதித்து அரைத்து வெளிச்சத்தின் துளியை தேட துவங்கினேன்.

சிறை சாலைக்கு வெளியே நல்ல மழையென்று நினைக்கிறேன்.. பிளவுபட்ட சுவற்றில் செங்கல் கரைந்து ஒழுகிகொண்டும் பெருகிகொண்டும் இருந்தது. நிச்சயம் தப்பிவிடலாம் என்று உறுதி செய்து கொண்டு பிராயாணப்பட்டேன். இப்பொழுது என்னை யார் சிறையில் அடைத்தார்கள் என்று மறந்து போயிருந்தது. எந்த வழியில் என்னை அடைத்தார்கள் என்று சுத்தாமாக நினைவில் இல்லை! எதோ நதிகள் இணைப்பு போராட்ட்ம் என்பது மட்டும் லேசாக நினைவில் உள்ளது..

சரி இப்போது எதை உடைத்துகொண்டு வெளியேறுவது முதலில் அத்தனை நீரையும் கொட்டி கவிழ்த்தேன் வழிந்தொடிய நீரின் பின்னே நானும் ஓடினேன் எதோ ஒரு அசைவு. அது தான் அதே தான் நான் தப்பிக்க வழி என்று முடிவு கட்டி முகூர்த்த நேரத்தில் முழங்குகிற மங்கல இசையின் போது மத்தளத்தை ஒங்கி உதைக்கிற விரல்களை போல நான் கண்டறிந்த பாதையில் முட்டி கொண்டிருந்தேன்.

சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அய்யோ.......!!!! மாட்டிகொண்டேன். என்னை காவலர்கள் கொத்தோடு தூக்கி வெளியே எரிந்தார்கள். தப்பிக்க முயன்ற என்னை இருக சுற்றியிருந்த விலங்குகளை கட்டிடத்திறப்பு விழா போல் வெட்டி தூக்கிஎரிந்தார்கள். என்னடா.. இது புதுமையாக இருக்கிறது தப்ப முயன்றவனுக்கு விடுதலையா என்று மகிழ்ந்த போது புரியாமல் காதில் நுழைந்த வார்த்தைகள் " CONGRATULATIONS!!! உங்களுக்கு சிசேரியன்ல ஆண் குழந்தை பிறந்திருக்கு"

எதோ குடுவையிலிருந்து தப்பி இன்று தான் உண்மையான சிறையில் மாட்டிகொண்டோமென்று என்று புரிந்து ஓவென அழுத என்னை BABY எவ்வளோ CUTE ஆ அழுகுது என்று என் கன்னத்தில் முத்தமிட்டால் வெள்ளை உடையணிந்த நர்ஸ்.....!!

Monday, January 18, 2010

தூரிகை

எழுத்துலக பிரம்மாக்கள் சஞ்சரிக்கின்ற இணையவெளியில் என்னையும் ஒரு கோளாக இணைத்து கொள்வதில் பெருமையடைகிறேன். இன்னும் எத்தனை நாட்கள்தான் இவர்களை இதமாய் கொளுத்தும் சூரியனென்றும்.. இருக்கமாய் கவ்வும் நிலவின் ஒளியென்றும்... எழுத்துலக ஆகாயத்தில் மின்னும் நட்ச்சத்திரங்களென்றும் வாய் பிளந்து நிற்பது என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்!!

நாம் ரசிக்கும் ஜாம்பவான்களின் முள்கிரீடத்தை பகிர்ந்துகொள்ளும் பேராசையில் எழுதுகிறேன்!!
எழுத்துலக பிதாமகன்களை நம்மால் எல்லாம் சந்திக்க முடியுமா என்று கேட்டு என்னையும் நலிந்தவர் பட்டியலில் சேர்த்து விட்ட கோபத்தில் எழுதுகிறேன்!!

எத்தனை நாட்கள் தான் பிறர் எச்சில் செய்து போட்ட கோட்டைகளை சப்பிகொண்டு மேடையில் பேச்சாளரென்று வலம் வருவது, என் பெயரில் ஒரு அருகம்புல்லெனும் நட்டு வைக்கவே இந்த இணையவலை முயற்சி...

என் வயதோருக்கு கம்பனும் கலிங்கத்துபரணியும் தெரியாமல் போனது எங்கள் குற்றமல்ல. தமிழை கற்றுகொடுத்து ஊதியம் பெறுவதை கூட ஒப்பு கொள்ளலாம். ஊதியம் பெறுவதற்காக டமிழை கற்றுகொடுக்கும் ஆசிரியர்கள் வாய்த்ததற்க்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களை பொறுத்த வரை குறுநாவல்கள் என்றால் குங்குமமும் ஆனந்தவிகடனும் தான்! சற்று முழுநீள நாவல்களென்று கொண்டால் கண்மணியயைம் ராணிமுத்துவையும் சொல்லலாம்!!

குற்றாலத்தில் ஐந்தருவி மட்டும் தான் ஸ்பெஷல் என்று பூகோளம் கற்றுகொடுத்த ஆன்றோர்கள் அந்த அருவியில் தோசையை நனைத்து சாப்பிட்ட ரசிகமணியையும் ராஜாஜியையும் அறிமுகப்படுத்தாது எங்கள் விதி! நாங்கள் வெற்றுக்கைகளுடன் அழைவதை டி.கே.சி தாத்தாவும், ல.சா தாத்தாவும் பார்த்து கண்டித்திருந்தால் நாங்களும் ஒரு வேளை கல்யாண்ஜியாகவோ கலாப்ரியாவாகவோ மாறியிருக்ககூடும்!

இன்று ஜெயமோகனையும் நாஞ்சிலையும் படித்துவிட்டு போதையேறி பித்துபிடித்து.. நானும் இந்த இணையவெளியில் மிதக்க ஆரம்பித்திருக்கிறேன். காதலன் அருகிலிருக்க அவன் கரம் பற்ற காந்த அலைகள் ரகசியமாய் ஈர்ப்பதைபோல்.. நானும் எழுத்தை நோக்கி ஈர்க்கப்ட்டவளாகி போனேன்!!

பள்ளி கல்லூரி நாட்களில் நான் தேடிய ஆசிரியர்கள் வாய்க்க பெறவிட்டாலும் சமீபத்தில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்து வைத்தவர்.. நமது நம்பிக்கை மாத இதழின் அசிரியர்..!!
பொதுவாக ஆசிரியர்கள் பாடத்தை சொல்லி கொடுத்துவிட்டுத்தான் தேர்வு வைப்பார்கள். இவர் பல கடினமான தேர்வுகளை வைத்து விட்டுத்தான் ஜெயமோகன் எழுத்துகளை என்னிடம் கொடுத்தார் (ஒரு வேளை உண்மையான ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்களோ??) எது எப்படியோ தேர்வு பெற்ற தைரியத்தில் நானும் பந்தையதில் பங்கேற்க்கிறேன். "PARTICIPATION IS FAR BETTER THAN WATCHING THE RACE"

அவருக்கு எம் பேனா பிசுபிசுத்து ஒழுகும் தமிழ் கூரும் நன்றிகள் பல பல!!!!!