Wednesday, January 25, 2012


மன்னிப்பு

அன்று வானத்தில் இரட்டை நிலவு.
அதன் திகம்பர தரிசனத்தில் வியர்திருந்தது உலகம்.
அந்த நொடி பொழுதில் எதற்க்கும் யாருக்கும் மன்னிப்பு அருளப்படும் என்ற அசரிரீ பின் வரிசையில் நின்றன...
என்னற்ற மணல் வீடுகளை இடித்து தள்ளிய அலைகள்.
குலைமுற்றிய வாழை இலைகளை கிழித்துவிட்டதாய் காற்று
கொத்தி வந்த மகரந்தத்தை தவறவிட்ட தேனீக்கள்
யாராலும் ஸ்பரிசிக்கப்படாத புல்லாங்குழல்கள்
பட்டாம்பூச்சிக்கு வண்ணம் பூசும் கடவுளும் - அவற்க்கு பின்
என்னை காயப்படுத்திவிட்டதாக நீயும்.
உன்னை எப்போதும் காயப்படுத்தும் நானும்.

வித்தியாசம்

இந்த நொடிக்கும் அடுத்த நொடிக்குமான வித்தியாசம்
இந்த நொடி இருக்கும் நீ
அடுத்த நொடி இருக்கமாட்டாய் என்பது மட்டும் தான்.
இந்த நொடிபொழுது வித்தியாசம்
எனக்கு சில கோடித்தவிப்புகளை தருமென்றால்
நீ என்னோடே  இருந்திருக்கலாம்.
இல்லை நான் உன்னோடு இல்லாமலையே இருந்துவிடலாம்.

தேவதை


ஒரு கையில் கோடாரியும்
மறுகையில் மண்வெட்டியும் ஏந்தி
அவன் மனதை வெட்டி பிளந்து பிளந்து - அந்த அடிமனதில் மண்டிகிடக்கிற மண்ணை கொத்தும் தேவதை நான் தானாம்.
இப்படியும் காதலியை வர்ணிக்கலாமாம்.
இல்லை என்னை இப்படித்தான் வர்ணிக்கவேண்டுமாம்.
தேவதை இப்படி தான் இருப்பாளா என்ற என் சந்தேகத்தை விடவும்
தெளிவாக தெரிகிறது.
நிச்சயம் உன் மனதை கத்தரிக்க கோடாரியும் மண்வெட்டியும் கொஞ்சம் அதிகம் தான் என்று.
வெண் சங்கு

வெண்சங்கின் மேல் வழுக்கி தவழும் கொழகொழப்பான
வெள்ளை நிறம் அவனுக்கு.
அந்த சங்கின் கடையோரத்தில் கச்சிதமாய் வெடித்திருக்கும் அந்த
இளஞ்சிவப்பு இதழ்களும் அவனுக்கு சாலபொருந்தும்.
என் இரைச்சலுக்கு
இசைக்கு...
எனக்குள் குவிந்திருக்கும் குழந்தைத்தனத்தின் உச்சத்தில்
போட்டு உடைக்கும் தெரிப்புகளுக்கு.....
என அனைத்திற்க்கு பின்னாளும்
ரீங்கரித்து என்னை பின்தொடர்வது
அந்த வெண்சங்கும் அவனும் மட்டும் தான்.


கூதல் காற்று

முந்தைய பிறவியின் உயிர் வாசத்தை ஏந்தி
என் வாசல் வந்தது கூதல் காற்று.
அருகில் அமர்ந்து மெல்ல என் மேல் ஊர்ந்து சென்றது.
பெயர் கேட்டேன் காதல் என்றது.
என் மேலும் பின் எனக்குள்ளுமாய் ஊர்ந்து சென்று
இன்று நானாகவே மாறிவிட்டிருந்தது அந்த கூதல் காற்று.
எனக்குள் நுழைந்ததாலேயே என் உடலின் எல்லையை தாண்ட அனுமதித்த இல்லை நான்.
இன்று நான் அனுமதித்தாலேயே வழி இருந்தும் போக மறுக்கிறது கூதல் காற்று.
இல்லை என் காற்று.
எனக்கு சொந்தமான காற்று.

No comments:

Post a Comment