Thursday, January 12, 2012

அப்பார்ட்மெண்ட் கதை

லிப்டின் வழியே கனமான பொருட்களை மிகுந்த கவனத்துடன் இறக்கி கொண்டிருந்தோம். வீடு மட்டும் புதிதல்ல, இந்த லிப்ட,. லிப்டில் இருந்து சமான்களை இறக்குவது,  இந்த அப்பார்ட்மெண்டின் மெயின் கேட்டில் நுழைகையில் செக்யூரிட்டி சல்யூட் அடிப்பது என அனைத்தும் புதிதாகவே இருந்தது.

அடுக்குமாடி கட்டிடக்கலையில் ஒரு விதமான ஆஸ்பத்திரி வாடை. இங்கு மட்டும் தான் சாத்தியிருக்கும் கதவுகளுக்கு பின் எந்தெந்த முகங்கள், எத்தனை உயிர்கள், ஒவ்வொறு கதவுக்கும் பின்னான கதைகள் என எதை பற்றியும் மனம் கவலை படுவதில்லை. இப்போதைக்கு நம் உயிர் பிழைத்தால் போதுமானது என்றும், அவ்வப்போது லேசாக திறந்திருக்கும் கதவுகளின் இடுக்கு வழி... கண்களின் ஒளியை கூடுமானவரை பாய்ச்சி... காலில் கட்டிருந்தால் விபத்து, பெண்ணின் அருகில் தொட்டில் இருந்தால்.."பிரசவம்ம்ம்... போல...." என்று கதைகளின் முடிச்சுகளை பின்னலிடுவது ஆஸ்பத்திரியின் சுவாரஸ்யம். அதைபோலவே இருப்பதாலோ என்னவோ இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கும் ஆஸ்பத்திரியின் சாயல். 

இதற்கு முன்பு கோவையில் வசிக்கும் போதெல்லாம்.. "புஷ்பாக்கா வீட்டுக்கு எதுக்க இருக்க மாவுமில்". "ராஜி பாட்டி வீட்டுக்கு ஒட்டுனாப்பல இருக்க பைப்பு குழாய்" என்று வழித்தடங்களை கூட மனிதர்களின் முகங்களை கொண்டு தான் அடையாளம் சொல்லுவாள் அம்மா. ஆனால் இங்கு மனிதர்களின் விடவும் எண்கள் தான் அதிகம் பேசுகின்றன. சில மாதங்கள் இருக்கும். அப்போது தான் அம்மாவை முதன் முறையாக இந்த வீட்டுற்க்கு அழைத்து வந்து "இங்க தான் புதுசா குடியேறப்போறோம் என்றேன்." ஆனால் அவள் சேட்டையோ அப்பார்ட்மெண்டின் வலது புற கேட்டில் அன்றே ஆரம்பமாகி விட்டது.

வரவேற்ப்பில் வைத்திருந்த என்னற்ற செடிவகைகளில்,  அம்மாவின் கண்களை விடவும் சிறுத்திருந்த மணத்தக்காளி பரித்ததோ..? இல்லை இவள் அதை பரித்தாளோ....கொஞ்ச நேரத்திலேயே லத்தியுடன் கன்னடத்தில் மிரட்டினார் செக்யூரிட்டி. அன்று அரண்டவள் தான்.... இன்று குடியேறும் நாள் வந்தும் இன்னும் அவள் மிரட்சி நீங்கவில்லை.

"வீட்ட பாத்திருக்காலாம் வீட்டை. எதுகளாச்சும் கதவ திறக்குதுகளா பாரு..., பக்கத்துல எழவு விழுந்த கூட தெரியாது போல..., .."

"அதெல்லாம் தெரியும் உள்ள இண்டர்காம் இருக்கு. அதெல்லாம் அக்கம் பக்கம் பேசிக்கலாம்."

"எத எழவு விழுந்ததையா..."

"ஏம்மா முத நாளும் அதுவா எழவுங்குகிற...."

"பின்ன வீடா இது.. சும்மா பெட்டி பெட்டியா இருக்கு. ஒரு வாச, ஜன்ன கதவு வேணா! பக்கத்துல இருக்கறது குமரியா கிழவியான்னு காண வேணாம்." என்று சிலிண்டரை தூக்கிய வாறு தம் கட்டி நடந்த எங்கள் இருவரின் கைகளிடையேவும் கனத்தை விடவும்.. அவள் புலம்பல்கள் இதமாக இருந்தன.

அந்த முதல் தளத்தில் முற்றத்தில் எங்கள் ப்ளாட். அதை ஒட்டியிருந்த கம்பியில் கைகளை ஊன்றியபடி சரிந்து நின்றிருந்தாள் அந்த பெண். அருகில் நெருங்கும் வரை வயதை யூகிக்க முடியவில்லை. ஆனால் தொலைவில் இருந்தும் பளீரென தெரிந்தது மதியம் இரண்டு மணியிலும் அவள் காலுக்கு அணிந்திருந்த பச்சை நிற ஷாக்ஸ். அவள் உடலுக்கும் உடைக்கும் இடையே பெருத்த இடைவெளி. அதில் சப்பணம் இட்டு அமர்திருந்தது பெங்களூர் காற்று.

எப்படியும் வயது ஒரு 45 கடந்திருக்கும். சாதராணமாகவே எம்பியிருக்கும் பற்களால் உதடுகளை ஒரு சேர மூட முடியாது அம்மாவுக்கு. அதிலும் ஒரு ரகசியமான நக்கல் புன்னகையின் போது உப்பி பெருக்கிற கன்னம். அதனுள் அழுந்தும் காற்று என அனைத்தையும் ஒரு சேர அடக்க முடியவில்லை அவளால். அம்மாக்கள் எப்படியோ...? ஆனால் மகள்களுக்கு அதிலும் குறிப்பாக எனக்கு.. அம்மா சில நேரம் குழந்தையாவதிலும்... நான் சில நேரம் அம்மா ஆவதிலும் கொள்ளை ஆசை. ஆசையை விடவும் எனக்குள் பொதிந்திருக்கு என் குழந்தை பருவத்து நியாபகங்களுக்கு இதை விடவும் அவளை வஞ்சம் தீர்க்க வேறு சூழ்நிலைகள் அமைந்து விட போவதில்லை என்ற களிப்பு. சிறு வயதில் அவள் எனக்கு செய்ததை போலவே கண்களை விரைத்தேன். ஆனால் அவள் என்னை போல் இருப்பதில்லை... முதல் பார்வையிலேயே அடங்கிவிடுகிறாள்.

அப்பெண் இப்போது என்னை பார்த்து புன்னகைக்க துவங்கியிருந்தால். அறிமுகங்கள். உபசரனையான பரிமாறல்கள். எங்கள் ப்ளாட்டின் எதிர் ப்ளாட்டில் வசிக்கிறாள். அவளுக்கு தமிழ் தெரியாது. எனக்கு தெலுங்கு தெரியாது. நாங்கள் இருவரும் புரிந்து கொள்ளுமாறு பேசுமளவிற்க்கு இருவருக்கும் இவ்வூரின் கன்னடம் தெரியாது. சர்வதேச மொழி கை கொடுத்தது.

"After you settle down, we will talk much..." என்றவளுக்கு புன்னகையுடன் விடைகொடுத்தேன்.

"பக்கத்துல பொம்பள தான் இருக்கு. ரெண்டும் பேரும் நல்லா இங்கிலீஷ்லயே பேசிகிறாங்க என்று கோவையில் இருக்கும் அப்பாவுக்கு போனில் தகவல் சொன்னாலும். அதற்க்கு பின் மீண்டும் அம்மா - மகள் விளையாட்டு ஆரம்பம் தான்.

"என்ன பாக்குற... போ ஆந்தம்மா மாதிரி நீயும் போய் ஒரு புல்புல்தாரா உடுப்ப மாட்டிக்கிட்டு வா. எல்லா பொருளையும் எடுத்து அடுக்க வேணா...?"

"ஏய் அம்மா...! அது மேக்ஸி"

"என்னவோ... அந்தம்மா பேர் என்னவாம். ஏன் இப்படி தலையை விரிச்சுபோட்டு வெளிய நிக்குதாம்."

"நீ இப்படி கேப்பேன்னு தான். இங்க யாரும் வெளியேவே வற்றதில்ல. அவங்க வீட்டு வேலைக்கார பொண்ணு வர நேரமாம். அதுக்காக கதவை திறந்தாங்களாம். நாம சாமான் இறக்க சத்தம் கேட்தும் அப்படியே நின்னுட்டாங்க."

"ஓ..! அந்த வேலைக்கார பொண்ணு இங்க ஒரு நாள் ஒத்தாசிக்கு வருமா...? எல்லத்தையும் ஒத்த ஆளா ஒதுக்க சிரமம இருக்குல்ல.."

புதிதாக துளிர்த்த உறவின் அழகே, நிச்சயம் செய்வார்கள் என தெரிந்தும்... அதை தயங்கி தயங்கி கேட்பது போல் நடிப்பது தான். பச்சையம் மாறாத... முதல் உபசரிப்பு. வீடெங்கும் ஓவியங்கள். குறிப்பாக அந்த டைனிங் டேபிளின் மேல் மாட்டியிருந்த ஓவியம். ஆண் குறி.. அதை சுற்றிய ஒரு கருவறை அதற்க்குள் கைகளை குவித்திருந்ததை போல் ஒரு சிசு. ஏராத்தாள அனைத்து வண்ணங்களும் பயன்படுத்த பட்ட ஓவியம். குறிப்பாய் நீல நிறம் அதிகமாக கண்களை உருத்தியது. ஓவியத்தில் இருந்து எடுத்த கண்களை அப்பெண்ணின் மீது வைத்ததுமே புரிந்து கொண்டாரள்..

"No its not me, my husband. He is a Drawing Professor"

என்ற விளக்கத்துடன் வேலைக்கார பெண்ணை அனுப்புவதாகவும் ஒப்புக்கொண்டிருந்தாள்.

***************

அன்று ஒத்தாசைக்கு கென்று வந்தவள். நேற்று தான் அவள் முதல் மாச சம்பளத்தை வாங்கினாள். வீட்டில் பொருட்கள் அதனதன் இடம் சேர்ந்ததும் அம்மாவும் அவள் இடம் சென்று சேர்ந்து விட்டாள். தினமும் காலையும் மாலையும் அவளிடம் இருந்து போன் வரும். "வேலைக்கார பொண்ணு வந்துச்சா... இன்னிக்கு என்ன சமையல்.. எதுத்த வீட்டு அம்மா பேசுச்சா. ஏதோ ஒரு அம்மா உன் வீட்டு பக்கத்துல இருக்குன்னு மனசு கொஞ்ச சமாதனம்." என்று தினமும் அதே கேள்விகள், அதே பேச்சு. சில பேச்சுக்களும் சில குரல்களும் மட்டும் தான் மனதிற்க்கு அலுப்பதேயில்லை. இந்த பேச்சுக்காளால் அன்றைய நாளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிட போவதில்லை என்றாலும். எதிர்பார்த்தவர்களிடமிருந்து எதிர்பார்த்த நேரத்தில் வராத பேச்சுக்களும்.. செய்திகளும்,  மனதின் சரியான வசிப்பிடத்தை அதன் கனத்தை கூட்டி காட்டிவிடுகிறது. காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் கணவரை தவிர்த்து,  மதியத்தில் வேலைக்கு வரும் ரத்னாம்மா தான் ஒரே பேச்சு துணை. அதுவும் ஒரு மணி நேர பேச்சு துணை.

கழுத்தில் கருகு மணி.. குள்ளமான உருவம். பெரும்பாலும் சேலைக்கு பொருத்தமான ஜாக்கெட்டை போடமாட்டள் ரத்னாம்மா.  சிறு நாற்காலி.. கால் மீதி என அனைத்தையும் நகர்த்தி நகர்த்தி சுத்தம் செய்யும் ரத்னாம்மாவின் வேலையில் அன்று நிறைய மாற்றங்கள். கண்கள் ஓரிடத்திலும் யோசனை வேறிடத்திலும் என்பதை அவள் தொழில் நேர்த்தியே காட்டியது. "எதாவது பிரச்சனையா...?" என்று கன்னடத்தில் திக்கி திக்கி கேட்டு முடித்தேன்.

மிகுந்த தயக்கத்துக்கு பின். இரண்டு அறைகள் சுத்தம் செய்த பின்... மெல்ல தரையை துடைத்தவாறே அழத்துவங்கினாள். இந்த புதிய நகரத்தில் எனக்கு பழக்கமான ஓர் உறவு, என்னோடு பகிர்ந்து கொள்ளும் முதல் கண்ணீர் இது. அந்த பொறுப்புணர்ச்சியுடன் சோபாவில் இருந்து கீழிறங்கி அவள் அருகில் தரையில் அமர்ந்து கேட்டேன்.

"ஹேனாய்த்து..."

இன்று வேலைக்கு பத்து நிமிடம் தாமதம் என்பதால்... எதிர்த்த வீட்டு பெண் கன்னத்தில் அறைந்துவிட்டதாக சொன்னாள். இந்த செயல் கூட எதிர்த்த் வீட்டு பெண்ணின் உருவத்திற்க்கு சம்மந்தம் இல்லாத ஒரு செயல் தான். "சரி... விடுங்க.. இனிமே நேரத்தில போங்க.." என்று அவள் மொழியில் சொன்னாளும். அவள் தொடர்ந்து சொன்ன செய்திகள் எனக்கு கடந்த வாரம் நான் யூகித்த ஒரு விஷயத்தை உறுதி செய்வதாகவே இருந்தது.

தீபத்திருநாள் வருவதற்க்கு இன்னும் 5 நாட்கள் இருந்த வேளையில். எதிர்த்த வீட்டு பெண் என்னை இண்டர்காமில் அழைத்து. பக்கத்து ப்ளாக்கில் ஒரு ப்ளாட்டில் ஒரு பெண் கைவேலைபாடுகள் நிறைந்த தீபங்களை விற்பதாகவும். அதை பார்த்து வரலாம் என்றும் கூறி என்னை அழைத்தாள். அவள் குறிப்பிட்ட நேரத்தில் என் ப்ளாட் கதவை பூட்டிவிட்டு காத்திருந்தேன். அவள் ப்ளாட்டில் இருந்து வெளியே ஒரு காகிதத்துடன் வந்தாள்.

"கண்காட்சி நடப்பதற்கான நோட்டீஸ் அது. அதில் கண்காட்சி நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த தேதி முடிந்து இன்றோடு இரண்டு நாள் ஆகியிருந்தது. அது தான் முடிந்துவிட்டதே பின்பு ஏன் செல்கிறோம் என்று கேட்டேன். எல்லா பொருட்களுமா வித்து தீர்ந்திருக்க போகின்றன... போய் பார்க்கலாம் என்றவாறே நடக்க துவங்கியவளை பின் தொடர்ந்தேன். அவளுடனான நான் செலவிட்ட முதல் மற்றும் நீண்ட பொழுது அதுதான். பேசத்துவங்கிய 10 நிமடங்களில் எல்லாம் மிக பளபளப்பாய் தெரிந்தது, அப்பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய பெருமையே இப்படி ஒரு நகரில் சொந்த ப்ளாட் வாங்கியிருப்பது தான் என்பது. அத்தோடு அம்மா ஒரு ப்ளாட்டில் சென்னையிலும். தங்கையின் கணவர் சமீபத்தில் இறந்ததால் அதில் வந்த இன்ஸ்யூரன்ஸ் பணத்தில் மும்பையில் ஒரு ப்ளாட்டில் தங்கை இருப்பதாகவும் சொன்னாள். ஏன் எல்லோரும் ஒரே ப்ளாட்டில் ஒன்றாக இருக்க வேண்டியது தானே என்றேன்.

"How come its possibleeeeeeeee..." என்று முக்கியமான வார்த்தைகளை மிகுந்த அழுத்துடன் சொல்வது அவள் இயல்பாய் இருந்தது. கண்காட்சி நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த  ப்ளாட் பூட்டியிருந்தது. வாருங்கள் கிளம்பி விடலாம் என்றேன். அதன் பிறகு அப்பெண் என்னை கவனித்ததாக எனக்கு நினைவேயில்லை. விளையாட்டு பொருட்கள் நிறைந்த மைதானத்தை ஆர்வமுடன் பார்க்கும் குழந்தையை போல் ஒவ்வொறு ப்ளாட்டாக சென்று காலிங் பெல் அடித்து கண்காட்சி நடக்கும் ப்ளாட்டை குறித்து விசாரித்தாள். அனைவரும் சொன்ன பதில்கள் எதையும் கூட அப்பெண் காதில் வாங்கியதாக எனக்கு தோன்றவில்லை. அந்த தளத்தில் மொத்தம் 8 வீடுகள். இத்தோடு மூன்று வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி விட்டாள். எனக்கு ஒரே கூச்சமாக போனது. "ஏன் இப்படி செய்கிறீர்கள்... அது தான் தெரியவில்லை என்று அனைவரும் கூறுகிறார்களே... வாங்கள் சென்று விடலாம்" என்றேன். இப்பொது நான் காம் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி கொண்டிருந்தாள். மிக அதிசயமாய், நான்காம் ப்ளாட்டின் கதவை திறந்த ஒரு பாட்டி, வந்தவரை "உள்ளே வாங்க" என்று கன்னடத்தில் அழைத்தது.  நான் உள்ளே செல்லவில்லை. உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் வெளியே வந்தாள்.

"they gave me coffee....such a sweet people.." என்று எங்கள் ப்ளாக்கை நோக்கி நடக்க துவங்கினாள். நான்,  கண்காட்சி என்றேன். "they are not there know?" என்றாள். அது தான் வீடு பூட்டியிருந்த போதே நமக்கு தெரியுமே... நீங்கள் அவர்களை பற்றி விசாரிக்கத்தானே இத்தனை வீட்டின் கதவை தட்டினீர்கள் என்று ஆங்கிலத்தில் கேட்டதால் என் வெறுப்பும் கோபமும் அவ்வளவாக வெளிப்படவில்லை.

"this... I use to do normally ya..."

"which...?"

"ringing other door bells..."

ஒரு வேலை குழந்தை மனம் மாறாத பெண்ணாய் இருப்பாளோ என்று நினைத்த என் யூகத்தை அடுத்த இரண்டு நாட்களில் எல்லாம் உடைத்தாள். ஒரு மணி நேரம் அவளுடன் முழுதாய் செலவழித்த என்னை... அதுவும் இது போன்ற விசித்திரமான செயல்களில் அவள் உடன் இருந்த என்னை... அன்று லிப்டில் எதேர்சயாக பார்த்தும். என்னை யார் என்றே அடையாளம் தெரியாததை போல் புன்னகைக்காமல் என் கண்களை சந்திக்காமல் புறக்கணித்தாள். ஒரு வேளை எதாவது மனம் சோர்வாக இருக்கும்,  என்ற என் எண்ணத்தை அதை தொடர்ந்த நாட்களில் உடைத்தாள்.

"hey you know for me lift means fear...ya.." ஒன்றும் புரியாமல் விழித்த என்னிடம் "because I am a heart patient...due to diwali. Every body burning crackers... I am afraid... am running out of my tablets.."

இது போல் பல முறை இப்பெண்ணை குறித்து விடை தெரியாமல் இருந்த என் அனுமானங்களுக்கு ரத்னாம்மாவின் கன்னத்து அடி பதில் சொன்னது.

ரத்னாம்மா கன்னடத்தில் இப்போது தொடர்ந்தால்..."இது புதுசில்ல... எப்பவும் இப்படி தான். சில நேரம் பேய் மாதிரி தலையெல்லாம் விரிச்சு போட்டுட்டு தாலிய கழட்டி வீசிட்டு எனக்கு வாழவே புடிக்கல ரத்னா. இவ்ளோ பெரிய வீடு... பொண்ணு ஹாஸ்டல்ல படிக்குது... அவரு வேலைக்கு போய்ட்றாரு.. நான் என்ன பண்றது ரத்னான்னு.. என்ன உடம்ப போட்டு அழுதுகிட்டே உலுக்கும். நான் சாகறேன்... நான் சாகறேன்... அடிக்கடி சொல்லும். இந்தம்மா தீடிருன்னு செத்துட்டா போலீஸ் கீலீஸ் வந்து என்ன தானே கேள்வி கேப்பாங்க.

ஏன்ன... அந்த அம்மா வீட்டுக்குள்ள தினமும் போற வெளியாளு நான் தான். இன்னிக்கு அந்தம்மா என்னை அடிச்சதும்..என்ன பன்றதுன்னு புரியல.  ஸ்டோர் ரூம் செக்யூரிட்டி எனக்கு சொந்தம் அவர் மூலமா இந்த அம்மாவோட கணவரின்  போன் நம்பர் வாங்கி, இன்னிக்கி நடந்தத சொன்னேன். அதுக்கு அவரு இந்த அம்மாவுக்கு மனநிலை சரியில்லைன்னும். அவரு  பொண்ண பார்க்க வெளியூருல இருக்கறதாகவும்... இரண்டு நாள் போறுத்துக்க வந்திட்றேன்னும் சொல்றாரு. ஒரு மாசத்துல நாலு அஞ்சு நாள் இப்படி ஆகும் மத்த நாள்ல எல்லாம் அவங்க பொண்ணு மாதிரி பாத்துக்கும் அதுக்கு தான் பொறுத்துகிட்டு இருக்கேன் என்று அவள் சொல்லவும்.......

/////"நான் சாகறேன்... நான் சாகறேன்... அடிக்கடி சொல்லும். இந்தம்மா தீடிருன்னு செத்துட்டா போலீஸ் கீலீஸ் வந்து என்ன தானே கேள்வி கேப்பாங்க. என்ன அந்த அம்மா வீட்டுக்குள்ள தினமும் போற வெளியாளு நான் தான்."/////   என்று கம்மிய குரலில் கண்களில் நீரை துடைத்தவாறே பதற்றத்துடன் அவள் கூறிய விதம் எனக்கும் பதட்டத்தை கூட்டியிருந்தது. யாருகிட்டயும் சொல்லிடாதிங்க என்ற வேண்டுதலுடன் ரத்னாம்மா  சென்றபிறகு. என்னாலும் இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை.... இத்தனை நாளும் உட்சபட்ச விரக்தியில் இருக்கும் ஒரு பெண்ணுடனான நம் சவகாசம். என்று நினைக்க நினைக்க இண்டர்காம் அதிர்ந்தது.

எடுத்தேன்..."hai its me.. what are you doing..." என்றாள்.

"சற்று முன்பாக உரசியிருந்த தரை என்பதால், மெல்ல வழுக்கியது எனவே சுவரை கெட்டியாக பிடித்தவாறே.."I am busy" என்றேன்.

எப்போதும் போல் அவள் நான் சொல்வதை கேட்பதில்லை. பேப்பர் காரன் கொடுத்த பில் அதிகமாக இருப்பதாக அங்கலாய்த்தாள். நான் தனிந்த குரலில் இல்லை எனக்கு கொடுத்த பில் சரியாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது என்றேன். இது தான் நான் அவள் கூறுவதை மறுப்பது முதன் முறை. அதை தொடர்ந்த வாதங்களில் அவள் சிரித்த குரல், புன்னகையாக குறுகியது இப்போது அவள் உச்சநிலையில் இருந்திருக்க வேண்டும். "பொருக்கி.... ராஸ்கல்.. ப்பக்கர்.." என்று சம்மந்தமே இல்லாமல் கொதித்த அப்பெண்ணின் குரலை கேட்கையில் அவள் கூறியதை எல்லாம் மறுத்தத்ற்க்காக என்னை திட்டுகிறாளா.. அல்லது பில்லை தவறாக கொடுத்த பேப்பர்காரனை திட்டுகிறாளா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

மீண்டும் அன்று மாலை அம்மாவிடமிருந்து போன்.. அதே பேச்சு... ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் கூடுதலாய்.  எதிர்த்தவீட்டு அம்மா நல்லா பேசுதில்ல...!வேறு யாராச்சும் கதவ திறந்தாங்களா...?!

- கனக தூரிகா.

............

No comments:

Post a Comment