Sunday, October 30, 2011

குப்பை

அவர் சொன்னது  உண்மை தான். கடைகள் எல்லாம் மிக அருகில். நடந்து கூட செல்ல வேண்டாம். போன் செய்தால் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கே வந்து விடுகின்றன. இதற்கு முன்பு இத்தனை நீர் குழாய்களை கல்யாண மண்டபங்களில் "கை கழுவும்" இடம் என்ற பலகையின் கீழ் பார்த்திருக்கிறேன். இப்போது இந்தப் புதிய வீட்டில் திரும்பிய திசை எங்கும் நீர்க் குழாய்கள். இருபத்தி நான்கு மணி நேரமும் தண்ணீரும் மின்சாரமும் தடையில்லாமல் தான் இருக்கிறது. இந்த வீட்டிற்கு குடிபெயரும் முன் தரகர் சொன்னார், "ஸ்விமிங் பூல் இருக்கு, ஜிம் இருக்கு, டென்னிஸ் கோர்ட் இருக்கு". இன்னும் அவர் கூறிய அனைத்து "இருக்குகளும்" அவர் கூறிய வண்ணமே இருக்கின்றன. மனிதர்களைத் தவிர.

70 - 80 களில் வெளியான திரைப்படங்களின் கதாநாயகிகள், பித்தளை குடத்துடனும் மார்புக்கு மீது ஏற்றிக் கட்டிய பாவாடையுடனும் குளத்தில் குளிக்கும் அழகும் நளினமும்... இந்த உயர்ந்த கட்டிடங்களினிடையே ஏற்படுத்தப்பட்ட நீச்சல் குளத்தில், ஒன்று இரண்டு பாகங்கள் மட்டும் மறைக்கும் முயற்சியுடன் குளிக்கும் பெண்களிடம் நிச்சயம் இல்லை.

பெங்களூருக்கு கணவரோடு குடியேறுகையில் ஏறத்தாழ, என் பொருட்கள் அனைத்தையும் என்னோடு எடுத்து வந்தாகிவிட்டது. நான் உபயோகித்த பாதி கரைந்த சோப் உட்பட. அம்மா சொன்னால்," பெங்களூர்ல கிடைக்காததா இந்த கோயமுத்தூர்ல இருக்கு...மூட்டையா கட்டி கொண்டு போற? " அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கீரை விற்று திரும்பும் அத்தை தினமும் காலை 10 மணிக்கு வீட்டுக்கு வந்தால் விற்றது போக மீதி இருக்கும் கொத்தமல்லியையும் கருவேப்பிலையையும் அன்றைய சமையலுக்கு கொடுத்துவிட்டு பல மணிநேரங்கள் கழித்து தான்  போவாள். அவள் போன சில மணிநேரத்தில் எல்லாம், தோட்டத்தில் களை பறித்ததற்கான கூலி கேட்டு ரவிக்கை போடாத அந்த பாட்டி வரும். அதன் பின் அம்மா லோனுக்கு புடவை எடுத்த புடவைக்கார அண்ணா அன்றைய தின வசூலுக்கு வருவார். அப்பா மதிய உணவுக்கு வருவார். திண்ணையில் பக்கத்து வீட்டு அக்காக்களுடன் கழியும் சாயங்காலங்கள். இரவு தாத்தா பாட்டியின் வருகை. அம்மாவின் ஒரு நாள் வாழ்க்கையில் ஒராயிரம் முகங்கள் பல லட்சம் சம்பவங்கள். அவளுக்கு. பொருட்களின் மதிப்பு தெரிந்திருக்கவும், தெரிய வேண்டியதற்கான அவசியமும் இல்லை.

இங்கு என் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது சில "அப்பார்ட்மெண்ட் புறாக்கள்" தான். அவை வந்து சென்றதற்கான வருகை பதிவை படுக்கறையிலும், சமையலறையின் ஜன்னல்களிலும் காணலாம். அந்த இறகுகளை பத்திரமாக எடுத்து வைத்தால் அடுத்த முறை பாட்டி வரும் போது காது குடைய பயன்படுத்துவாள். என்னையும் என் கணவரையும் தவிற மனிதே நிழலே பட்டிராத இந்த வீட்டில் ஒரு பாட்டி கால் நீட்டி காது குடைவதே மிகப்பெரிய ஆடம்பரம் தான். எனக்கு அந்த தருணம் தான் வாழ்வின் கவிதைதனங்களில் ஒன்றாய் தெரிந்தது (கவிஞர்கள் நிச்சயம் என்னை மன்னிப்பார்கள்).


எனக்கிங்கு ஜன்னலின் திரைசீலையை நகர்த்துவதே  திருவிழாவாகத்தான் இருக்கிறது. கடிகார முட்கள் நகரும் சப்தத்தை இங்கு பகலில் கூட மிக துல்லியமாய் கேட்க முடிகிறது. அன்று கோவையில் படித்துவிட்டு மடித்து வைத்திருந்த ஆனந்த விகடனின் 34ஆம் பக்கத்தை இன்று பெங்களூரில் தொடர்கையில் நினைவுகள் மட்டுமே பக்கங்களாய் புரள்கின்றன. அங்கிருந்து எடுத்து வந்த மேஜை கடிகாரம், தலை மயிர் உலர்த்தும் இயந்திரம், முகம் துடைக்கும் துண்டு, பூஜை அறையில் உள்ள காமாட்சி விளக்கு என இன்னும் பலவும் இங்கு வெறும் பொருட்களாக இல்லை, அதனோடு தொடர்புடைய மனிதர்களையும் நினைவுகளையும் என் தனிமைக்குத் துணையாக ஆக்குகின்றன.

இங்கு வந்த ஆறு மாதங்களில் கடந்த வாரம் எனக்கொரு கொரியர் வந்தது. கொரியர் கார அண்ணாவை உள்ளே வாங்க என்ற அழைத்த முதல் பெங்களூர் வாசி நான் என்ற சான்றிதழோடு அந்த கொரியரையும் நீட்டினார்.  கவரின் மேலிருந்த பெயரை பார்த்து விட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். "ப்ளீஸ் மேடம்! கொரியர் ஆபிஸ் ரொம்ப தூரம் திரும்பவும் வர முடியாது பக்கத்து பிளாட்க்கு இதோட இரண்டு தடவ வந்துட்டேன். அவர் வீட்ல இல்லை. வந்தா கொடுத்துடுங்க என்றார்" சரியென்று கூறி அவர் சென்றதும் வழக்கம்போல் கதவை அடைத்தேன்.

இந்தக் கதவு எப்போதுமே இப்படித்தான். வீட்டின் வாசலை அடைப்பது என்பதை தாண்டி எனக்கும் இந்த உலகத்துக்குமான அத்தனையையும் ஒரு சேர அடைக்கிறது. மீண்டும் ஒரு முறை அந்த கவரை பார்த்த போது தான் பக்கத்து ப்ளாட்டில் வசிப்பவர் பெயர் கார்த்திக் என்று தெரிந்தது.

பக்கத்தில் ஓர் ஆண் இருக்க கூடும் என்று இதற்கு முன் நான் எண்ணியிருந்தது  சரியாய் போனதில் ஒரு சின்ன மகிழ்ச்சியும் கூட. மற்றும் எதிர்த்த ப்ளாட்டில் ஒரு குழந்தையிருப்பதும் அதற்கு அடுத்த ப்ளாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள் என்ற என் யூகம் கூட சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையும் ஒட்டி கொண்டது. இந்த யூகங்களுக்கு எல்லாம் காரணம் தினமும் நான் விரட்டியடிக்கும் வீட்டு குப்பைகள் தான். சரியாக காலை எட்டு மணிக்குள் அனைவரும் அவரவர் வீட்டு குப்பைகளை வாசல் முன்பு வைத்து விட வேண்டும் அதை குடியிருப்பின் பணியாளர்கள் 9 மணிக்குள் அகற்றிவிடுவார்கள்.


பெரும்பாலும் நான் எடுத்து சென்று வைப்பதற்குள் அனைவர் வீட்டு வாசலிலும் ஒன்று அல்லது இரண்டு பாலித்தீன் கவர்கள் இருக்கும். எப்போதும் பக்கத்து வீட்டு குப்பை பையில் சிகரேட் பாக்கெட்டுகளும், பீர் புட்டிகளும் நிரம்பி வழிந்ததே பக்கத்தில் ஒரு ஆண் இருப்பதாக எனக்கு தோன்ற காரணம். எதிர்த்த வீட்டில் எப்பொதும் மேகி பாக்கெட்டும், சாக்லேட்கவர்களும் தான். ஒரு முறை சக்கரம் உடைந்து போன கார் பொம்மையையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக நேற்று நிறைய கலர் காகிதங்களும் "ஹேப்பி பர்த்த்டே என்ற வாசகம் பொதிந்த தோப்பிகளும், கேக் பெட்டிகளும் குப்பை பையில் திமிறி கொண்டிருந்தது. ஆணோ பெண்ணோ தெரியவில்லை மொத்தத்தில் எதோ ஒரு குழந்தை. அந்த குழந்தைக்கு  நேற்று பிறந்த நாள் என்று ஆழகாய் கதை சொல்லும் குப்பைகள்.

  கசங்கிய பூக்கள், வீட்டிற்கே வந்துவிடும் பீசா பெட்டிகள், ஒடுங்கிய பழச்சாறு பாட்டில்கள் என்று வெளியே விரட்டப்பட்ட இத்தனையும் தான் என் நாளின் சுவரஸ்யத்தை கூட்டுகின்ற கதை சொல்லிகள்.

இன்று கதையின் திருப்பமாய் என் கற்பனை கதாப்பாத்திரத்திங்களில் ஒரு உருவத்தை பார்த்து விடலாம்.

கார்த்திக் வீட்டின் அழைப்பு மணியை மணிக்கொருமுறை அழுத்திகொண்டே இருந்தேன் ஆறாவது முறையாக கதவை திறந்தார் கார்த்திக். அலைபேசியில் யாருடனோ பேசிகொணிடிருந்த அவர் கண்களால் யார் என்ன என்பது போன்ற கேள்விகளாய் அவர் முகத்தை குறுக்கினார். எதுவும் பேசாமல் கவரை கொடுத்தேன். பார்த்தவர் கையை நெற்றியில் வைத்து சல்யூட் அடிப்பது போல் ஒரு பாவனையில் தொடர்ந்து அலைபேசியவாறே அவருடைய கதவை அடைத்து சென்றார். ஒரு வேலை என்னை கொரியர் கொடுக்க வந்த பெண் என்று நினைத்திருப்பாரோ.

எது எப்படியோ அந்த நபருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நாம் மனிதர்களிடேயே தான் இருக்கிறோமா என்று அவ்வப்போது உறக்கத்தில் பதறி எழுவேன். இனி நிம்மதியாக உறங்கலாம். நான் நிச்சயம் மனிதர்களோடு தான் வாழ்கிறேன். 

மனிதர்கள் அல்லாதது என்று நாம் வகைபடுத்தியிருக்கும்  அத்தனைக்கும் தான் அதனதன் மொழிகளில் புன்னகைக்கத் தெரியுமே.!!
No comments:

Post a Comment