Tuesday, October 9, 2012

சற்குருவும் --- SANTA க்ளாசும்....2

யாரிந்த அம்மா......?

எனக்கு சிறு வயதிலிருந்தே (இப்போதும் அப்படித்தான்). என்னை யார் அம்மா என்றாலும்  பிடிக்காது. பிடிக்காது என்பதை விடவும், யார் இந்த பிள்ளை என்று கேட்டால் அதிகம் பிடிக்கும். பிடிப்பதையெல்லாம் உடைத்துவிடுவதற்கு தானோ இந்த அழைப்பு.  பற்று விடற்காகவே இந்த பற்றற்றான் பற்று என்னுள் பரவியிருப்பதாய் தோன்றியது. அனைத்தையும் மீறி அவரிடம் கேட்பதற்க்காகவும் செய்து காட்டுவதற்காகவும் பல விஷயங்களை தயார் செய்து வைத்திருந்தேன். அவரை காண்பதற்க்கு சொற்ப நிமிடங்கள் முன்பு வரை கூட உடன் வந்த குழுவினரிடம் நான் கொண்டு வந்தவைகளை எல்லாம் செய்தும்,  சொல்லியும் காட்டி ஒத்திகை பார்த்து கொண்டிருந்தேன். அப்படியான ஒத்திகை பட்டியலில் எனக்கிருந்த முதல் கேள்வி...

சற்குரு எனக்கு உங்க மொபைல் நம்பர் வேணும் ப்ளீஸ்... நான் குட் மார்னிங் குட் நைட் மெசெஜ் அனுப்பனும்.

இரண்டாவது அவருடைய கண்களை பார்த்தவாறு என் கண்களை குறுக்கி குறுக்கி சிரிப்பது.

என இன்னும் பல வஸ்துக்களுடன் அவர் முன் அமர்ந்தவரை மாத்திரம் தான் நான். அதன் பின் மேடையும் மாந்தர்களும் அவர் வசம். தலையின் உச்சியில் கண்களுக்கு புலப்படாத கயிற்றை கட்டி பிரபஞ்ச வேலைகளுக்கு மத்தியிலும் சரியான இடத்தில் கயிற்றை ஏற்றி இறக்கி பொம்மலாட்டத்தை நிகழ்த்தி கொண்டிருந்தார் பப்பட் மாஸ்டர். My Master. என்று அவரை பார்த்த பரவசத்தில் மனம் ஆங்கிலத்திலெல்லாம் கவிதை எழுத ஆரம்பித்தது ஆனால் என் கீழ் உதட்டின் கயிற்றை, அந்த சந்திப்பு முடியும் வரை மாஸ்டர் கீழ் இறக்கவேயில்லை. அதனால் மட்டுமே அக்கனத்தில் என்னால் பேசமுடியாமல்  போனது.

அவ்வப்போது ஒரு பனையோலை கூடையில் இருந்து விக்ஸை இன்ஹேலரை எடுத்து மூக்கில் உறிஞ்சியவாறே ஏதேதோ பேசினார். எனக்குத்தான் அது "ஏதேதோவாக" இருக்க முடியும். பிரபஞ்சத்தையும் தன்னையும் பிரித்து பார்க்காத ஒரு தன்மைக்கு என்னிடம் பேசுவதும் அந்த "ஏதேதோ" பேசுவதும் கூட ஒன்றாகத்தானே இருந்திருக்கும்.

தூரத்து கிழவியை காய்ந்த வயக்காட்டில் நெற்றியின் மீது கையை பிடித்து பார்ப்பது போல். வானத்தை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார். வெள்ளியங்கிரியின் மணல்களை, அரன் கால்பதிந்த தடங்களை,  துகள்களாக்கி சுழற்றி அடித்து கொண்டிருந்தது காற்று. அவருக்கும் காற்றுக்கும் புரிகின்ற பாஷையில் ஆங்கிலத்தில் எதையோ சொன்னார். பழைய சாமி படங்களில், எல்லா சாமிகளும் சுத்த தமிழ் பேசியே பழக்கப்பட்ட நமக்கு கடவுள் நேரில் பேசுவதே ஆச்சரியம். அதுவும் ஆங்கிலம் பேசும் கடவுள் என்றால்...... மலைப்படங்கவில்லை அந்த தரிசனத்தில். இன்னும் என் கீழ் உதட்டின் கயிறு மாஸ்டரிடம் தான்.

சற்குருவின் பாடல் தொகுப்புகள், கவிதைகள் எனப்பலதையும் பேசி தளர்ந்திருந்த அந்த இளவேனில் பொழுதில் அதிர்ந்து ஒலித்தது சற்குருவின் அலைப்பேசி.

நமஸ்காரம் என்று பேச்சை துவங்கியவர். வானத்தை பார்த்தவாறே எதோ பேசத்துவங்கினார். என் கண் முன்பு,  நான் செய்த ஒத்திகைகள் எல்லாம் என்னுடன் வந்தவர்களோடு சேர்ந்து நையாண்டி செய்து கொண்டிருந்தன. அவர் அலைப்பேசியை பரிதவிப்புடன் பார்த்தவாறே, கண்ணாலேயே ஈஷா சுவாமியிடம் ஜாடை காட்டினேன். அப்போதைக்கு என் கண்களின் கயிறு மட்டும் சற்று தளர்வாக விடப்பட்டிருக்க வேண்டும் மாஸ்டரால். ஓவியத்தில் தூரிகை வரையும் மெல்லிதான கோடுகளை போல் அங்கமர்ந்திருந்த அனைவர் உதட்டிலும் ஒரு குறும்பு புன்னகை. சிரிப்பு காட்ட வேண்டாம் என்று ஜாடை வேறு.

அலைப்பேசி உரையாடலுக்கு பின் மெல்ல சற்குரு அந்த சந்திப்பின் முடிவிற்க்கு வந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஒரு ஷணப்பொழுதில் நம் சிகையை கலைத்துவிடுகிறது அவர் நெற்றிக்கு நேர் கைகளை குவித்து வணங்கி விடைக்கொடுப்பது. ஒவ்வொறுவராய் வணங்கி ஆசிப்பெரும் பொழுது அவர்களுக்கு ஒரு மலரை கொடுத்தார் சற்குரு. என்னுடைய முறை இது.

காலில் விழ வேண்டும் விழுந்துவிட்டேன். அவருடைய கால்களை தொடலாமா கூடாதா என்ற குழப்பத்திலேயே சில நொடிகள் கழிந்து போனது. நாம் அவர் காலில் வணங்கும் இந்நேரம் அவர் நமக்காக என்ன செய்து கொண்டிருப்பார் என்ற சலனத்தில் சில நொடிகள் என மிருதுவாக ஆடிக்கொண்டிருந்த என் மனதின் பெண்டுலம். சட்டென்று நின்ற கனப்பொழுதில் என்னை ஒரு நீரோவியம் போல் உணர்ந்தேன். கடவுளின் ரூபத்தை பிரதிபலிக்கிற சலசலப்பு இல்லாத நதியை போல் அவர் கால்களின் கீழ் ஓடிக்கொண்டிருந்தேன். உடல் உயிர் மனம் உணர்வு என அவர் சொல்லும் அந்த நான்கும், எனக்குள்  எந்த வேறுபாடுமின்றி சங்கமமாகி அவர் கால்களை நனைத்து கொண்டிருந்தது. நிழவின் நிழல் கீற்றும், அன்று சுழற்றி விசிய காற்றின் ஒரு துகளும் கூட என் நதியின் மிருதுவான ஓட்டத்தை கலைத்துவிட்டிருக்க கூடும் அப்படியான நிசப்தத்தில் தலையுயரித்தி, நீட்டிய என் உள்ளங்கையில் கனிந்து விழுந்தது.

ஊதா நிற பூ.

1 comment:

  1. wow thoori... superb.. puppet master huh? :) yes when you are near him you will be dumb, you will be a statue, sometime I felt i'm immobilized. We are all very fortunate and blessed to live with grace.. Sadhguru Saranam.....

    ReplyDelete