Tuesday, October 9, 2012

சொக்கி - 1

பிடிக்கும் என்ற வார்த்தை அத்தனை இலாவகமாக தாண்டி விட முடியாது. அதை தாண்டுவது,  தாண்ட மனமில்லாமல் தவிப்பது, தாண்டிவிட வேண்டும் என்ற வீம்பில் மூக்குடைவது என அனைத்தும் சாத்தியம் 'பிடிக்கும்' என்ற வார்த்தையின் முன். ஆனால் எனக்கு வேலைக்கு போக பிடித்திருந்தது. சலவை துணியில் மடமடப்பில், கலர் கலர் வண்ணத்தில் தொங்கும் அடையாள அட்டை மார்பின் இடையில் விழும் அந்த ஸ்பரிசம் எனக்கு பிடித்திருந்தது. அதிலும் நம் பொருட்கள் வைப்பதற்காக பிரத்தியேகமான அறைகள் தருவார்கள் அதன் சாவியும் அடையாள அட்டையுமாய் சேர்ந்து ஒரு கொத்தாக தொங்கும் அந்த வடிவம் எனக்கு பிடித்திருந்தது. டப்பர்வேர் டப்பாக்கள் அதன் கையடக்க பைக்கள், பூப்போட்ட வாட்டர் பாட்டில் அதன் மேல் ஒரு ஸ்டீல் கேப். வேலைக்கு போகிறோம் என்றாலே வந்து விடுகிற கர்வம்.... வேலைக்கான அலுவலகத்திற்க்கு கொண்டுவிடுகிற தந்தை. காலையிலிருந்து மாலை வரை மூளையை அடைத்து கொள்கிற எதோ ஒரு ஓட்டம் என அனைத்துமாய் எனக்கு வேலைக்கு செல்வது பிடித்திருந்தது.

இந்த ஏற்பாடுகளினாலேயே நான் செய்யும் வேலையும் எனக்கு பிடிக்க வேண்டியதாய் இருந்தது. பல நேரங்களில் அற்ப சந்தோஷங்களுக்காக பல நிர்பந்தங்களை ஏற்படுத்தி கொள்வது என் இயல்பாகிவிட்டது. நுரைகளாக உடைந்து ஒன்றுமில்லாததாக ஆகியிருக்க வேண்டிய  அலைகளை உப்புக்கு குழி வெட்டுவது போல் எனக்குள் தேவையில்லாமல் உள்வாங்கி தொந்தரவுக்குள்ளாகுவது ஒரு நோய் போல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது அந்த வடநாட்டு பயணத்திலிருந்து.

ஆசாத் தான் என்னை வடநாட்டுக்கு அனுப்பி வைத்தார். கலை நிகழ்ச்சி முதல் கருமாரி வரை அனைத்தையும் எடுத்து நடத்தும் இவன்ட் மேனெஜ்மென்ட்(event management) நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதை விடவும் சுழற்சங்கத்தில் முக்கிய பங்கில் இருந்த்தாலேயெ அன்று எங்கள் கல்லூரியின் இளைஞர் சுழற்சங்க நிகழ்ச்சிக்கு தலைமேயேற்று நடத்தினார். எனக்கு படிக்க பிடிக்கும் ஆனால் யாராவது பாடம் நடத்தினால் பிடிக்காது.

வணிக பாடங்களில் கணக்கு வகுப்புகள் பெரும்பாலும் பொருத்து கொள்ளும் தன்மையுள்ளனவாய் இருக்கும். அதை தவிர்த்த சில அனுபவ பாடங்கள் உண்டு. குறிப்பாக அதற்கு பெண் பேராசிரியர்கள் வந்து விட்டால்... புல்ஸ்டாப், கமா போன்ற அத்தனை குறியீடுகளுக்கு விளக்கம் கிடைப்பது தின்னம். நன்கு ஆங்கிலம் பேச தெரிந்த பெண்ணை உரக்க படிக்க சொல்லி. அதன் கடைசி வரியை மாத்திரம் பேராசிரியர்  அழுத்தமாக சொல்லி முடித்துவைப்பார். அப்படியாகின் அவர் அப்பாடத்தை நடத்தி விட்டார் என பொருள் கொள்ளல் வேண்டும். இப்படியான  வகுப்புகளில் வருகைபதிவோடு கெளரவ விடுப்பு கொடுத்து சகல மரியாதையுடன்  சுழற்சங்க கூட்டம் என்றால் அனுப்புவார்கள்.

அந்த பொன்னான திட்டத்தினை பயன் படுத்தி கொள்ளவதற்காக நானும் கல்லூரியின் இளைஞர் சுழற்சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டேன். "கேலிக்கு உள்ளாவது, திறமையின் உச்சம் தொட்டு காட்டுவது", இவை இரண்டும் பாட அல்லது ஆட துவங்கிய அந்த கனத்திலேயே புலப்பட்டுவிடும் என்பதால். மேடையில் பாடுவது, ஆடுவது இதை தவிர்த்த எந்த பயமும் எனக்கு இருந்ததில்லை. அது நானாக இருந்தாலும் சரி. வேறு யாராக இருந்தாலும் சரி. எனக்கு பேசிவிடுவது சுலபமாக இருந்தது. அந்த செளகரியத்தில் ஆசாத் தலைமேயேற்ற விழாவில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நான் ஆற்றிய உரை அல்லது உரையாக கருதப்பட்டது பெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பண்டமாற்றம் செய்வது போல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே இளைஞர்களை கலாச்சாரம், பண்பாடு நல்லுறவு என அனைத்தையும் பரிமாறி கொள்ளும் விதமாய் அந்த ஆண்டிற்க்கான "Inter state youth exchange" நடைபெற்றது. கோவையிலிருந்து நான்கு இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டியது அசாத்தின் பொறுப்பு. அவர் முதலில் முன்மொழிந்த பெயர் என் பெயர்.

சொக்கி.

எனக்கு வாழ்வில் ஜெயித்துவிட வேண்டும் என்ற வேகம் எப்போதும் உண்டு. எப்படி, எங்கே, எப்போது, எவ்வாறு என அனைத்து ஏனா கேள்விகளையும் புறம் தள்ளிவிட்டு முன்னேறிவிட துடிக்கிற வேகம் என்னுள் இருந்தது. எனக்கு ஒரு பாடலில் பணக்காரன் ஆகும் கதாநாயகர்களை பிடிக்கும். அந்த கதையை பிடிக்கும். ஆனால் வாழ்க்கை அப்படி என்னை வாழ அனுமதிக்கவில்லை. வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பொழுதுகளில்,  வாய்ப்புகள் எது தவிர்க்கப்படவேண்டியது எது என்று தெரிந்து விட்டாலே பாதை எளிதாகிவிட்டிருக்கும்.  இப்படியொன்று நடக்க நாம் அனுமதித்து விட்டோமே என்று மனம் திணறி தவிக்கிற சம்பவங்கள் பல. இன்று நினைத்தாலும் அதில் ஒன்றாக சேர்ந்து விட்டது நான் வடநாட்டுக்கு போக இசைவு தெரிவித்து அந்த துவர்ப்பான தருணம்.

முடியாது என்று சொல்ல முடிந்திருந்தால் எத்தனை சுலபமாகிவிட்டிருக்கும் என்  வாழ்க்கை. அப்படி சொல்ல முடியாதனாலேயே எனக்கு விருப்பமற்ற ஒரு பாரம் என் சுயவரலாற்றின் நினைவு முதுகில் ஏறிக்கொண்டது. நான் இடரித்தவித்த அந்த நொடிகளில் எல்லாம் என்னொடு துணையாய் அருவமாய் பின் தொடர்ந்தேயிருக்கிறது எதோவொன்று.

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்.

No comments:

Post a Comment