Wednesday, July 16, 2014
நகர்ந்து செல்லும் நீரோடையில் அன்று விழுந்தது ஓர் நிலவின் பிம்பமல்ல.  ஓராயிர நிலவுகளின் பிம்பம். உச்சத்தில் உதித்த ஒற்றை முழுநிலவின் கீழ் குவிந்து நின்ற கொத்து கொத்தான மனிதர்கள். விஸ்ரூபமெடுக்கும் ஒற்றை கடலின் தரையில் எண்ணிலடங்கா கூழாங்கற்கள் குவிந்து கிடப்பது போல் அன்று அய்யனின் முன்பாய் குவியலாய் உயிர்கள்.

இன்று குவியலுள் நாங்களும்.... இதற்கு முன்பு இப்படியொரு முழுநிலவு பொழுதில் தேவ கானத்தை அவர் மாணவர் இசைக்க அவருக்கு இணையாய் ஓர் ஆசனத்தில் எங்களை அமரவைத்தார்.

அது 2013 குருபூர்ணிமா நானும் எனக்குள் ஒருவருமாய் ஒரே நாற்காலியில் அமர்ந்தோம், அவர் திருவடிகளை ஸ்பரிசித்தோம். நிழல்படத்தில் கூட அவர் கண்களை நேரே பார்க்க திராணியற்ற என்னை நிஜத்தில் அவர் அருகே இருத்தியது அவர் கருணை. என் வயிற்றில் அசைவுகளுடன் அவரை வணங்கிகொண்டிருந்த என் குழந்தையின் பாக்கியம்.

இப்போது 2014, குரு பூர்ணிமா. எனக்கும் அவருக்கும் சூட்சுமமாய் எத்தனை கோடி தூரமோ! ஆனால் பூகோலம் சொல்லும் 450 கி.மீ தூரத்தை எப்படி கடப்பது. கண்ணீரின் கோடுகளால் அளந்து கடந்தேன். பால் வாங்க மட்டுமே செல்வதாய் அந்த அடுமனை வரை நினைத்திருந்தோம். சொற்ப சில்லறையை எண்ணி பார்த்து திரும்புகையில் கழுத்தில் தேவியந்திரத்துடன் நெற்றி நிறைய திருநீற்று திலகத்துடன் நின்றிருந்தார் உஷாக்கா. அவர் உஷாக்கா என்பதை கூட இதை எழுதுவதற்காகவே சில நொடிகள் முன்பு தான் கேட்டு தெரிந்து கொண்டேன்.

என்னையும் மீறி அவரிடம் கேட்ட முதல் கேள்வி.

நீங்க ஈஷா வாலண்டியரா..

ஆமாக்கா.

எங்க இருக்கீங்க.

இதே அபார்ட்மெண்டல தான். ஏன் நீங்களும் ஈஷா வாலண்டிரியா.

எஸ்.

அப்ப வீட்டுக்கு வாங்க தேவி குடி வச்சுருக்கோம். சற்குரு யந்தரம் வச்சுருக்கோம். நாளை குருபூர்ணிமா, ஆஸ்ரம்லயிருந்து இவினிங் 6 0 க்ளாக் தேவிக்கு ஆராத்தியும், குருபூஜையும் செய்ய சொல்லியிருக்காங்க. யூ கேன் ஆல்சோ ஜாயின்.

என்று அவர் சொல்லி முடிக்கும் முன் கொற்றவை உஷாக்காவின் 1 வயது மகன் யோகேந்த்ரா வைத்திருந்த பிஸ்கட்டை தன்வசப்படுத்தியிருந்தாள்.

பால் மட்டுமே வாங்கிவருவதாய் உத்தேசம் எங்களுக்கு. திரும்பி நடந்த திசை நெடுகிலும் பால் பாக்கெட்டுடன், கண்கள் மறைய நீரும், மனம் நிறைய ஓர் நிகழ்விற்கான அழைப்பையும் ஏந்தி சென்றோம்.

உஷாக்காவின் ப்ளாட் A-405. இது அடையாளம் மட்டுமே. நுழைந்தபின் வெள்ளிங்கிரி அடிவாரத்தின் அசல் சாயல் அந்த இல்லத்திற்க்கு.  அவர்கள் இல்லத்தில் அனைவரும் வெள்ளாடை தரித்திருந்தனர் யோகேந்த்ரா உட்பட.  அங்கு அதிர்ந்த சவுண்ட்ஸ் ஆப் ஈஷா அதிர்வுகளில் எனக்கு முன்பே வந்தமர்ந்திருந்த சில தியான அன்பர்கள் ஆற்றலின் உச்சத்தை எட்டி கொண்டிருந்தார்கள்.

தியானத்தில் மூழ்கியிருந்த அன்பர்களின் கைகடிகாரம், அவர் சட்டைபையில் வைத்திருந்த பேனா, சற்குரு படம் அருகே குருபூஜைக்காக தயாராக வைத்திருந்த வாழைபழம், நெய்வேதியம் என ஒவ்வொன்றாய் தேடி நான்கு கால்களில் அளந்து அளந்து கொய்து கொண்டிருந்தாள் கொற்றவை.

அக்கா, குழந்தை ரொம்ப ஆக்டிவா இருக்கு ஆனா இவங்கள வைச்சுகிட்டு உங்களால சைலன்ஸ்ல உக்கார முடியுமா....? என்றதும் புரிந்து கொண்டேன்.

சற்குருவுக்கு வாங்கியிருந்த பழங்களிலிருந்து ஓர் மாதுளையை எடுத்து அவள் கையில் கொடுத்து சகல மரியாதையுடன் அவளை அவள் தந்தையுடன் வெளியே அனுப்பிய பின் துவங்கியது குருபூஜை.

எந்த அசைவுகளும் இல்லை. காத்திருந்த நொடி கனிந்ததற்க்கான எந்த சலனமும் இல்லை. ஐம்புலனும் வஞ்சனை செய்ய விலங்கு மனத்தால் ஓர் மெளனத்தை நிகழ்த்திகொண்டிருந்த வேளையில் சற்குருவின் குரலில் மென்மையாய் மிக மென்மையாய், மென்மையினுள் ஓர்  பிரளயமாய் ஓங்கி ஒலித்தது பிரம்மானந்த ஸ்வரூப்பா. ஆயுளும் போதாது, ஆன்மாவின் ஆனந்தமும் தீராது அந்த அனுபவத்தை சொல்லி முடிக்க.

உஷாக்காவிற்க்கு தேங்க்யூ என்றேன். உங்களுக்கு இன்னொரு கிப்ட்டும் இருக்கு எவ்ரி மன்டே வி டூ குருபூஜா நீங்க வாராவாரம் வரணும் பட் கொற்றவையை யார்கிட்டயாவது விட்டுட்டு வாங்க என்ற விளையாட்டாய் சொல்லி சிரித்தார். 

புளியோதரையும், சுண்டலும் கைகளை நிறைத்திருக்க எங்கள் இல்லம் நுழைந்தோம். சற்குரு புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் புன்னகைக்கும் கொற்றவை இன்று முகத்தை திருப்பி கொண்டாள்.....வெளியே அனுப்பிய கோபம் இருக்காதா என்ன? பிக்காஸ் ஷீ இஸ் சென்ஸிடிவ் டூடூடூடு !!!!

No comments:

Post a Comment