Friday, June 13, 2014





அவர் இன்னும் அதே கிருஷ்ணர் தான். ரோட்டின் ஓரமாக ஓர் தாத்தா பராமரித்து வரும் சிறிய பொம்மை வடிவிலான கிருஷ்ணர். அவரை எப்படி அலங்கரிப்பதென்று கூட தெரியாமல் வாராவாரம் சனிக்கிழமைகளில் சாணத்தால் அக்கிருஷ்ணன் சிலையை மெழுகி தவறாமல் 5 புள்ளி கோலம் போட்டிருப்பார் தாத்தா. எல்.கே.ஜி படிக்கும் போதிருந்தே தினமும் பள்ளிக்கு செல்கையில் கிருஷ்ணனுக்கு ஒன்று எனக்கொன்றாய் இரண்டு நியூட்ரின் சாக்லேட்களை வாங்கி தருவார் அப்பா. காலையில் கிருஷ்ணனுக்கு ஒரு நியூட்ரினை வைத்து விட்டு பள்ளி விட்டு வரும் வேளையில்…காணாமல் போன சாக்லேட்டுக்கு அப்பாவிடம் காரணம் கேட்பேன்.  நான் வைத்தாலேயே விரும்பி உண்டுவிட்டான் கிருஷ்ணன் என்று சுகமான கதைகள் மீட்டி என்னை கர்வம் கொள்ள செய்வார் அப்பா. 


வருடங்கள் கழிந்து உடல் நலம் குன்றிய என் 10 மாத குழந்தையை பழக்கப்படாத வித்த்தில் என் இடுப்பில் செருகியிருந்தேன். மருத்துவமனை செல்ல கிடைக்க கூடிய ஆட்டோ ஒன்றே அசல் கடவுளாக மாறியிருந்த வேளையில் கண்ணில் தென்படுகிற கடவுளையெல்லாம், கடவுள் போன்று தோன்றுவதையெல்லாம்  வணங்கி வணங்கி கடந்த வேகத்தில்,  பல அடி தூரம் தாண்டிவிட்டிருந்தேன் அந்த பழைய கிருஷ்ணனை.

 எனக்கு திரும்பி பார்க்க தோன்றியது அக்கிருஷ்ணனை. இப்போதெல்லாம் வாரவாரம் சாணம் மெழுகுவது இல்லை போல…..! கிருஷ்ணன் மேல் படிந்திருந்த பழைய சாணம் கருத்திருந்த்து. என்றோ எப்போதோ யாராலோ வைக்கப்பட்ட சர்க்கரை பொங்கல் பனைமரதொன்னையில் காய்ந்து கிடந்த்தது கிருஷ்ணன் அருகில். 


நான் எல்.கே.ஜியில் பார்த்த அதே கிருஷ்ணன். இத்தனை ஆண்டுகளில் அவனை பலமுறை கடந்தும் ஏனோ அவனை நின்று பார்க்க கூட தோன்றியதில்லை எனக்கு. இன்று எனக்கும் அவனுக்குமான இடைவெளிக்கு மத்தியில்  எத்தனை இலட்சம் சூடம் ஏற்றப்பட்ட்தோ, எத்தனை கோடி கோரிக்கைகளை ஏற்றானோ நிராகரித்தானோ. அவன் முன் இப்போது கையில் குழந்தையுடன் நான். அவன் மாறவில்லை. அவன் வளரவில்லை. அன்றெனக்கு விளையாட்டாய் தெரிந்தவன் இன்று என் குழந்தை விளையாடும் பொம்மை உயரத்தில் அப்படியே இருக்கிறான்.  ஆனாலும் இன்னும் அதே தீர்க்கமான பார்வை அவனுக்கு.

 என் முன் அவன் அப்படியே இருக்கிறான். அவன் முன் நான் வேறாய் நிற்கிறேன். அன்றிருந்த்து போல்  இப்போது என்னிடம் குழந்தைதனமில்லை, பொறாமையற்ற மனமில்லை, காமம் கொள்ளாத கண்கள் இல்லை, ஆசையற்ற ஹிருதயமில்லை. அவனுக்கு என்னை அடையாளம் தெரியவும் வாய்ப்பில்லை. 


நான் கடவுளுக்கு செல்ல பிள்ளை, நான் வேண்டினால் உடனே எதையும் கொடுப்பான் இறைவன், நான் நல்லவள் என்பது போன்ற நேர்மறையான எண்ணங்களை, ஆன்மிகத்தின் சாயத்தை அச்சிறுவயதில் என்னுள் பூசியவன் இந்த சாணவண்ண கண்ணன். 


எப்படி  மறந்தேன் அவனை….. சட்டென கைகளில் உறுத்திய மேரி பிஸ்கட்டை அவன் முன் வைத்து அன்றைய தினத்தின் அந்த நொடி பொழுதின் வேண்டுதலாய் குழந்தையின் உடல் நலத்தை பிரார்த்தித்து விடைபெற்றேன். அவனை சந்திக்கும் எந்த பிரயத்தனமுமின்றி இரண்டொரு நாளில் மீண்டும் அச்சாலையை கடக்கையில் எந்த வித சலனமுமில்லாமல், அவனை போலவே தீர்கமாய் அதேயிடத்தில் உறுதியாய் இருந்தது நான் வைத்த மேரி பிஸ்கட்.

No comments:

Post a Comment