Monday, December 10, 2012

ரெளத்திரம் பழகியவர்கள்

இயற்கையான செயல்களுக்காகவும், செயற்கையாய் கை குலுக்கவும், நமக்கு பிரியமானவர்களின் தொடுகைக்காவும், இத்தனை நாட்கள் உடன்கிடந்த என் கைகளுக்கு புதிய முகவரியை கொடுத்தது நிலே வசுந்தா. கொடுக்க காரணமாய் இருந்தான் சூர்யா. சூர்யாவை சூர்யாவாக எனக்கு தெரிந்ததை விடவும், செல்லமான குப்புவாகவே அதிகம் தெரியும். எங்கள் பள்ளி நாட்களில், கருநீலக்கலரில் சரிந்த தொப்பியுடன், அவன் நிறத்திற்க்கு சற்றும் பொருந்தாத யுனிபார்மில் ஸ்கவுட் உடை போட்டு உலவியவனை சீனியர்கள் என்ற பெயரில் சற்று அதிகமாகவே வதைத்திருந்தோம்.

பிலிம் இல்லாத காமராவில் அவனை படம் பிடித்ததாக ஏமாற்றி 15 ரூபாய் பணம் வாங்கிய போது தான். 15 வயதில் முதன் முதலில் எனக்கு "ஏமாற்றுதல்" என்ற பண்பு அறிமுகமாகி இருக்க வேண்டும். அடுத்த இரண்டு வயதில் எல்லாம் ஏமாற்றுவது தவறு என்று தெரிந்த, உத்தம ஆவதாரம் எடுத்த பின் உண்மையிலேயே அவனை புகைப்படம் எடுத்து அவனிடத்தில் கொடுத்து 15 ரூபாய்க்கான பாவ கணக்கை சரிசெய்து கொண்டேன். எத்தனையோ தடைகளை தாண்டி பிறந்ததாலேயே குப்புராஜ் என அவன் அம்மா பெயரிட்டது, மூக்குகுத்தி அவனை வேறொருவரிடம் விற்று மீண்டும் பெற்று கொண்டது என இந்த இளம் வயதிலேயே அவனுடைய வரலாற்று பக்கங்கள் அதிகம். ஆனால் நியுமராலஜியின் செல்ல கிள்ளலில், இப்போது அவன் சூர்யா. நமக்கு குப்பு தான்.



வாழ்க்கையில் ஓர் மிகப்பெரிய மாற்றம் தேவையாய் இருந்த தருணம். வாழ்வின் எல்லா திசைகளிலும், எல்லா மனிதர்களிலும், எல்லா நொடிகளையும் கடக்க விடாமல் மூச்சடைத்து நின்ற தருணம். என்னை நானே ஓர் ராட்சஷ பலூனில் இட்டு காற்றையும் நானாகவே அடைத்து கொண்டேன். யாராவது சிறிய துவாரத்தின் வழி வெளியேற்றமாட்டார்களா என்று ஏங்கி நின்ற பொழுது. புதிய மனிதர்கள், புதிய முகங்கள், புதிய மொழி எனக்கு தேவையாய் இருந்தது. ஆனால் என்னிடம் நான் மாற்றி கொள்ள விரும்பாததாகவும், மாற்றவே முடியாததாகவும் இருந்தது காதலும் அன்பும். காதலை மட்டும் வைத்து கொண்டு, காதலுக்கான சகலத்தையும் தொலைத்து விடும் வழியினை தேடி கொண்டிருந்தேன்.

அழைப்பு வந்தது, எடுத்தேன்.

"அக்கா பிரதீப் என்றான். " ஒவ்வொறு வாக்கியத்தின் முடிவிலும் இவன் அக்கா என்பது...ஒண்டியாய் போன எனக்கு அவ்வப்போது தமையன்களுக்கான ஏக்கத்தை அதிகரித்து கொண்டேயிருந்தது. எத்தனை அலுப்பான விஷயத்தை அவன் பேசினாலும், அவன் பேச்சு என்னை ஈர்க்காத தருணங்களில் நான் கவனம் இழந்து போகும் பொழுதும் அவன் சொல்லும் "அக்கா" என்னை விழிப்படைய செய்துவிடுகிறது.

"பெங்களூர், நிலே வசுந்தா ஹோம்ல நம்ம சிக்ஸ்த் சென்ஸ்வோட  இனாகுரேஷன் இருக்கு வற்றீங்களா" என்றான்.

என்ன இனகுரேஷன் தெரியாது. நிலே வசுந்தா ஹோம் என்ன இடம் தெரியாது. எதற்காக என்னை கூப்பிடுகிறான் தெரியாது. வழிகாட்டி பலகை இல்லாத பாதைகள் சமயத்தில் சுகமானதாக ஆகிவிடுவதை போல். எங்கு போகிறோம், எதற்கு போகிறோம் என எந்த கேள்வியும் இல்லாமல். அவன் சொன்ன நாளில் சொன்ன இடத்திற்க்கு கிளம்ப மட்டுமே அனுமதித்திருந்தது என் மனம்.

பெங்களூர் சாலைகள் கோவையை போல் இல்லை. நாம் சரியாகவே போக நினைத்தாலும் தொலைவது நிச்சயம். நானோ தொலைவதற்காகவே கவனமாய் சென்றவள். அழகாக தொலைந்து போனேன். ஓர் உள்ளூர்வாசியின் உதவியுடன் என்னை சுலபமாக மீட்டெடுத்தான் குப்பு. "உங்களுக்காக தான் வெயிட்ங்" என்றான். சின்ன வயதிலிருந்தே நான், குப்பு பிரதீப் மூவரும் பள்ளியின் இளம் பேச்சாளர்களாக அறியப்பட்டிருந்தோம். நாங்கள் "ஸ்பீச் கேங்" எங்களை போலவே எங்கள் பள்ளியில், டான்ஸ் கேங், சிங்கிங் கேங் என பல உண்டு. எல்லோரும் ஒரு படையாய் கிளம்பி சுழற்கோப்பைகளை தட்டுவது, அடுத்த பள்ளி கேங்குகளுடன் வம்பிலுப்பது என சகலத்தையும் சத்தமில்லாமல் செய்து வந்தோம்.

எனக்கு அப்போது டி.ஆர் பாணியிலான பேச்சு வசனங்கள் எளிதில் வசப்பட்டதாலும். என் அப்பாவின் நண்பர்கள் சிலர் இலக்கியத்துறையில் பங்காற்றி கொண்டிருந்ததாலும் எனக்கு சில கவிதைகள், பாடல்கள் என சிலது அத்துபடி. அதில் நாங்கள் அதிகம் பிரயோகிப்பது.....

"இளைஞனே பருவ நெருப்பில் காய்ச்சிய வாளே! நாளை என்பது உன் திருநாளே!
நினைவிருக்கட்டும் உன் புருவ நெருப்பில் புகம்பங்கள்.
நீ இமைதிறந்தால் அதில் சூர்யோதையங்கள்!
வா நீ வெல்ல விண்வெளி காத்திருக்கிறது,
நீ பந்தாட கிரகங்கள் காத்திருக்கிறது."

இன்னும் தொடரும் இந்த உணர்ச்சி கவிதையின் பிற்பாதி எப்படி மறந்தது என்பதே ஆச்சரியம் தான். காரணம், பெண்மை, பாரதி, சமூகம், சினிமா என எந்த தலைப்பு கொடுத்தாலும் இந்த உணர்ச்சி கவிதையை மூவரும் முத்தாய்ப்பாய் சொல்லி பரிசை அள்ளுவோம். நாங்கள் வெவ்வேறு வகுப்பு என்பதால், சீனியர், ஜூனியர் என வெவ்வேறு பிரிவுகளில் போட்டி நடக்கும். ஆனால் நாங்கள் பேசுவது என்னவோ ஒரே ஸ்கிரிப்டை தான்.

இந்த ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்யும் படலம் மிக முக்கியமானது. ஓர் ராணுவத்தை தயார் செய்யும் பாங்குடன் அவர்கள் இருவருக்கும் எங்கள் இல்லத்தில் பயிற்சியளிப்பேன். டான்ஸ் கேங், சிங்கிங் கேங் அனைவரை விடவும் நாம் பரிசுகளை அள்ள வேண்டும் என்று அவர்களை மூளை சலவை செய்வேன். நான் அன்று கற்று கொடுத்த பாரதி பாடல்களை, இன்று பாரதியை விட்டு நெடும் தூரம் வந்துவிட்ட என்னிடம் அந்த பசுமை மாறமல் அப்படியே பகிர்ந்து கொள்கிற இந்த சிறுவர்கள் என்னை வியக்க செய்கிறார்கள்.



நான் பாடல்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மட்டும் தான் இவர்களுக்கு கற்று கொடுத்தேன். ஆனால் அதை இத்தனை சுலபமாய் இவர்கள் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. "சிக்ஸ்த் சென்ஸ்" என்ற சமூக அமைப்பை துவங்கி, இன்று பல நலதிட்டங்களை இவர்கள் செய்து வருவதை கண்டு நெகிழ்ந்து கொண்டேயிருக்கிறது மனம். இத்தனை அழகாய் இவர்கள் ரெளத்திரம் பழகுவார்கள் என நான் நினைக்கவில்லை, தனி மனிதனுக்கு உணவில்லையேல் இவர்களின் உணவை தியாகம் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

"நிலே வசுந்தா" வில் நுழைந்த பொழுது அத்தனை நினைவுகளும் அலையலையாய் எழுந்தது மனதில். பெரும்பாலும் நான் ஏற்படுத்தி கொண்ட அழுத்தங்களுக்கலாலும், ஈஷாவின் ஆனந்தத்திலும் மட்டுமே நான் அழுவதுண்டு. அன்று என் கண்களை நனைத்த நீருக்கும் பலம் அதிகம். ஈரம் அதிகம். துவர்ப்பு அதிகம். 25 வண்ணங்களில் அங்கே தவழ்ந்து கொண்டிருந்தது அமாவசை இரவு. எப்படித்தான் மனது வந்ததோ இவர்களை ஆதரவற்று விட்டுவிட. குப்பு சொன்னான்



 "சில குழந்தைங்க ஸ்ட்ரீட்ல கிடைச்சாங்க, சில குழந்தைங்க டெஸ்டிட்யூட்ஸ், சில குழந்தைங்க செமி ஆர்பன், சிலர் ஆர்பன்". இவங்களுக்கெல்லாம் என்ன வேணும்னு கேட்டு இவங்களுக்கு தேவையானத வாங்கிட்டு வந்திருக்கோம். பெங்களூர்ல "நிலே வசுந்தா ஹோமோட" சேர்ந்து தான் நாம் பணியாற்ற போறோம். அதுக்கு தான் இன்னிக்கி இனாகுரேஷன், நீங்க இந்த குழந்தைங்க முன்னாடி பேசனும். இவங்களுக்கு கிப்ட்ஸ் குடுக்கனும். இனிமே சிக்ஸ்த் சென்ஸோடு சேர்ந்து நீங்க இயங்கனும்.

தேவையற்ற இடத்திலும், நான் தேவையில்லை என்று நினைப்பவர்களின் இடத்திலும் தோண்டையின் ஈரம் வற்ற பேச தெரிந்த எனக்கு அந்த குழந்தைகளிடம் பேசத்தெரியவில்லை. என்னை விட நன்றாகவே சொல்லி கொடுக்க தெரியும் குப்புவுக்கு என்று அன்றைக்கு தான் தெரியும். "நாங்கல்லாம் உங்க அக்கா, அண்ணா மாதிரி, உங்களுக்கு என்ன வேணாலும் கேளுங்க" என்று சொல்ல சொன்னான். சொன்னேன். ஓர் குழந்தை எழுந்து மண்டியிட்ட வாக்கில் என்னிடம் "தன்னியவாதகளூ" என கன்னடத்தில் சொல்லவும்.

தெரித்து விழுந்தது என் துளிகள். ஒருவரை பார்த்து வணங்கி நிற்பது எத்தனை கூர்மையான ஆயுதம் என்று ஈஷாவின் உயர்நிலை வகுப்புகளில் உணர்த்தியிருக்கிறார்கள். நான் எத்தனை குற்றம் செய்திருந்தால், அந்த ஆயுதம் அத்தனை கூர்மையாக என்னை தாக்கியிருக்கும் என்று இன்றும் மலைக்கிறேன். செவ்வனே நிகழ்ந்தது துவக்க விழா. கருப்பு வெள்ளை ஓவியத்திற்க்கு வண்ணம் பாய்ச்சுவதை போல் அனைத்து குழந்தைகளும் ஸ்கெட்ச் பென்சில், கொடுத்து மகிழ்ந்தோம். அந்த பொருட்களை குழந்தைகள் வாங்கி கொண்டார்கள் என்பதை விட நாங்கள் அவர்களிடமிருந்து ஏராளமான புதிய பரிமாணங்களை வாங்கி கொண்டோம் என்பது தான் சத்தியம்.



சிக்ஸ்த் சென்ஸ் இரண்டு இளைஞர்களை மட்டும் கொண்டது அல்ல. இவர்களுக்கு பின் ஓர் மாபெரும் மாணவ படையே உண்டு. இந்த அமைப்பின் அடுத்த திட்டம்......."Desire Alive" குழந்தைகளின் விருப்பங்களை எழுதி வாங்கி... அதை வண்ண காகிதத்தில் அழகாய் புதைத்து, அவர்களுக்கு ஆச்சர்யமான சந்தோஷம் தருவதே....... எனக்கு அறிமுகமான புதிய முகங்களுடன் புதிய உணர்வுகளுடன், அசலான ஆறாம் அறிவை பயன்படுத்த துவங்கிவிட்டேன்.

நண்பர்களே நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.....பூக்களை விதைக்கத்தான் சூழல்கள் தேவை. புன்னகைகளை விதைக்க அல்ல.

மேலும் விபரங்களுக்கு  http://www.sixthsenseindia.org/
தொடர்புக்கு Mobile: + 91 9894447177, 9894060566, 9629447577
மின்னஞ்சல்: info@sixthsenseindia.org

7 comments:

  1. Dear Kanaga,
    Excellent writing of your personl experience on the inauguration day!! Our brothers are doing a noble work!! I am happy that you have joined in offering your support to this great cause:-)

    ReplyDelete
  2. wonderful!!!! "பூக்களை விதைக்கத்தான் சூழல்கள் தேவை. புன்னகைகளை விதைக்க அல்ல." fabulous attempt.

    ReplyDelete
  3. fab blog. very inspiring! "பூக்களை விதைக்கத்தான் சூழல்கள் தேவை. புன்னகைகளை விதைக்க அல்ல. "

    ReplyDelete
  4. Awesome!! it makes me also remember the school days!! very very very happy to see that the team is spending lots of effort for the social cause!!
    speech gang!!!! absolutely true!!!
    I am astonished that you still carry that awesome talent in your life path, Kanaga!!
    Many stop doing what interests them at one point of time in life!! the best example for that being me :(
    simple answer i always have is, 'No time'! i am proud to see that you all breaking such notion and doing great things!!
    Way to Go!! Keep up the excellent work!!

    ReplyDelete
    Replies
    1. Thank you much Arun Anna.......you krishna kumar anna all are the inspiration...!!

      Delete
  5. No words to express!! i must stress tat this s just beginning! long way to go! i am damn sure dat u hav a vry big role to play!!

    ReplyDelete