Tuesday, February 16, 2010

தூரம்

அன்று இரவு எழு மணியிருக்கும். இன்னும் முழுவதுமாக இருட்டவில்லை. L.K.G குழந்தை டிராயிங் காம்பிடிஸனில் இயற்க்கையை வரைந்தது போல் இருந்தது. வெளரி போன வானம். ஒரு ரூபாய் நாணயம் வைத்து வரைந்தது போல வட்ட நிலா. கோணலான மரம். நம்மூர் நகரங்களை போல் மரங்களுக்கு கலர் கலர் வண்ணம் அடித்து 4கி.மி 5 கி.மி என்று தொலைவினை குறிக்கும் பழக்கம் அந்த நகரத்துக்கு, ஏன் அந்த நாட்டுக்கே இல்லை. அடுத்த அரைமணி நேரத்தில் திருமணம் ஆகபோகும் இந்திய மணப்பெண் போல் மிக நேர்த்தியுடன் அந்த நாட்டு மரங்களை அலங்காரம் செய்திருந்தார்கள். அதில் சில முதிர் மரங்களும் அடங்கும்.

வெரிச்சோடி போன வீதிகள். பல மைல்கள் தள்ளி சாலையோரத்தில் தென்னைஓலை குடிசையில் குதித்து விளையாடுகிற தவளை போல், தூண்டில் விளக்குகளில் துள்ளி குதிக்கிற துளி வெளிச்சம். கோடிகணக்கான யானைகளை கவிழ்த்து போட்டது போல் கருமையான இருட்டு என்று இரவுக்கே உரித்தான எந்த வரைமுரையும் அந்த நாட்டுக்கு இல்லை. இரவு வரும் நேரத்தில் இவர்கள் உறங்குவதில்லை. இவர்கள் உறங்கும் நேரத்தை இரவென்று கொள்ளலாம். காதலை சுவைக்கிற நள்ளிரவில் ரெஸ்ட்ரான்களில் உணவை சுவைக்கிற வேடிக்கையான மனிதர்கள்.

நடு ரோட்டில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை காட்டிலும்.. அந்த நாடேங்கும் ஓங்கி வளர்ந்திருக்கும் கட்டிடங்களுக்கு கம்பீரம் அதிகம்.மனிதர்கள் ஆடை அணிவதை எத்தனை முக்கியமானதாக கருதுகிறார்களோ... அதே முக்கியத்துவத்தை உதடுகளில் அணிகிற புன்னகைக்கும் கொடுப்பது இந்நாட்டு மக்களின் சிறப்பு. புன்னைகையில்லாத நிர்வாண முகங்களை இந்நாட்டில் காணமுடிவதில்லை. பல வருடங்கள் பார்த்து பழகி உய்த்து போன உறவினர்களை காண்பது போல் கனிவான பார்வை. கிழக்கு ஆசிய நாடு. நம் நாட்டு கேரள மணம். மலேசியா என்று பெயர். நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் சரியான பொருத்தம் தான்.

அந்நகரின் மையபகுதியில் இரண்டு பெண்கள் பிரசவ வலியில் துடிக்க, அந்த இரண்டு பெண்களுக்கும் பிரசவம் பார்த்தது ஒரே மருத்துவர் தான். இரண்டு குழந்தைகளுக்கும் இடையே நெருக்கமான ஒரு தொலைவு. முதல் குழந்தை: கண்ணில் கூர்மை. தன் உதடுகளை ஒரு புறமாய் இழுத்து சிரிக்கையில் ஆண்மகனுக்கே உரிய கர்வமும் கம்பிரமும் கவ்வியிருந்தது. அடுத்தது பேரழகி.
வாழையிலை வடிவில் ரோஜா இதழ் கையில் மிதப்பது போல் ஒருணர்வு அந்த பெண் குழந்தையை கையில் ஏந்துவோர்க்கு. இந்த இருவருக்கும் இடையில் பரிணாமத்தில் முழுவதுமாக வளர்ச்சியடைந்த ஒரு ஆண் கால் நீட்டி படுக்கும் அளவு தூரம்.

இந்த இரண்டு குழந்தைகளுக்கும் இடையே மழலையின் குறும்பு.. இளமையின் கொதிப்பு என எத்தனையோ பருவங்கள் மாறின. இன்று இவர்கள் காதலர்கள். ஆனால் இவர்களின் நடுவே இருந்த தூரம் மட்டும் ஆக்ஸிஜன் நிரப்பப்பாடாத இதயமாகவே துடித்திருந்தது. "தூரம்". இந்த வார்த்தையின் பக்கவிளைவே அதை அடையமுடியாத தவிப்பு தான். இவர்களுக்கும் அந்த தவிப்பு கடும் கனலாய் தகித்திருந்தது. ஆனால் பாலாய்போன உலகம் அவர்களை சேர்த்தே பார்த்தது.

கண்ணாடி கரையோரம் கால் வீசி திரியும் வண்ண கந்தர்வானாய் அவன் நிமிர்நிதிருக்க. அவன் அருகே பனிமலை குடைந்து பார்வையின் நீளம் கடைந்து. பளீரென சிரிக்கும் பூப்படைந்த பெண் வசிகரமாய் வளர்ந்திருந்தாள். காதலர்களின் உற்ற நண்பன் தனிமை. அய்யோ பாவம் இவர்களிக்கு மட்டும் அது வாய்க்கவேயில்லை.

மங்கையவள் நெற்றியில் சரிந்தொடும் பூங்குழலை மன்னன் இவனுக்கு ஒதுக்கத்தான் ஆசையிராதோ? காண்டீபம் உயர்த்தி கண்ணின் கருமணியை ஓராமாய் நகர்த்தி தையலவள் கூர்ந்து பார்க்கையில் காளையாம் இவனுக்கு கண்மணியை மடியில் சாய்த்து கம்பன் வரிகள் பாட ஆசையெழாதோ?? இவர்களிடையே ஏன் இந்த தூரம்? சேர்ந்தே பிறந்த இவர்கள் சேராமல் போனது விதி.

ஆனால் இந்த காதலர்கள் விலகியிருந்து காதலில் துடிப்பதை காண்பது அத்தனை அழகு. கொஞ்சம் மனிததன்மையற்ற நிலை தான். இருப்பின் அந்த அழகினை காண்கையில்...... அரைகை அன்னமாக இருந்தால் அள்ளி தின்றிருக்கலாம். என் மனம் மசித்த காதலனாக இருந்திருந்தால் என் மார்புக்கும் அவன் முதுகுக்கும் மானசீக பாலம் அமைத்திருக்கலாம். நங்கை நான் சூடுகின்ற மலராக இருப்பின் நாசி கருக நுகர்ந்திருக்கலாம் என்று தோன்றியது. என் கையாலாகத தனத்தால் அழகை ரசிக்க மட்டுமே முடிந்தது.

பகலில் தான் இந்த நிலை இரவில் அனைவரும் உறங்கியபின் இவர்கள் தனிமையில் சந்திக்க வாய்ப்புள்ளதோ என்று சிந்தித்தால் இந்த ஊருக்கு பகலேது இரவேது கடிகாரத்திற்க்கு மட்டும் தான் அந்த பாகுபாடு இங்கு வாழும் மக்களுக்கு இல்லை.

இவர்கள் அழகை ஆராதிக்க அங்கே எழுப்பபடுகிற கட்டிடங்களுக்கு அஸ்த்திவாரம் அமைக்கும் கவனத்துடன் நீர் குமிழ்கவிழ்த்த ஜன்னல்களும் உருவாக்கப்பட்டு விடுகின்றன. அந்த ஜன்னலின் திரைசீலையை விலக்கி அந்த காதலர்களின் அந்தரங்கத்தை காண்பதில் கொள்ளை ஆனந்தம். அருகில் இருந்தும் தொலைந்து போன இந்த காதலர்களை காண உலகின் அனைத்து காதலர்களும் கைகோர்த்து வந்து கண்ணீர் மல்கி நிர்க்கும் அந்த இருவர் முன் புன்னகைத்து படம் எடுப்பது தான் கொடுமை.

உலக காதலர்கள் மட்டுமல்ல அந்த காதலர்களின் தனிமையை கெடுத்த பாவபட்டியலில் தமிழக எழுத்தாளர்களும் அடங்குவர். குற்றம் புரிந்த உணர்வு சூடுவதர்க்குள் இவர்கள் பொல்லாத கவிமனம் களியாட்டம் போடுகிறது. காதலியை தீண்டமுடியாமல் வக்கத்து நிர்க்கும் காதலனும்.. பெண்மை கரையாமல் கலங்கி நிற்க்கும் அந்த காதலியும் இவர்கள் கண்ணுக்கு உரித்த மக்காசோளம் போல் தோன்றினார்களாம்.இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்? ட்வின் டவர் என்று செல்லாமாக (அய்யோ பாவம்) அழைக்கப்பட்டு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் மிளிர்ந்து கிடக்கும் இவர்களை வெறும் கட்டிடம் என்று சொல்ல.. என்னவனை மனமருகில் வைத்து தொலைத்து தொலைத்து காதலிக்கும் என் கண்களுக்கு மனம் வரவில்லை அவர்களை காதலர்களாகவே பார்க்க தோன்றியது. அண்டை நாட்டு காலச்சாரத்தை அறிந்து கொள்ளும் சாக்கில் பத்திரிக்கையாளர் என்ற முறையில் சென்றிருந்த போது. இந்த ட்வின் டவருடன் நடத்திய மானசீக பேட்டியிது...

நூற்றுக்கணக்கான துவாரங்களை கொண்ட "ட்வின் டவர்" காதலர்களின் உள்ளே நுழைந்த காற்று என்னையும் தீண்டி சென்றது கீழ்கண்ட வரிகளுடம்

" கோடி கணக்கான மின்னல்கள் ஒரு சேர பாய்வதை போல் நாங்கள் மின்னிகிடப்பதை அழகென்று ரசிக்கிறார்கள்..! தள்ளியிருக்கும் என்னவளை ஒற்றை விரல் நீட்டி தீண்டும் அந்த ஊசி முனை நிமிடங்களில் எங்களில் எழும் பரவசமே இந்நகர் முழுதும் பொங்கி வழியும் அழகின் ரகசியம்"

இவ்வாறு என் காதுகளில் கிசுகிசுத்து சென்ற அந்த காற்றின் பாதையில் திரும்பி பார்க்கையில் நான் பார்க்க தவறிய அந்த விரல் நுனி ஸ்பரிசம் என்னை மலர்த்தி விடைக்கொடுத்ததது. குறிப்பு: வெக்கம்கெட்டு அவர்கள் தனிமையை கெடுத்து நானும் ஒரு புகைபடம் எடுத்துகொண்டென்.... அவர்கள் மன்னிக்க பிறந்தவர்கள் நாம் மனிதர்கள்!!!!

3 comments:

 1. அருகில் இருந்தும் தொலைந்து போன இந்த காதலர்களை காண உலகின் அனைத்து காதலர்களும் கைகோர்த்து வந்து கண்ணீர் மல்கி நிர்க்கும் அந்த இருவர் முன் புன்னகைத்து படம் எடுப்பது தான் கொடுமை.
  நல்ல கற்பனை. தொடர்ந்து எழுதுங்கள்.நல்ல கவிதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் .
  பொன் சுதாவை உங்களுக்கு அறிமுக படுத்த விரும்புகிறேன். http://ponsudhaa.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/

  அன்புடன்
  ரவீந்திரன்

  --

  ReplyDelete
 2. thank you ravi sir.. am following pon sudha..

  ReplyDelete
 3. Great to see various aspects in your writeups.You can access my blog at http://thanmathi-payanam.blogspot.com/..Thanks to Shakthi,she is the one who introduced your blog to me.......-Thanmathi

  ReplyDelete