Monday, January 18, 2010

தூரிகை

எழுத்துலக பிரம்மாக்கள் சஞ்சரிக்கின்ற இணையவெளியில் என்னையும் ஒரு கோளாக இணைத்து கொள்வதில் பெருமையடைகிறேன். இன்னும் எத்தனை நாட்கள்தான் இவர்களை இதமாய் கொளுத்தும் சூரியனென்றும்.. இருக்கமாய் கவ்வும் நிலவின் ஒளியென்றும்... எழுத்துலக ஆகாயத்தில் மின்னும் நட்ச்சத்திரங்களென்றும் வாய் பிளந்து நிற்பது என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்!!

நாம் ரசிக்கும் ஜாம்பவான்களின் முள்கிரீடத்தை பகிர்ந்துகொள்ளும் பேராசையில் எழுதுகிறேன்!!
எழுத்துலக பிதாமகன்களை நம்மால் எல்லாம் சந்திக்க முடியுமா என்று கேட்டு என்னையும் நலிந்தவர் பட்டியலில் சேர்த்து விட்ட கோபத்தில் எழுதுகிறேன்!!

எத்தனை நாட்கள் தான் பிறர் எச்சில் செய்து போட்ட கோட்டைகளை சப்பிகொண்டு மேடையில் பேச்சாளரென்று வலம் வருவது, என் பெயரில் ஒரு அருகம்புல்லெனும் நட்டு வைக்கவே இந்த இணையவலை முயற்சி...

என் வயதோருக்கு கம்பனும் கலிங்கத்துபரணியும் தெரியாமல் போனது எங்கள் குற்றமல்ல. தமிழை கற்றுகொடுத்து ஊதியம் பெறுவதை கூட ஒப்பு கொள்ளலாம். ஊதியம் பெறுவதற்காக டமிழை கற்றுகொடுக்கும் ஆசிரியர்கள் வாய்த்ததற்க்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களை பொறுத்த வரை குறுநாவல்கள் என்றால் குங்குமமும் ஆனந்தவிகடனும் தான்! சற்று முழுநீள நாவல்களென்று கொண்டால் கண்மணியயைம் ராணிமுத்துவையும் சொல்லலாம்!!

குற்றாலத்தில் ஐந்தருவி மட்டும் தான் ஸ்பெஷல் என்று பூகோளம் கற்றுகொடுத்த ஆன்றோர்கள் அந்த அருவியில் தோசையை நனைத்து சாப்பிட்ட ரசிகமணியையும் ராஜாஜியையும் அறிமுகப்படுத்தாது எங்கள் விதி! நாங்கள் வெற்றுக்கைகளுடன் அழைவதை டி.கே.சி தாத்தாவும், ல.சா தாத்தாவும் பார்த்து கண்டித்திருந்தால் நாங்களும் ஒரு வேளை கல்யாண்ஜியாகவோ கலாப்ரியாவாகவோ மாறியிருக்ககூடும்!

இன்று ஜெயமோகனையும் நாஞ்சிலையும் படித்துவிட்டு போதையேறி பித்துபிடித்து.. நானும் இந்த இணையவெளியில் மிதக்க ஆரம்பித்திருக்கிறேன். காதலன் அருகிலிருக்க அவன் கரம் பற்ற காந்த அலைகள் ரகசியமாய் ஈர்ப்பதைபோல்.. நானும் எழுத்தை நோக்கி ஈர்க்கப்ட்டவளாகி போனேன்!!

பள்ளி கல்லூரி நாட்களில் நான் தேடிய ஆசிரியர்கள் வாய்க்க பெறவிட்டாலும் சமீபத்தில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்து வைத்தவர்.. நமது நம்பிக்கை மாத இதழின் அசிரியர்..!!
பொதுவாக ஆசிரியர்கள் பாடத்தை சொல்லி கொடுத்துவிட்டுத்தான் தேர்வு வைப்பார்கள். இவர் பல கடினமான தேர்வுகளை வைத்து விட்டுத்தான் ஜெயமோகன் எழுத்துகளை என்னிடம் கொடுத்தார் (ஒரு வேளை உண்மையான ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்களோ??) எது எப்படியோ தேர்வு பெற்ற தைரியத்தில் நானும் பந்தையதில் பங்கேற்க்கிறேன். "PARTICIPATION IS FAR BETTER THAN WATCHING THE RACE"

அவருக்கு எம் பேனா பிசுபிசுத்து ஒழுகும் தமிழ் கூரும் நன்றிகள் பல பல!!!!!

1 comment:

 1. வாழ்வின் நிறங்களைக் குழைத்து
  ஆயிரம் புதுமைகள் இழைத்து
  சூரியச் சாந்தினில் நனைத்து
  தூரிகை ராஜ்ஜியம் நடத்து


  வாழ்த்துக்கள்

  ReplyDelete