Monday, September 29, 2014

அர்ப்பணம் - 3

விருட்சத்தின் மீது ஊர்ந்துசெலும் – எறும்பால்
அதன் தவம் கலையாது
தீஞ்சுவை நல்கயெனை அழைத்துவிடு – உன்
குறுநகை இதழொன்றும் குலையாது
திசை தெரியாத தூசியென – அங்கும்
இங்கும் அலைகின்றேன்
உன் குழல்வழி வாசனையெனும் கசியவிடு
நல்பாங்குடன் நானும் வழியறிவேன்.

விடைத்த கம்பியுள் சூட்சுமமாய்
மறைந்து திரியும் ராகங்களே
புடைத்த வயிறுடன் மிதந்தலைந்து – மழையை
எங்கோ பிரசவிக்கும் மேகங்களே
கருணையும் பொறுமையும் அவள் வேதம்
ரெளத்திர மேனி அவளிடும் வேடம்
அந்த மாயவி புகழை பாடுங்கள் – அவள்
அருளை கூதழாய் தூவுங்கள்




கொண்ட காதலில் மோகத்தில் போகத்தில்
சரிந்திடும் பம்பரம் போலே சுழல்கின்றேன்
மீண்டதாய் விரைந்து எழுகையிலே
பல்லாங்குழியுள் சோளியாய் மறுபடி வீழுகிறேன்
சீண்டிடும் வினையால் சோர்ந்துவிட்டேன்
பைரவி உன் கழல் காட்டிடடி
உன் கன்னக்குழியின் எழில்கூட – பக்தனொதுங்கும்
கரை போல் இக்‌ஷணம் தோணுதடி
 

செங்கதிர் சிந்திடும் இளஞ்சிவப்பில்
செம்மரி தந்திடும் கதகதப்பில்
குங்குமசிமிழின் லக்ஷ்ணத்தில் – என்
போதை தொலைந்தது இக்கணத்தில்
பல யுகம் சுழன்ற மோனந்தனை –
காட்டுது உன் சுழல் மூக்குத்தி
அகமும் புறமும் அமிழ்ந்தடங்க
இப்பிறவியிலாவது வாய்க்கட்டும்
வழங்கடி தேவி என் முக்தி




Saturday, September 27, 2014

அர்ப்பணம் - 2

அர்பணம் செய்யும் தேடலிலே
சொப்பணம் கண்டேன் தேவி
கர்பம் தரிக்கும் கும்பம்தனில்-குழந்தையாய்
நர்த்தனம் புரிந்தாய் மாரி(றி)

அம்புலி காட்டி உணவளித்தேன் – என்
குண்டலம் அதுவென சொன்னாய்
வேம்பினை காட்டி கசக்கும் என்றேன்
கடையிதழ் பச்சைநீர்க்கசிய சிரித்தாய்


கருவழி வந்த குறும்பேடே- அம்மை
நானுனக்கு அழை என்றேன்
என் திருவடி பணிந்த சிறுதளியே – என்
விரலசை பொம்மை நீ என்றாள்



வானம் தரித்த அஞ்சனத்தில் – அழுகையும்
அச்சமும் வருமென்றேன்
ஞான திறப்பை கொள்ளென்று- கரும்
மோகன மேனியாள் காட்சி தந்தாள்

செம்புனல் நொதிக்கும் தீயின் ஜுவாலை
சுட்டுவிடுமடி மஹராணி
நகைப்பை கூட்டும் பேச்சை குறைடி - அதென்
ஈரைவிரலின் மருதாணி


சேர்ந்ததை களைப்பதும், - களைத்ததை
உடைப்பதும் என்னே உந்தன் லீலை
சூழ்ந்ததை மீட்பது, வீழ்ந்த்தை கரைப்பது
அதுவே எந்தன் தினசரி வேலை

சொப்பணம் களைந்து துயிலெழுந்தேன்
அம்பிகை எங்கே போனாள்
இக்கணம் எந்தன் மடிமலர்ந்த – என்
மகளே அம்பிகையானாள்

Wednesday, September 24, 2014

அர்ப்பணம் - 1





நுதழ்நிறை திலகம் போதும்
நூராயிரம் பிறைகள் தோல்வியுற
உன் சலங்கையின் ஓர்பரல் போதும்
இந்த அகிலம் முழுவதும் லயித்துவிழ

மழையும் வெயிலும் உன் ஒப்பணைகள்
உன் நினைவால் கமழுமென் கற்பனைகள்
விரல் பட்டதும் அவிழும் பனித்துளிப்போல்
உன் பார்வையால் தெரிக்குது என் வினைகள்



பரிதியும் குருதியும் இணைநிறத்தில்
தீர்க சுமங்கலி நீயிருக்க
கண்கள் கோடி யாசிப்பேன்
அனுஷணம் உனை நான் ரசித்திருக்க

அர்ப்பணம் செய்ய ஏதுமின்றி
நீ தந்த போதையில் கவி புனைந்தேன்
சர்ப்பமாய் வினைகள் விரட்டுதடி
பைரவி உன்கழல் சரணடைந்தேன்

Thursday, September 18, 2014


ஆசிகள் பெறுவதும் ஆனந்தம் கொள்வதும்
மனித மனதின் இயல்பு
நேசிப்பவர் வந்து வாழ்த்து சொல்வது|
அன்பை பெருக்கும் மரபு
பாசிகள் ஊறிடும் பச்சை குளத்தில்
மூலவர் மிதப்பது சிறப்பு
என் ஆசைகள் மிதக்கும் ஆகாயத்திற்க்கு
நீ வரும் திசையே கிழக்கு

நெல் மணி போலவே குள்ளக்கீற்றாய்
அசைகிறது அந்த தீபம்
அதற்கு முத்தமும் இல்லை நெருங்கி
அணைக்கும் மூச்சும் தொல்லை - ஏனோ
அதற்கு இந்த சாபம்
விட்டில் பூச்சியின் வீரியம் கூட
பாவம் அதற்கில்லை
சுடரை தூண்டிடும் விரலாய் - குரல் கசிந்திருந்தால்
விரிந்திருக்கும் அதனெல்லை

நிறங்களின் தன்மையறியா வரையில்
பட்டாம்பூச்சிக்கு வண்ணம் கூட
சுமை தான்.
கொண்ட அன்பின் ஆழம் விளங்கா
வரையில் இந்த களத்திலும் இதே
கதை தான்
வாழ்த்தினை விதைத்து வாழ்த்தினை
அறுப்பதால் இந்த முறையும் ஒருவகை
வினை தான்





 






Sunday, August 10, 2014




ஞானத்தின் வாசல்  திறந்திருக்க - மனம்
மோகத்தின் கொல்லையில் லயித்திருக்க
வேதத்தின் குரலது கேட்டிருக்க
இளம் பரியின் வேகம் சூழ்ந்திருக்க
மாயன் அத்தனவன் ஆடிவந்தான்
என் காதலன் வேடம் பூண்டு வந்தான்

துளை ஏந்திய குழலெலாம் அவன் கானம்
உளை கூடிய உளமெலாம் சுடும் காமம்
களை படர்வதை உணர்ந்து அகலுவதே
அடிகேள் அவன் சொலும் விஞ்ஞானம்
அகவை நகர்ந்த வழித்தடமெங்கும்
வேதனை விதையை தூவி வைத்தான்
சோர்ந்து விழுந்ததாய் தகவலறிந்த்தும்
போதனை சாயம் பூசிவிட்டான்

சகலமும் அவனென கதறும்வேளையில்
சபலத்தின் போர்கொடி உயர்கிறது.
அவலம் அறுப்பான் எனநம்பும் நொடிதனில்
சலம் போல் சபலமும் நகர்கிறது.
கற்றதும் பெற்றதும் காதலொன்றே
என பற்றிகிடந்தேன் இந்நாளும்
நித்தமும் காதலின் திளைப்பதோன்றே
பித்தனின் பிள்ளையின் அடையாளம்!!


 









Wednesday, July 16, 2014




நகர்ந்து செல்லும் நீரோடையில் அன்று விழுந்தது ஓர் நிலவின் பிம்பமல்ல.  ஓராயிர நிலவுகளின் பிம்பம். உச்சத்தில் உதித்த ஒற்றை முழுநிலவின் கீழ் குவிந்து நின்ற கொத்து கொத்தான மனிதர்கள். விஸ்ரூபமெடுக்கும் ஒற்றை கடலின் தரையில் எண்ணிலடங்கா கூழாங்கற்கள் குவிந்து கிடப்பது போல் அன்று அய்யனின் முன்பாய் குவியலாய் உயிர்கள்.

இன்று குவியலுள் நாங்களும்.... இதற்கு முன்பு இப்படியொரு முழுநிலவு பொழுதில் தேவ கானத்தை அவர் மாணவர் இசைக்க அவருக்கு இணையாய் ஓர் ஆசனத்தில் எங்களை அமரவைத்தார்.

அது 2013 குருபூர்ணிமா நானும் எனக்குள் ஒருவருமாய் ஒரே நாற்காலியில் அமர்ந்தோம், அவர் திருவடிகளை ஸ்பரிசித்தோம். நிழல்படத்தில் கூட அவர் கண்களை நேரே பார்க்க திராணியற்ற என்னை நிஜத்தில் அவர் அருகே இருத்தியது அவர் கருணை. என் வயிற்றில் அசைவுகளுடன் அவரை வணங்கிகொண்டிருந்த என் குழந்தையின் பாக்கியம்.

இப்போது 2014, குரு பூர்ணிமா. எனக்கும் அவருக்கும் சூட்சுமமாய் எத்தனை கோடி தூரமோ! ஆனால் பூகோலம் சொல்லும் 450 கி.மீ தூரத்தை எப்படி கடப்பது. கண்ணீரின் கோடுகளால் அளந்து கடந்தேன். பால் வாங்க மட்டுமே செல்வதாய் அந்த அடுமனை வரை நினைத்திருந்தோம். சொற்ப சில்லறையை எண்ணி பார்த்து திரும்புகையில் கழுத்தில் தேவியந்திரத்துடன் நெற்றி நிறைய திருநீற்று திலகத்துடன் நின்றிருந்தார் உஷாக்கா. அவர் உஷாக்கா என்பதை கூட இதை எழுதுவதற்காகவே சில நொடிகள் முன்பு தான் கேட்டு தெரிந்து கொண்டேன்.

என்னையும் மீறி அவரிடம் கேட்ட முதல் கேள்வி.

நீங்க ஈஷா வாலண்டியரா..

ஆமாக்கா.

எங்க இருக்கீங்க.

இதே அபார்ட்மெண்டல தான். ஏன் நீங்களும் ஈஷா வாலண்டிரியா.

எஸ்.

அப்ப வீட்டுக்கு வாங்க தேவி குடி வச்சுருக்கோம். சற்குரு யந்தரம் வச்சுருக்கோம். நாளை குருபூர்ணிமா, ஆஸ்ரம்லயிருந்து இவினிங் 6 0 க்ளாக் தேவிக்கு ஆராத்தியும், குருபூஜையும் செய்ய சொல்லியிருக்காங்க. யூ கேன் ஆல்சோ ஜாயின்.

என்று அவர் சொல்லி முடிக்கும் முன் கொற்றவை உஷாக்காவின் 1 வயது மகன் யோகேந்த்ரா வைத்திருந்த பிஸ்கட்டை தன்வசப்படுத்தியிருந்தாள்.

பால் மட்டுமே வாங்கிவருவதாய் உத்தேசம் எங்களுக்கு. திரும்பி நடந்த திசை நெடுகிலும் பால் பாக்கெட்டுடன், கண்கள் மறைய நீரும், மனம் நிறைய ஓர் நிகழ்விற்கான அழைப்பையும் ஏந்தி சென்றோம்.

உஷாக்காவின் ப்ளாட் A-405. இது அடையாளம் மட்டுமே. நுழைந்தபின் வெள்ளிங்கிரி அடிவாரத்தின் அசல் சாயல் அந்த இல்லத்திற்க்கு.  அவர்கள் இல்லத்தில் அனைவரும் வெள்ளாடை தரித்திருந்தனர் யோகேந்த்ரா உட்பட.  அங்கு அதிர்ந்த சவுண்ட்ஸ் ஆப் ஈஷா அதிர்வுகளில் எனக்கு முன்பே வந்தமர்ந்திருந்த சில தியான அன்பர்கள் ஆற்றலின் உச்சத்தை எட்டி கொண்டிருந்தார்கள்.

தியானத்தில் மூழ்கியிருந்த அன்பர்களின் கைகடிகாரம், அவர் சட்டைபையில் வைத்திருந்த பேனா, சற்குரு படம் அருகே குருபூஜைக்காக தயாராக வைத்திருந்த வாழைபழம், நெய்வேதியம் என ஒவ்வொன்றாய் தேடி நான்கு கால்களில் அளந்து அளந்து கொய்து கொண்டிருந்தாள் கொற்றவை.

அக்கா, குழந்தை ரொம்ப ஆக்டிவா இருக்கு ஆனா இவங்கள வைச்சுகிட்டு உங்களால சைலன்ஸ்ல உக்கார முடியுமா....? என்றதும் புரிந்து கொண்டேன்.

சற்குருவுக்கு வாங்கியிருந்த பழங்களிலிருந்து ஓர் மாதுளையை எடுத்து அவள் கையில் கொடுத்து சகல மரியாதையுடன் அவளை அவள் தந்தையுடன் வெளியே அனுப்பிய பின் துவங்கியது குருபூஜை.

எந்த அசைவுகளும் இல்லை. காத்திருந்த நொடி கனிந்ததற்க்கான எந்த சலனமும் இல்லை. ஐம்புலனும் வஞ்சனை செய்ய விலங்கு மனத்தால் ஓர் மெளனத்தை நிகழ்த்திகொண்டிருந்த வேளையில் சற்குருவின் குரலில் மென்மையாய் மிக மென்மையாய், மென்மையினுள் ஓர்  பிரளயமாய் ஓங்கி ஒலித்தது பிரம்மானந்த ஸ்வரூப்பா. ஆயுளும் போதாது, ஆன்மாவின் ஆனந்தமும் தீராது அந்த அனுபவத்தை சொல்லி முடிக்க.

உஷாக்காவிற்க்கு தேங்க்யூ என்றேன். உங்களுக்கு இன்னொரு கிப்ட்டும் இருக்கு எவ்ரி மன்டே வி டூ குருபூஜா நீங்க வாராவாரம் வரணும் பட் கொற்றவையை யார்கிட்டயாவது விட்டுட்டு வாங்க என்ற விளையாட்டாய் சொல்லி சிரித்தார். 

புளியோதரையும், சுண்டலும் கைகளை நிறைத்திருக்க எங்கள் இல்லம் நுழைந்தோம். சற்குரு புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் புன்னகைக்கும் கொற்றவை இன்று முகத்தை திருப்பி கொண்டாள்.....வெளியே அனுப்பிய கோபம் இருக்காதா என்ன? பிக்காஸ் ஷீ இஸ் சென்ஸிடிவ் டூடூடூடு !!!!